லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

  1. ஹஸ்தாமலகர்

அந்தத் தாய் அந்த ஐந்து வயது குழந்தையைக் கூட்டி வந்தாள்.
மிகவும் ஆனந்தமான அமைதியான முகம். அதில் ஒரு புன்முறுவலும் இருந்தது. பார்வை எங்கோ இருந்தது. அது அவன் உள் முகமாக ஒடுங்கியிருந்ததை உறுதி செய்தது.

அவனுடன் அச்சு அசலாக அவனைப் போல் ஒரு குழந்தையும் வந்திருந்தான். கைக்கு ஒன்றாக இரண்டு பேரைப் பிடித்துக் கூட்டி வந்திருந்தாள்.

அந்தக் குழந்தை கையிலிருந்த பேட்டரி காரின் மேல் ஒரு கண்ணுமாய் அம்மாவின் மேல் ஒரு கண்ணுமாயிருந்தான்.

“இவுங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ் மேடம். ஒண்ணு நல்லா இருக்கு. ஒண்ணு சரியில்ல மேடம்’ என்றாள்.

நாம் எதை சரி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, சொல்லிக் கொண்டிருக்கிறோமோ (நம்மையும் சேர்த்து) அது உண்மையில் சரியல்ல. எது சரியல்ல என்று அடையாளம் காண்கிறோமோ அது உண்மையில்
சரியானதே!

“என்ன பிரச்சினை?” என்றேன்.

இவனப் பாருங்க. விளையாட்டுச் சாமான் குடுத்தா விளையாடுறான். தனக்கு வேணுங்கறதக் கேட்டு வாங்கிக்கறான். எல்லார் கூடயும் சேர்ந்து இருக்கான். இவன் வயசுதான இவனும். ஆன மட்டும் விளையாடப் பழக்கறோம். யாருமே வேணாம்னு ஒதுங்கிப் போறான் . . ஒரு வார்த்தை கூட வரல . . எந்த சாமானயும் கைல
வாங்குறதுல்ல. கைல திணிச்சாலும் அத கொஞ்ச நேரத்துல கீழ போட்டுடுவான்.

எதுலயும் ஆர்வம் இல்ல. இவுங்க அப்பா கிட்ட விட்டுட்டு கடைக்குப் போயிட்டு வருவேன். அப்போ கூட நான் வர கொஞ்சம் லேட் ஆனாக் கூட இவன் தவிச்சுப் போயிடுவான் என்று காரை ஓட விட்டுக் கொண்டிருந்த குழந்தையைக் காண்பித்துச் சொன்னாள்.
ஆனா, இவன் தேடவே மாட்டான். இவனுக்கு ஒரு பொம்மையோ காரோ ஒரு வாரத்துக்கு மேல போர் அடிச்சுடும். புதுசு புதுசா வாங்கணும். இவன் பசிக்குக் கூட கேட்கறது இல்ல நானா பாத்து குடுத்தாத்தான். இந்த மாதிரி பார்த்ததே இல்ல மேடம் எங்க குடும்பத்துல” என்று மூச்சு விடாமல் முடித்தாள் அவள்.
அத்தனையும் தனைப் பற்றித்தான் அம்மா அடுக்குகிறாள் என்ற உணர்வே இல்லாமல், பர வெளியில் பிரம்மத்துடன் லயித்துக் கிடந்த அந்தக் குழந்தையை ஹஸ்தாமலகருடன் ஒப்பிடாமல் என்னால் இருக்க முடியவில்லை.

யார் இந்த ஹஸ்தாமலகர்?

ஆதி சங்கரர் காசியிலிருந்து கிளம்பி தென் நாட்டை நோக்கி பயணித்து வந்து கொண்டிருந்தார். அப்போது, கர்நாடகாவில் உடுப்பி அருகே ஸ்ரீபலி எனும் ஊருக்கு வந்தார். அங்கு அவர் தங்கியிருப்பதைக் கேட்டு திரள் ரளாக மக்கள் அவரை தரிசிக்க வந்தனர். அவ்வூரில் பிரபாகர் என்பவர் வசித்து வந்தார். அவர் வேதங்களை நன்கு கற்று நெறி தவறாமல் வாழ்ந்து வந்தார்.

ஆனால், அவருடைய ஒரே மகன் இயல்பாக இல்லை. பதிமூன்று வயதாகியும் பேசாமலும் மந்த புத்தி போலவும் காணப் பட்டான். அது மட்டுமல்ல உணர்ச்சிகளை வெளிப் படுத்தாமல், கல்வி கற்பதில் நாட்டமில்லாமல், விளையாடுவதில் நாட்டமில்லாமல் உலகத்தாரொடு ஒட்டாமல் இருந்தான்.

பார்த்த மருத்துவர்களும் அவனுக்கு எந்த விதக் கோளாறும் இல்லை என்று சொல்லி விட்டனர்.

இந்நிலையில், ஆதி சங்கரரின் வருகையைக் கேள்விப் பட்டு, மகனை அவரிடம் அழைத்து வந்தார் பிரபாகரன்.

ஆதி சங்கரரை நமஸ்கரித்து எழுந்தார். மகனையும் நமஸ்கரிக்கச் செய்தார். விழுந்தவனோ எழுந்திருக்கவே இல்லை. அதே நிலையில் கிடந்தான். அவனை எழுப்பி உட்கார்த்தினார்.

பின்,”பிறந்ததிலிருந்தே இப்படித்தான். ஜடமாய் இருக்கிறான். எந்த ஒரு வெளித் தொடர்பும் இல்லை. இது இவனது கடைசி ஜென்மமா? இல்லை ஏதாவது நோயா?” தாங்கள்தான் சொல்ல வேண்டும்” என்று
கேட்டார்.

ஆசார்யாரின் முழு கவனமும் அந்த அற்புத பாலகனிடமே இருந்தது. அவனோ வேறெங்கோ ஆகாயத்தைப் பார்த்தவாறு இருந்தான்.

அவனது முகம் பிரசன்னமாக இருந்தது. முகத்தில் அவ்வப்போது ஒரு புன் முறுவல் இருந்தது.

அகண்டமான ஆத்மாவின் ஒளி அவன் கண்களில் ஜொலித்தது. அவன் தன்னுணர்வில் நிலையுற்று இருக்கிறான் என்று அவர் கண்டார்.

அவர், அந்தக் குழந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “ஹே குழந்தாய், நீ யாருடையவன்? எங்கிருந்து வருகிறாய்? உன்னைப் பார்த்தால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது? நீ யார் என்று சொல்வாயா?” என்று கேட்டார்.

அருகில், அவனது அப்பாவோ, வாயில் ஒரு வார்த்தையும் வரவில்லையே இது வரை. ஆசாரியாரோ இவ்வளவு கேள்விகளை முன் வைக்கிறாரே!” என்று எண்ணியபடி பணிவுடன் நின்றிருந்தார்.

அப்பாலகனோ கண்ணிமைக்காமல் இருந்தான். மனதிற்கு அப்பால் சென்று இருப்புமட்டுமான ‘ஸத்’ தில் தன்னிருப்பில் ஓயாமல் ஒடுங்கிய அந்த யோகியின் மெளனம் ஆழமான அமைதியைப் பரவச்
செய்து கொண்டிருந்தது.

ஆசார்யாரின் கேள்விகள் மெதுவாக மனதின் அடித்தளத்தை அடைந்தன.
முதல் முதலாக, திரு வாயைத் திறந்தான். இது நாள் வரை மௌனமாய் பிரம்ம தத்துவத்தை தான் மட்டும் ரசித்தவன், அதனை வாக்தேவதையின் உதவியுடன் மடை திறந்த வெள்ளமாய் 13 ஸ்லோகங்களில்
விளக்கினான்.

அதுவே ஹஸ்தாமலகீயம்” ஆகும். அமலகம் என்றால் நெல்லிக்காய். ஹஸ்தம் என்றால் உள்ளங்கை. உள்ளங்கை நெல்லிக்கனி போல ஆத்ம தத்துவத்தைக் கண்டவன் என்பதால் “ஹஸ்தாமலகன்’ என்று ஆசார்யாரால் அழைக்கப் பட்டவன்.

அந்த பால யோகி சொன்ன ஸ்லோகத்தின் சாரம் என்ன?

நான் மனிதன், தேவன், யஷன், ப்ராஹ்மணன், ஷத்ரியன், வைச்யன், சதுர்த்தன், க்ருஹஸ்தன், வானப்ரஸ்தன், ப்ரம்மச்சாரி, சன்யாசி போன்ற எவைகளுமல்ல. இவைகளெல்லாம் இந்த உடலின் பெயர்களே!

தூய உணர்வே வடிவான ஆத்மாவே நான்!

எவன், மனம், புத்தி மற்றும் புலனுறுப்புகளுடன் சிறிதும் கலந்து ஒன்று படாமல் இருப்பவனோ, எட்ட முடியாதாவனோ புலனுறுப்புகளுக்கு அந்த அழிவற்றவனும், நான் என்னும் உணர்வின் அனுபவத்தில் எப்பொழுதும் சித்தமாயுள்ளவனுமான அந்த ஆத்மாவே நான்! “ என்று முடித்தவனை, ஆசார்யார், இவன் உலகத்தோடு ஒட்ட முடியாது. நான் கூட்டிச் செல்கிறேன்” என்று சொன்னார்.

அவனது தந்தையும் அதிசயித்துப் பிள்ளையை அனுப்பினார். அவன் ஆதி சங்கரரின் மிக முக்கிய நான்கு சிஷ்யர்களுள் ஒருவர்.

எல்லோரும் குருவைத் தேடி வருவார்கள். இது குருவே கேட்டுப் பெற்ற சிஷ்யன்.

குருவிடம் வந்து கற்று ஞானம் பெறுவார்கள். இதுவோ பிஞ்சிலேயே பழுத்து முதிர்ந்து பிறகு குருவை அடைந்தது.