மா. தக்ஷிணாமூர்த்தி/திவ்யதர்சனம்

முன்னுரை

எந்தக் கவிஞனும் இலக்கணத்தையொட்டிக் கவிதை புனைந்ததில்லை. இலக்கணம்தான் கவிதையை ஒட்டி உருவாகியிருக்கிறது. கவிதையை அறிய முயலுவது இலக்கணம். கவிதை கடவுன். இலக்கணம் பூசாரி.
தன்னையே அர்ப்பணிக்கும் லயத்தில்தான் கவிதை பிறக்கிறது. அந்த லயம்தான் கவிதை. கவிஞனே ஒரு கவிதை. அர்ப்பணித்தல் என்றால் ‘இதற்காக’ அல்லது ‘அதற்காக’ அர்ப்பணித்தல் அல்ல. தன்னில் உள்ள முழுமைக்குத் தன்னையே அர்ப்பணித்தல்,

கவிதையில் காதல், தத்துவம், சிந்தனை, சிரிப்பு, புரட்சி, அரசியல் எல்லாம் இருக்கலாம். ஆனால் காதலுக்காக, தத்துவத்திற்காக, சிந்தனைக்காக, சிரிப்பிற்காக, புரட்சிக்காக அல்லது அரசியலுக்காக எழுதுவது கவிதையல்ல. எனவே தான் பாரதி கவிஞனும் பாரதிதாசன் புரட்சிவாதியும் ஆகிவிடுகின்றனர். ‘நான் ஒரு காதலன்’, ‘நான் ஒரு சிந்தனையாளன்’, ‘நான் ஒரு புரட்சிவாதி’, ‘மக்களை மகிழ்விக்க எழுதுகிறேன்’ என்பன போன்ற எண்ணங்கள் மட்டுமல்ல, ‘நான் ஒரு கவிஞன்’ என்ற எண்ணமும் கூட முழுமையான அர்ப்பணித்தலைத் தடை செய் கிறது. எனவே கவிதை பிறப்பதில்லை. சிந்தனைக்கப்பாற்பட்ட நிலையில்தான் கவிதை பிறக்கிறது. அறிவிற்கு அப்பாற்பட்ட, ஆனால் அறிவிற்கடிப்படையான, ஒரு நிலை அது.
இதைச் சொல்ல வேண்டும்’ என்ற எண்ணத்தோடு எழுதுவது கட்டுரை – யாப்பிலே எழுதி னாலும் சரி, யாப்பை உடைத்து எழுதினாலும் சரி. என்ன சொல்லப்பட்டிருக்கிறது, எப்படிச் சொல் லப்பட்டிருக்கிறது என்ற இரு கேள்விகளையும்விட உயிர்த்துடிப்பிருக்கிறதா
என்பதே முதன்மையான கேள்வி. எண்ணங்கள் அழியும்போதுதான் இந்த இந்த உயிர்த்துடிப்பு (கவித்வம்) பிறக்கிறது.

புரியாமலிருப்பதுதான் புதுக்கவிதை என்ற தப்பெண்ணம் புதுக்கவிதையின் ஆதரவாளர்களிடத்திலும் எதிராளிகளிடத்திலும் இருக்கிறது.
கவிதை புரியாமலிருக்கலாம். ஆனால் புரியாமலிருப்பதற்காகவே எழுதுவது கவிதையல்ல. கவிதை அறிவின் நுட்பத்தைச் சோதனை செய்யும் கண்ணாமூச்சி விளையாட்டல்ல.

கவிதை புனைவது மட்டுமல்ல, சுவைப்பதுவும் தன்னையே அர்ப்பணித்தல்தான். கவிதையில் லயித்துக் கவிஞனுடன் ஒன்றி நிற்கும்போதுதான் கவிதையைப் பூரணமாக உணர முடிகிறது. அறிவு வேண்டாமென்பதல்ல இதன் பொருள். ஆழ்ந்த அறிவுண்டாகிப் பின் அந்த அறிவையும் கடந்து நிற்கும் லயத்தில்தான் கவிதையுணர்ச்சி பிறக் கிறது – தத்துவங்களைக் கற்றுப் பின் அவற்றை யுதறிச் சமாதியில் லயிப்பதுபோல.

  1. தட்டெழுத்து

தையலாய்
மையல் கொண்டு நீ
தடதடவெனத்
தட்டச்சுப்பொறியில் தடவிட,
பாய்ந்தன எழுத்தாணிகள்
கறுத்த ரிப்பனின் இடையைத் தாக்க.
பிழைகள் தழைத்தோங்க
நீண்டது தாள்.
மாதவிடாய் நெருங்க,
அச்சம் இடுப்பைக் கிள்ள,
கைகள் நடுங்கிற்றோ?
பிழைத்ததோ உன் கணக்கு?
காற்புள்ளி அரைப்புள்ளியாக,
முற்றுப்புள்ளி மறைய.
வேண்டாவெழுத்துயிர்க் கொண்டதோ
உன் விரல் நுனியில்?