
1) மனசு
வாசலிலிட்ட கோலத்தின்
அழகில் மிளிர்கிறது
விரல் வழி வழிந்த
வெள்ளை மனசு!
2) மின்னல்
திக்கற்ற பயணம்!
உடன் ஒரு ஆட்டுக்குட்டி!
திடீரென
சோர்ந்த நடை
வேகம் கொண்டது!
தூரத்தில் சிரித்தது
ஒரு நட்சத்திரம்!
வெட்டிச் சென்றது
மின்னல்!
துள்ளி குதித்தது
ஆட்டுக்குட்டி!
3) கொக்கு
மனதின்
சாகச வேளியில்
ஒரு வண்ணக் கலவை
தன் பூடகப் பின்னலில்
மானசீக மொழியின்
மந்திரச் சொற்களினூடே
பல் நூறு அர்த்தங்களின்
அர்த்தங்களை
அமைதியாய் தேடியபடி
நீள்கிறது ஒரு ஓவியம்!
ஓவியத்தின்
புரிநிலை விளிம்புகளில்
வாழ்வின் ருசிகளை
கொத்திச் சொல்ல
ஒற்றைக் காலில்
தவமிருக்கிறது
ஒரு கொக்கு!
துய்க்கும் ருசிகளில்
தோய்ந்த மனதின்
கரைகளில் நீள்கிறது
கொக்கின் தவம்!
