செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

  1. ஒரு விபத்து

தினமும் எம்பெருமான் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமியின் தரிசனம் செய்வது ஸ்ரீ பாரதியாரின் வழக்கம். கோவிலுக்குச் சென்று தெய்வ வழிபாடு செய்வதில் அவருக்கு எப்போதும் ஆர்வம் அதிகம்.
ஒருநாள் திடீரென்று கோவில் யானைக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. நான்கு கால்களிலும் சங்கிலியிட்டுப் பிணைத்திருந்தார்கள். யானை மதம் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அந்த யானைக்குத் தேங்காயும், பழமும் நாள் தோறும் ஸ்ரீ பாரதியார் அளிப்பது வழக்கம். அன்றும் அங்கு சென்றதும், ஜனங்கள் யாவரும் நடுங்கினார்கள். யானையைச் சுற்றி இரும்புக் கிராதி போட்டிருந்தது. கையில் பழத்துடன் யானையினருகில் போய் பிரஹலாதனைப்போல் எதிரில் நின்று கண்ணழகை ரஸிக்கலானார். மதங் கொண்ட யானைக்கு இவர் யாரென்று தெரியவில்லையோ என்னமோ? கொம்பினால் ஒரு சிலுப்பல்தான். ஸ்ரீ பாரதியாருக்கு நல்ல காயம். அப்படியே அதன் நான்கு கால்களுக்குக்கிடையில் வேரற்ற மரம்போல் சாய்ந்து கிடந்தார்.
ஜனக்கூட்டத்திற்கு என்னமோ குறைவில்லை. வேடிக்கை பார்த்தார்கள் என்ன குறை சொல்வதற்குமில்லை. யார் யானையருகில் சென்று இவரைத் தூக்குவது? எல்லோரும் என்ன செய்வதென்று அறியாமல் தவித்தார்கள்.

தினமும் பழங்கொடுத்து வரும் அன்பனுக்கு இவ்விதம் அபராதம் செய்துவிட்டோமே என்று எண்ணிப் பச்சாதாப் பட்டதுபோல் அசையாமல் ஸ்தம்பித்து நின்றுவிட்டது அம்மத யானை.
நண்பர் ஸ்ரீ குவளைக் கண்ணனுக்கு இவ்விஷயம் எப்படியோ எட்டிவிட்டது. ஓடோடியும் வந்தார். யோசிப்ப தற்கு அவர் மனம் இடங் கொடுக்கவில்லை. வேலியை ஒரே தாண்டல். ரத்தப் பிரவாகத்தில் கிடந்த ஸ்ரீ பாரதியாரை, குழந்தையை வாரி எடுப்பது போல தூக்கித் தோளில் சாத்திக் கொண்டார். கூடியிருந்த ஜனங்கள் சிறிது உதவி செய்ய, வேலிக்கு வெளியில் கொண்டு வந்து சேர்த்தார். இதை எழுதுவதற்கு இவ்வளவு நேரமாயிற்றே தவிர, கண் மூடிக் கண் திறப்பதற்குள் இவ்வளவும் நடத்தனவாம்.
ஸ்ரீனிவாஸாச்சாரியாரும் இன்னும் சிலரும் சேர்ந்து ஒரு மோட்டாரில் வைத்து ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள். காயமும் குணமாயிற்று.

பாரதியார் யானையினிடத்தில் சிறிதேனும் கோபங் கொள்ளவில்லை. “இன்னாரென்று தெரியாமல் தள்ளி விட்டது. தெரிந்திருந்தால் தள்ளியிருக்காது. அப்படித் துன்புறுத்தும் எண்ணமிருந்தால் நான் கீழே விழுந்ததும் துதிக்கையால் தூக்கி எறிந்திருக்காதா? அல்லது கால்களினால் துவைத்திராதா? அப்படியே நின்றதன் அர்த்தம் என்ன? என்னிடம் அதற்குள்ள அன்பே காரணம்” என்று உள்ளம் குளிர்ந்தார்.