தொகுப்பு : நாடோடி/1000 நீதி கதைகள்

குற்றவாளி

திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவன் கூண்டில் நின்று கொண்டிருந்தான். வக்கீல் அவனுக்காக வாதாடிக் கொண்டிருந்தார். “தரும துரையவர்களே! என் கட்சிக் காரன் திருட வேண்டும் என்று பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகவில்லை. கம்பி இல்லாத ஜன்னல் கதவு திறந்து கிடந்தது. என் கட்சிக்காரன் கையை உள்ளே நீட்டினான். திருடப்பட்ட சாமான் கையில் படவே, அதை எடுத்துக் கொண்டு சென்றான். அவன் கை செய்த குற்றத்திற்கு அவன் என்ன செய்வான்?” என்றார்.

இந்த சாமர்த்தியமான பேச்சைக் கேட்டு நியாயாதிபதி ஏமாறுகிறவரா என்ன? ஆகவே, அவர் பின்வருமாறு தீர்ப்பளித்தார். ‘குற்றவாளி ஒரு குற்றமும் செய்ய வில்லையென்றும், அவன் கைதான் குற்றம் செய்ததென்றும் ஒப்புக்கொள்கிறான். ஆகவே திருட்டுக் குற்றம் செய்த அவனுடைய வலது கை ஒரு வருஷம் சிறைச்சாலை யில் இருக்க வேண்டும் என்று தண்டனை விதிக்கிறேன். கையை பின் தொடர்ந்து குற்றவாளியும் சிறைக்கு செல்வதோ, செல்லாததோ அவன் இஷ்டம்’ என்றார்.

உடனே குற்றவாளி ரப்பராலான தன் வலது கையைக் கோர்ட்டில் கழற்றி வைத்துவிட்டு வெளியே சென்றான்!