
ஓம் சாந்தி
அந்த ஸமயம் ‘கிலாபத்’ பிரசாரத்திற்காக அலி சகோதர்கள் சென்னைக்கு வந்திருந்தார்கள். மகாத்மா காந்திஜியும் வந்திருந்தார். பாரதியாருக்கு காந்திஜியைப் பார்த்துப் பேச சந்தர்ப்பம் ஏற்பட்டது. ‘ஸத்யாக்கிரஹ இயக்கம்’, ‘ஒத்துழையாமை’ என்பன போன்ற பல விஷயங்கள் பற்றிச் சர்ச்சை செய்தார். கடைசியாக ‘வாழ்க நீ எம்மான்’ என்ற பாட்டை முழுதும் பாடிவிட்டு வீடு வந்து சேர்ந்தார். அலி சகோதர்களின் தீரமும், வீரமும், அவர்களது தேச ஸேவையும் ஸ்ரீ பாரதியாருக்கு மகிழ்ச்சியளித்தன.
1920-ம் ஆண்டு முழுவதும் பாரதியாருக்குச் சற்று சந்தோஷமாகவே கழிந்தது. ஆனால் அதற்கு முன் எவ்வளவோ காலம் பொறுத்தற்கரிய கஷ்டங்களில் அடிப்பட்டதில் அவரது உடம்பு நாளுக்குநாள் இளைத்துக் கொண்டே வந்தது. மனம் உறுதி குன்றவில்லையே தவிர, சரீரத்தில் சிரமம் ஏற்படத் தொடங்கி விட்டது. பகவானை பூஜிப்பதிலேயே ஈடுபடலானார். எப்போதும் நமோ நாராயணாய’ என்று உச்சரித்துக் கொண்டே காலங் கழித்தார்.
பிரஹ்லாதனுக்கும் இரணியனுக்கும் சம்வாதமாக ஐந்து ஆறு அடிகள் பாடி, அதை அடிக்கடி சொல்லிக் கொண்டிருந் தார். அந்த அடிகளை அவர் பாடக் கேட்டவர்கள் மயிர் சிலிர்த்து ஆனந்த பரவசமடைந்தார்கள்.
“இறைவனது திருவருள் பெற்றவர்களை இளமையிலேயே அவர் அழைத்துக் கொள்கிறார்” என்னும் மொழி இவர் விஷயத்தில் பொய்த்துப் போகவில்லை. 1921-ம் வருஷம் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி பாரதியார் இந்தத் துன்ப உலகை நீத்து இன்பம் நிறைந்த விண்ணுலகமெய்தினார். பாரத மாதா தனது உண்மைப் புதல்வனை இழந்து பரிதவித்தாள்.
இவ்வுலகில் வாழ்ந்த போது பாரதியார் எத்தனையோ துன்பங்களை அநுபவித்தார்; எவ்வளவோ கஷ்டங்களுக்கு உள்ளானார். ஆனால், தாய் நாட்டிடம் அவர் கொண்டிருந்த அளவிலாத அன்பு மட்டும் கணமும் சலிக்கவில்லை. தமிழையும் தமிழர்களையும் அவர் ஒரு கணமும் மறக்கவில்லை. அல்லும் பகலும் அனவரதமும் அவருடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்த மனோரதம் இதுதான்:
“வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு!”
(மகாகவி பாரதியின் துணைவியார் செல்லம்மா பாரதி எழுதிய “பாரதியார் சரித்திரம்” இத்துடன் முடிவடைந்தது.)
