கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/ஆரத்தி


ஆசிரியர் கலைமகள்………………..

காசிக்குச் சென்று வந்த எனது நண்பர் காசியில் நடைபெறும் ஆரத்திப் பற்றி மிகவும் சிறப்பாக எடுத்துரைத்தார்.உலகப் புகழ்பெற்ற வாரணாசி கங்கா ஆரத்தி தினமும் மாலையில் தசாஷ்வமேத் காட்டில் ஏழு பேர் கொண்ட ஆடவர் குழுவால் நடத்தப்படுகிறது.

தீபத்தை உயர்த்திப்பிடித்து ஆரத்தி மூலம் கங்கா தேவிக்கு அக்னி பூஜை செய்யப்படுகிறது. இரு கரைகளிலும் நின்ற படியும் படகுகளில் நின்றபடியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி மாலை வேளையில் இந்த ஆரத்தி நிகழ்வைக் கண்டு மகிழ்கிறார்கள்.

திருமண வைபவங்கள் மகான்களின் வருகை சுவாமி புறப்பாடு மற்றும் வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளின் போதும் ஆரத்தி காட்டுவது உண்டு.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் நீர் நிரப்பி, மஞ்சள் அரைத்துச் சேர்த்து, அதில் சிறிது சுண்ணாம்பும் சேர்த்துக் கலக்க வேண்டும். மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்த நீர் சிவப்பு நிறமாக மாறும். பின்னர் தாம்பாளத்தின் நடுவில் கற்பூரத்தை ஏற்றி வைத்து மூன்று முறை சுற்றி பின்னர் வலது புறமாக விடுவதையே ஆரத்தி எடுப்பது என்று கூறுகிறோம்.

மஞ்சள் ஓர் சிறந்த கிருமிநாசினி என்பது நாம் அறிந்தது தான். சுண்ணாம்புக்கும் இந்தத் திறன் உண்டு. இந்த கிருமிநாசினி நீரில் சூடமேற்றி உடலைச் சுற்றுவதால், உடல் மேல் அண்டியிருக்கும் கிருமிகள் அழிந்துவிடும் என்கிற நம்பிக்கையும் உண்டு.

வீட்டில் நடைபெறும் சுப காரியங்களின் போது மாமி அல்லது அத்தை உறவு முறையைச் சேர்ந்த பெரியவர்கள் ஆரத்தி எடுப்பார்கள். ஆரத்தி தட்டில் வசதிக்கு ஏற்ப பணத்தையும் போடுவார்கள்.

ஆரத்தி எடுத்து முடிந்ததும் கொஞ்சம் ஆரத்தி எடுத்து யாரைச் சுற்றுகிறோமோ அவருடைய கன்னத்தில் திருஷ்டிப் பொட்டும் வைப்பது உண்டு! ஆரம்+தீ = ஆரத்தி எனக் கற்பித்துக் கொண்டால் ஆரம் வட்டமான தாம்பாளத்தையும் தீ என்பது கற்பூரத்தையும் குறிப்பதாக பொருள் கொள்ளலாம்.

சமஸ்கிருதத்தில் ‘ஆரத்திக்யம்’ என்கிற சொல் ஆரத்தியைக் குறிக்கின்றது. மேலும் இது ‘மகாநீராஞ்சனா’ எனவும் அழைக்கப்படுகின்றது.

ஆரத்தி எடுப்பதில் பஞ்ச பூதங்களும் அடங்கியுள்ளன. பூமி, வெப்பம், நீர், காற்று, மற்றும் ஆகாயம் ஆகியவை பஞ்சபூதங்களைக் குறிக்கிறது. ஆரத்தி வழிபாட்டில் “பூமி”யில் நின்று கொண்டு “கற்பூரத்தை” “தண்ணீர்” நிரம்பிய பாத்திரத்தில் இட்டு “வெட்டவெளி”யில் “ஆகாயத்தை”ப் பார்த்துச் சுற்றுகிறோம் என்பதிலிருந்து பஞ்சபூதத் தன்மையுடன் ஆரத்தியையும் இணைத்துப் பார்த்துக் கொள்ளலாம்!!