மோகன் ஜி/காத்திருப்பு

பூமுடித்த பொக்கிஷமே!
பூத்தொடுத்து பொற்சிலையாய்
காத்திருப்பும் யாருக்கென சித்தினியே?

சீவிமுடித்து சிங்காரித்து
கோவிலுக்கே கூடிச்செல்ல
நாடும்நல்ல தோழியர்க்கா?

பேருவகைப் பெட்டகமாய்
தெருப்புழுதி உடற்கப்ப
ஆடச்சென்ற பிள்ளைக்கா?

கோலமயிலே! குலவிளக்கேயென
சாலப்புகழ்ந்து மடிசாய்த்தே
காதலுரைக்கும் கணவனுக்கா?

நோன்பிருந்து நைந்துருகி
பைந்தமிழால் பாடித்துதித்து
பக்திசெய்த பரமனுக்கா?

பெண்மையினைப் போற்றியிங்கு
கண்ணியத்தில் உயர்த்திநிதம்
சீர்காணுமொரு காலத்துக்கா?

மகளொருத்தி இரவினிலும்
திகைப்பின்றி நடமாடும்
காந்திசொன்ன சமூகத்திற்கா?

எதற்கென காத்திருப்பும் சித்தினியே?

(சித்திரம்: அன்பு நண்பன் தேவா)