வ.சா.நாகராஜன்/அப்பாவைத் தேடி…

மார்ச்சு மாதம் முழுவதும் நாள் தவறாமல் அமர்க்களம். ஒரு நாள் கல்லூரி தினம், ஒரு நாள் இலக்கிய மன்றம், ஒரு நாள் ஹாஸ்டல் தினம், ஒரு நாள் கடைசி வருஷ மாணவிகளுக்கு வழியனுப்பு உபசாரம், ஒரு நாள் விளையாட்டு தினம் என்று கிட்டத்தட்ட இருபது நாட்களுக்கு மேலாகப் படிப்பை மூட்டை கட்டி வைத்துவிட்ட மாணவிகள் அத்தனை பேரும், கொண்டாட்டங்கள் முடிவடைந்தவுடன் ஏதோ கனவிலிருந்து விழித்து எழுந்தது போல் முழுமூச்சுடன் மீண்டும் படிப்பில் ஆழ்ந்து விட்டார்கள். ஏப்ரல் இரண்டாம் தேதியிலிருந்து பரீட்சை ஆரம்பம்.
கொண்டாட்டங்களின் கடைசி நாளான இன்று நாடக விழா முடிந்து, இரவு ஹாஸ்டல் அறைக்குத் திரும்பியதும் அலுப்புடன் படுக்கையில் சாய்கிறேன். அரை மணி நேரம் கழித்து உள்ளே வந்த தயா, வந்ததும் வராததுமாக மேஜையடி விளக்கைப் போட்டுக் கொண்டு படிக்க ஆரம்பிக்கிறாள். எப்படி அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடிகிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நாடகக் காட்சிகளிலிருந்தும், முதல் நாள் விருந்து வைபவங்களிலிருந்தும் என் மனம் இன்னும் விடுபடவில்லை. அவற்றைப் பற்றி மறந்து மனத்தைப் படிப்பில் ஈடுபடுத்தப் பயமாக இருக்கிறது. படித்து முடித்தால் பரீட்சைகள் வரும். பரீட்சைகள் முடிந்தால் ரிசல்ட் வரும். ரிசல்ட் வந்தால் என் பெயருக்குப் பின்னால் இரண்டு எழுத்துக்கள் வரும். அதன் பின்னர்… அதன் பின்னர்…?
தயாவோ ரிசல்ட் வரும் நாளை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறாள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அவள் இந்தக் கடைசி வருடப் பரீட்சையில் பாஸாகாமல் இருந்து விடமுடியாது. நிச்சயம் பாஸ் பண்ணியே ஆகவேண்டும்! காரணம்… காரணம்… அவள் கல்யாணம் நடைபெறப் பரீட்சைகள் தடையாக இருக்கின்றன. பரீட்சைகள் முடிய வேண்டியதுதான். அநேகமாக ரிஸல்ட் வருவதற்குள்ளாகவே அவளுக்குக் கல்யாணம் நடந்து விடும்.
தயா மாத்திரமா…? என்னுடன் படிக்கும் இந்த முப்பத்தைந்து மாணவிகளுக்கும் வாழ்க்கையில் ஏதேதோ லட்சியங்கள், ஏதேதோ பற்றுக்கோடுகள் இருக்கின்றன. தயாவுக்குக் கல்யாணம். அடுத்த அறை பானு கல்லூரி விழாக்களில் கூடப் பங்கேற்காமல் மார்ச் மாத ஆரம்பத்திலிருந்தே படிப்பில் ஆழ்ந்து போய் விட்டாள். ஒன்றுமில்லாத மைதிலிக்குக்கூட வாழ்க்கையில் ஒரு பிடிப்பு, லட்சியம் இருக்கிறது. அவள் ஏழை தான். தயாவைப் போலவோ, பானுவைப் போலவோ திட்டங்கள் எதுவும் இல்லாதவள்தான். ஆனாலும் ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்கிற மாதிரி அவள் நிலைமைக்கு ஏற்ற லட்சியம் என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அவள் அப்பா சாதாரணமான நிலைமையில் உள்ளவர். மைதிலி நன்றாகப் படிக்கிறாள் என்ற காரணத்தினால்தான் அவளுக்குக் கல்லூரிப் படிப்பு கைகூடியிருக்கிறது. இது முடிந்த பின்னர் கல்யாணம் என்ற படியில் கால் வைக்க அவள் வீட்டில் வசதியில்லை. ஆகவே நாலைந்து வருஷங்கள் ஏதாவது வேலை பார்த்தாக வேண்டும் என்ற லட்சியம் அவளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.
இப்படி மற்ற முப்பத்துமூன்று பேருக்கும் ஏதேதோ எண்ணங்கள், பிற்காலத்தைப் பற்றிய கற்பனைகள் என்ற வகையில் திறந்து கிடக்கும் பாதைகள் கண் முன் தெரிந்திருக்கின்றன. நானும் தேடித் தேடி, அலசி அலசிப் பார்க்கிறேன். அத்தனை பேரும் கல்லூரிப் படிப்புக்கு என்றைக்கு முழுக்குப் போடப் போகிறோம் என்றே இருக்கிறார்கள்.
நான்….? நான்….?
ஏப்ரல் மாதம் இரண்டாந் தேதி பரீட்சைகள் ஆரம்பமாகும். பத்துப் பதினைந்து நாட்கள் தொடர்ந்து நடக்கும். நான் வேண்டாம் என்றால்கூட எனக்குப் பாஸாகி விடும். முதல் வகுப்பு கிடைக்க வேண்டும் என்ற இலட்சியம் எல்லாம் எனக்குக் கிடையாது. என் லட்சியம் எல்லாம் ஒரு வேளை அதிர்ஷ்டவசமாக பெயில் ஆனால், அடுத்த வருஷமும் இங்கேயே நாட்களை ஓட்டலாம் என்பதுதான்.
காலை வேளையில் கண் விழித்துப் புது உற்சாகத்துடன் காச் மூச் என்று கத்திக் கொண்டு கூட்டைவிட்டு வெளியே பறக்கும் பட்சிகளைப் போல் அத்தனை சகமாணவிகளும் பரீட்சைகள் முடிந்ததும் மூலைக்கு ஒருவராகப் பறந்து போய் விடுவார்கள். மாலதி, ரோட்ரிக்ஸ், ரங்கநாயகி உட்பட. நான்… நான்…?
பரீட்சைகள் முடியும். பின்னர் எங்கே போவது…? எந்த வீட்டு வாசல் கதவு எனக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது…?
இந்த நான்கு வருஷங்களாக விடுமுறை நாட்கள் எல்லாம் எப்படி எப்படியோ போய் விட்டன. பி.யு.சி. படித்து முடிந்த அந்த முதல் வருஷ விடுமுறையின் போது ஊருக்குப் போயிருந்தேன். இந்த உலகத்தில் எனக்கு இருந்த ஒரே பிடிப்பு மந்திரமூர்த்தி. உறவில்லாத உத்தமமான பிடிப்பு. அடுத்த வருஷம் அவரும் போன பிறகு எனக்குத் திருநெல்வேலி மண் உறவும் விட்டுப் போய் விட்டது. இனி என் வரை அந்த அழகிய ரத வீதிகளும் பாறை இடுக்குகளின் வழியே தண்ணீர் ஓடி வரும் தாமிரவருணி ஆறும் ஏதோ வேற்றூர்தான். அடிவானத்துக்கு அப்பால் தெரியும் அழகிய வானவில்லைப் போன்ற மாயம்தான்.
முதல் இரண்டு வருஷக் கல்லூரிப் படிப்புக்குப்பின்னர் லீவுக்கு ஊருக்குப் போயிருந்தபோது புதுப் பிறவியாகப் போனேன். வாழ்க்கை, புதுவிதமான சிந்தனைகளையும் தன்னம்பிக்கை களையும் கொடுத்திருந்தது. அவ்வப்போது மற்றவர்கள் சொன் னதைக் கேட்டும் ஏதோ எனக்குக் கொஞ்சம் தெரிந்திருந்தாலும் அப்போதுதான் மந்திரமூர்த்தி முழு விவரத்தையும் சொன்னார். ஒருவேளை தாமும் கூடிய சீக்கிரம் போய்விடப் பாகிறோம். பிறகு இவளுக்கு இவளைப் பற்றிய விவரம் தெரியாமலே போய்விடப் போகிறதே என்று தெரிந்து கொண்டுதான் சொன்னாரோ, என்னவோ?
மந்திரமூர்த்தி சொன்னார்: “அவர் தங்கமான பிள்ளை. அம்மாவிடம் அவர் உயிரையே வைத்திருந்தார். அவளைக் கல்யாணம் செய்து கொள்வதாகக் கையடித்துச் சத்தியம் செய்து கொடுத்தார். அம்மாவும் அவரைப் பூரணமாகவே மதித்து நடந்தாள். சேர்ந்தாற்போல் ஐந்தாறு நாட்கள் அவர் வராவிட்டால் வாடிப் போய் விடுவாள். தென்காசியில் அவருக்கு நிலபுலன்கள் இருந்தன… படித்துவிட்டு வந்து நிலங்களைப் பார்த்துக் கொண்டு ஊரோடு இருக்க ஆரம்பித்தபோது தான் ஏதோ சந்தர்ப்பவசத்தினால் அம்மாவின் அன்பைப் புரிந்து கொள்ள நேர்ந்தது. ஊரே பகைத்தாலும் அம்மாவைக் கைவிட மாட்டேன் என்று உறுதியாக இருந்தார் அவர். ஆனால் அவரைப் பெற்றவர்கள் அவர் போக்கைத் தெரிந்து கொண்டு ஏதோ காரணம் சொல்லி அவரை ஊரைவிட்டுச் சென்னைக்கு அழைத்துக் கொண்டு போய்ப் பின்னர் ஊர்ப்பக்கம் வராவிடாமலே செய்துவிட்டார்கள். அம்மாவும் அவர் நாளைக்கு வருவார், அடுத்த மாதம் வருவார்’ என்று எண்ணி எண்ணி ஏங்கி நாட்களை ஓட்டினாள். அப்படிக் கழித்த நாட்களில் நீ அம்மாவின் வயிற்றில் நான்கு மாதங்கள். பாட்டி எப்படி எப்படியெல்லாமோ சொல்லி அம்மாவின் மனத்தைக் கலைக்க முயற்சி செய்தாள்… அம்மா கேட்கவில்லை. நீ பிறந்தாய். பிறந்து இரண்டு மூன்று வருஷங்களில் பாட்டியின் பிடிவாதமும், தொல்லையும் நம்பினவர் கைவிட்ட துக்கமும் சேர்ந்து தாங்க முடியாமல் மனமுடைந்து போய் அம்மா ஒருநாள் தூக்கு மாட்டிக் கொண்டு உயிரை விட்டாள்!….”
மந்திரமூர்த்தி பிழியப் பிழிய அழுதார். “உன் அம்மா தெய்வம் அம்மா! யார் செய்த பாவமோ, இந்த வீட்டில் பிறந்து அப்படி முடிய வேண்டும் என்றிருந்தது.”
முகம் தெரியாத அம்மாவை நினைத்து நானும் அழுதேன். “சொல்லுங்கள், எந்த இடத்தில் அம்மா தூக்குப் போட்டுக் கொண்டாள்…?” என்று கேட்டேன்.
அவர் என்னை வீட்டின் பின்கட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் அங்கே இருந்த உத்திரம் ஒன்றைக் காண்பித்தார். அம்மாவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த அந்த உத்திரத்தைப் பக்தியுடன் பார்த்தேன். மந்திரமூர்த்தி அப்பால் போனதும் அதையே அம்மாவாக நினைத்து அதை வணங்கிப் பூஜித்தேன்.
தென்காசிக்காரரைப் பற்றி மேலும் விசாரித்தேன். அவர்கள் ஊரை விட்டுப் போய் விட்டார்கள் என்ற விவரத்தைத் தவிர வேறு எதுவும் அவரால் சொல்ல முடியவில்லை. இடையில் பதினெட்டு வருஷங்கள் ஆகிவிட்டிருந்தது. எனக்கு இப்போது முழு விவரமும் தெரிந்தபோது அந்தத் தென்காசிக்காரரைப் பார்க்க வேண்டும் என்று இருந்தது. பார்த்து உறவுமுறை எதையும் புதுப்பித்துக் கொள்ள முடியாதுதான். ஆனாலும் எனக்கு அம்மா என்ற உறவு இருந்தது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்கு அப்பா என்று ஒருவர் இருந்ததும் உண்மைதானே? அவரை வாய்விட்டு அப்பா என்று அழைக்க முடியாவிட்டாலும் அவர் யார், யார் மாதிரி இருப்பார். வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருப்பார் என்று அறிய வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அதனால் என்ன பயன் கிடைக்கும் என்று யோசியாமல் அவரைப் பார்க்க வேண்டும் என்று என்னுள்ளம் துடித்தது.
மந்திரமூர்த்தியைத் தென்காசிக்குப் போய் அவரைப் பற்றி விவரம் அறிந்து வரும்படி அனுப்பி வைத்தேன். “நிலம், நீச்சு எல்லாவற்றையும் அப்போதே விற்றுவிட்டு அவர்கள் சென்னையோடு போய்விட்டார்கள்” என்றுதான் அவரால் சொல்ல முடிந்தது. என்ன வேலை, எங்கே இருக்கிறார் என்று அவரால் விசாரித்து வர முடியவில்லை.
எனக்குப் பதினெட்டு வயதாகியிருந்தது. அதுவரை தென்காசியைப் பார்த்ததுகூட இல்லை. அப்பா என்று இருந்திருக்கக்கூடியவர் அந்த ஊரில்தான் இருந்தார் என்ற விவரம் தெரிந்திருந்ததால் அந்த ஊரில் சரியானபடி விசாரித்தால் அந்த மனிதர் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரிந்து விடும் என்று தோன்றியது. ஆகேவ, அப்பாவைத் தேடி நானே தென்காசிக்குக் கிளம்பினேன்.
தென்காசி. சந்நிதித் தெரு. அதோ தேரடி. எதிர்வீடு என்றுதான் மந்திரமூர்த்தி சொல்லியிருந்தார். எங்கள் வீட்டைப் போல் முன்பக்கம் கம்பி போட்ட பெரிய வீடு. இப்போது அந்த வீட்டில் வேறு யாரோ இருக்கிறார்களாம். ஏதோவது கேட்டு ஏதாவது விசாரித்து வைத்தால் ஒருவேளை அப்பா இப்போது இருக்கிற இடம் தெரியலாம் என்ற குருட்டு யோசனையுடனும் தைரியத்துடனும் அந்த வீட்டு வாசலுக்குப் போனேன்.
உள் பக்கத்திலிருந்து ஐம்பது வயதுடைய அம்மாள் வெளியேவந்தார்.
“இதுதானே சின்னம்பி வீடு…?” என்று மந்திரமூர்த்தி சொல்லியிருந்த பெயரைச் சொல்லிக் கேட்டேன். என்னைத் தலையிலிருந்து கால் வரை பார்த்த அந்த அம்மாள், “நீ யாரும்மா…?” என்று விசாரித்தார்.
“நான் சென்னையில் படித்துக் கொண்டிருக்கிறேன். அந்த வீட்டைச் சேர்ந்த இந்துவும் நானும் கிளாஸ்மெட்…” என்று உருவாக்கியிருந்த கற்பனையைச் சொன்னேன்.
“இப்போது அவர்கள் இங்கே இல்லை.”
“எனக்குத் தெரியும். அவள் என்னுடன் படித்துக் கொண்டிருக்கிறாள். லீவுக்கு அப்பாவுடன் இந்த ஊருக்கு வரப் போவதாகச் சொல்லி இந்த விலாசத்தைக் கொடுத்திருந்தாள்” என்றேன். என் குரலில் பதற்றத்தை மீறிய தைரியம் இருந்தது.
“சின்னம்பி பெண் பெயர் இந்துவா…? கல்லூரியிலே படிக்கிறாளா அவள்…? அவர்கள் இந்த வீட்டை எங்களுக்கு விற்று விட்டுப் போய்ப் பதினைந்து வரஷத்துக்கு மேல் ஆகிறது. அதற்குப் பிறகு இந்தப் பக்கம் அதிகமாக வரதே இல்லை. அடுத்த தெருவில் அவர்களுக்கு வேண்டியவர்கள் இருக்கிறார்கள். அங்கே போய் விசாரித்துப் பாரு. ஒருவேளை அங்கே வந்தாலும் வந்திருக்கலாம்” என்று விலாசம் கொடுத்தார் அந்த அம்மாள்.
மனம் தளராமல் அந்த வீட்டு வாசலிலும் போய் நின்றேன். அங்கே வாசல் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர் அறுபது வயதுக்கும் மேலான கிழவர். “சந்நிதித் தெரு சின்னம்பி லீவுக்கு இங்கே வந்திருக்கிறாரோ…? அவர் பெண் இந்துவும் லீவுக்கு வரு வேன் என்று என்னிடம் சொன்னாள். நான் அவளுடன் கல்லூரியில் படிக்கிறேன்” என்று ஒரே மூச்சில் கேள்விகளுக்கும் சேர்த்துச் சொல்லி முடித்தேன்.
“எந்த ஊரு உனக்கு…?” என்று கேட்டார் கிழவர்.
“மதுரை… அம்மா, அப்பா எல்லாரும் குற்றாலத்துக்கு வந்திருக்கோம். இந்த ஊருக்கு வந்தால் இங்கேதான் தங்குவேன் என்று என் சிநேகிதி சொல்லியிருக்கிறாள்” என்றேன்.
“சின்னம்பி போன மாசம் வந்திருந்தான். திரும்பிப் போய்விட்டார்களே-அவர்கள் எல்லாரும்” என்றார் அவர்
மேலும் ஏதும் கேட்க வகையறியாமல் திரும்ப அடி எடுத்து வைத்தேன். மந்திரமூர்த்தி கிழவர், அவரால் முடியாது, என்னால் நன்றாக விசாரித்துத் தெரிந்து கொண்டுவிட முடியும் என்று நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று தெரிந்தது. பெயரை மாத்திரம் வைத்துக் கொண்டு, நான் யார் என்று காட்டிக் கொள்ளாமல் அப்பாவைக் கண்டு பிடிப்பது சுலபமான செயல் அல்ல என்று புரிந்தது. ஆயினும் அம்மா என்று ஒருத்தி இருந்தது எவ்வளவு தூரம் நிச்சயமோ அந்த அளவுக்கு அப்பா என்று ஒருவர் இருந்ததும் நிச்சயம். அவர் பெயரும் பிறந்த ஊரும் வீடும் தெரியும். அவர் இப்போது எங்கே இருக்கிறார்…? யாரைக் கேட்பது…?
திருநெல்வேலிக்குத் திரும்பி வந்து மந்திர மூர்த்தியிடம் என் தோல்வியைப் பற்றிச் சொன்னேன்.
அந்த வருஷம்தான் நான் கடைசியாகத் திருநெல்வேலிக்குப் போனது. மந்திரமூர்த்திக்கு வயதாகித் தளர்ந்த நிலையில் அடிக்கடி அம்பாசமுத்திரம் போய் வர முடியாமற் போகவே அவருக்கு உடலில் வலு இருக்கும்போதே அந்த நிலங்களை விற்றுக் கொடுத்தார். நான் படித்து முடித்துவிட்டுத் திருநெல்வேலி வீட்டுக்கு வந்து உட்கார்ந்து கொண்டு என்ன செய்யப் போகிறேன்? அடுத்த வருஷம் அந்த வீட்டையும் ஒரு வழியாக விற்றுத் திருநெல்வேலி மண்ணை உதறினேன். அத்துடன் தம் கடமையும் முடிந்தது என்று சொல்வதுபோல் மந்திரமூர்த்தியும் மறைந்து போனார்.
ஒரு வழியாகப் பரீட்சைகள் முடிவடைந்து விட்டன. கடைசி வருஷ மாணவிகள் எல்லாரும் மறுபடியும் இங்கே வரப் போகிறோம் என்ற கவலை இன்றி, விடுபட்ட நிம்மதியுன் அவரவர்கள் மூட்டை முடிச்சைக் கட்டுகின்றனர். நான்கு வருஷங்களாக இந்த ஹாஸ்டலில் வீட்டைவிட அதிக சுதந்திரத்துடன் ஓடிப் பாடிக் கழித்துவிட்டுக் கிளம்புவது மனத்துக்கு ஒருவித சோகமூட்டுவதாக இருக்கிறது. ஆனால் இதைவிடப் பிரகாசமான எதிர்காலத்தை எதிர்நோக்கும் தயாவும் பானுவும் மைதிலியும் ஒருவருக்கொருவர் உற்சாகமாகச் சொல்லிக் கொண்டு கிளம்புகிறார்கள். பானு கடைசிப் பரீட்சை முடிந்த இரவே தில்லிக்குக் கிளம்புகிறாள். அநேகமாக ஹாஸ்டல் முழுவதும் பதினாறாம் தேதியே காலியாகி விடுகிறது. நான் பதினேழாம் தேதி திருநெல்வேலிக்குக் கிளம்பப் போவதாக என்னைக்
கேட்பவர்களிடம் சொல்கிறேன். திருச்சிக்கும் மதுரைக்கும் போகும் இரண்டு மூன்று பேர் தங்களுடன் வரச்சொல்லி என்னை வற்புறுத்துகிறார்கள். அதை மறுத்துவிட்டு எல்லோரும் போனபிறகு என் பிரயாணத்தை வைத்துக் கொள்கிறேன்.
தயா கோவைக்குக் கிளம்புகிறாள். அறையைக் காலி செய்து டாக்சியில் சாமான்களை ஏற்றியானவுடன் தயா என்னைக் கட்டிக் கொள்கிறாள். அவள் கண்கள் குளமாகின்றன. “காந்தி… யாரை மறந்தாலும் என்னை மறந்துவிடாதே… மற்றவர்களைப் போல் இல்லை நமக்கிடையே உள்ள உறவு. நாலு வருஷங்கள் இதே அறையில் ஒன்றாக எழுந்து, ஒன்றாகச் சாப்பிட்டு, ஒன்றாகத் தூங்கினோம். இதோடு நம் ஒட்டுதல் தீர்ந்து விட்டது என்று இருந்துவிடாதே. நீ யாருடனும் ஒட்டமாட்டாய் என்று எனக்குத் தெரியும். அதனால் இப்போதே சொல்லி வைக்கிறேன். அடுத்த மாதமே என் கல்யாணப் பத்திரிகை வரும். நிச்சயம் வா. வராமல் இருந்துவிடாதே. நீ வராவிட்டால் கல்யாணத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு நான் உன் வீட்டுக்கு வந்து விடுவேன்” என்கிறாள்.
ஸ்டேஷன். கடைசி நிமிஷப் பிரிவு சொல்ல முடியாத வேதனையாக இருக்கிறது. அவளிடம் மாத்திரம் என் சென்னை விலாசத்தையும் கொடுத்து ஒருவேளை இங்கே வந்து இருந்தாலும் இருப்பேன் என்று சொல்கிறேன். அவளை முழுவதும் ஏமாற்ற மனம் வரவில்லை.
ரயில் கிளம்புகிறது. எங்கோ பிரகாசமான எதிர்காலமும், உயிருக்குயிராக நேசிக்கும் அம்மா, அப்பா, அக்கா, தங்கை, அண்ணா, தம்பி, தில்லியில் அவளை நினைத்து ஏங்கும் வருங்காலக் கணவர் இத்தனை பேர் இருந்தும் தயா என்னுடைய பிரிவைச் சகியாமல் கண்களில் கண்ணீர் கசிய விடை பெற்றுக் கொள்கிறாள்.
பிளாட்பாரத்தை விட்டு வெளியே வருகிறேன். இருந்த கடைசி உறவும் விட்டது. பிரிவால் தயா துடிக்கும் அளவுக்கு என் மனம் துடிக்கவில்லை. எதையும் கொஞ்சமாவது சுவைத்திருந்தால்தான் அதன் முழுச் சுவையைப் பற்றியும் தெரியும். உறவு, அன்பு என்ற சுவையே தெரியாதிருந்து விட்டால் பிறகு கவலை ஏது, ஏக்கம் ஏது?
படிப்பு என்ற பெரிய சமுத்திரத்தைத் தாண்டி, வாழ்க்கை என்ற தீவில் கரை ஏறிவிட்ட பின்னர் மேற்கொண்டு என்ன செய்வது என்று எதுவுமே புரியாமல் நாட்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் போய்க் கொண்டேயிருக்கின்றன.
வேறு வேலை ஏதும் இல்லாமல் உட்கார்ந்திருக்கும் நாளில் அப்பா என்ற இந்த மனிதர் யார், இப்போது எங்கே இருக்கிறார் என்று திருப்பித் திருப்பிச் சிந்தனை ஓடுகிறது. மறுபடியும் ஏதாவது முயற்சி எடுத்து அவரைத் தேடிப் பார்க்கலாமோ என்று நினைக்கிறேன்.
ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு நாட்கள் நகருகின்றன. டிரெயினிங் கல்லூரி திறக்கும் நாளை எதிர்பார்த்துக் கொண்டு வேறு ஏதும் வேலை இன்றி, சிந்தனை இன்றி, செயல் இன்றி, பற்றின்றி, பாசமின்றி, நாட்களைக் கடத்துகிறேன். இந்த உலகில் என்னை விடப் பெரிய ஞானி, சந்நியாசி யார் இருக்க முடியும்?
ஒருநாள் காலைத் தபாலில் தயாவின் கல்யாணப் பத்திரிகை வருகிறது. கல்யாணம் கோவையில்தான் நடக்கும் என்று என்னிடம் சொல்லியிருந்தாள். பத்திரிகையைப் பிரித்தால் சென்னையில் நடப்பதாகப் போட்டிருக்கிறது. பத்திரிகையுடன் கடிதம் ஒன்றும் இருக்கிறது. தயா எழுதியிருக்கிறாள், என்னை நிச்சயம் முதல் நாள் மாலையே எதிர்பார்ப்பதாக. நான் கல்யாணத்துக்கு வராமல் இருந்துவிட்டால் கல்யாணத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு என்னைத் தேடிக்கொண்டு வந்து விடுவாளாம்!
கல்யாணத்துக்கு முதல் நாள் மாலை கல்யாண மண்டபம் இருக்கும் தியாகராய நகருக்குக் கிளம்புகிறேன். வாசலில் டாக்சியிலிருந்து இறங்கித் தயங்கித் தயங்கி உள்ளே போகிறேன். ஐந்தாறு பெண்களுக்கு நடுவில் உட்கார்ந்திருக்கும் தயா என்னைக் கண்டதும் ஓடி வந்து கையைப் பிடித்துக் கொண்டு போய் அருகில் இருந்தவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு டிபன் சாப்பிட அழைத்துக் கொண்டு போகிறாள். கல்லூரி மூடி இரண்டு மாதங்களே ஆகியிருந்தாலும் எங்களுக்கிடையில் ஒரு வருஷம் பேசியாக வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.
இருட்டிய பின்னர் எல்லோரும் மாப்பிள்ளை அழைப்புக்குக் கிளம்புகின்றனர்.
“நீயும் அவர்களுடன் போய்விட்டு வாயேன்” என்று தயா சொல்லவே நானும் கிளம்புகிறேன்.
மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் கல்யாண வீட்டை அடையும் நேரம். கோயிலிலிருந்து கிளம்பியதிலிருந்து இதுவரை எல்லோரிடமும் மாறி மாறிக் கலகலப்பாகச் சிரித்து முழக்கியபடி பேசிக் கொண்டே வந்த ஒரு வயதான அம்மாள் காதில் வைரத்தோடு தொங்கி ஆட, பரங்கிப் பழம் போன்ற முகத்தில் குங்குமம் பளிச்சிட என் அருகில் வந்து மெதுவாகப் புன்னகை செய்துவிட்டு, “தயாவின் சிநேகிதியாம்மா நீ?” என்று தாமாக விசாரிக்கிறார்.
“ஆமாம்!” என்று தலையை மட்டும் ஆட்டுகிறேன்.
“எந்த ஊர் உங்களுக்கு…?”
எங்கோ உடல் பாரம் தெரியாமல் கனவுலகில் ஆகாச தேவதை போல் கால்கள் பூமியில் படாமல் நீந்திக் கொண்டிருந்த என்னை அந்த அம்மாளின் கேள்வி கீழே இந்த உலகத்துக்குக் கொண்டு வந்து விடுகிறது. அவர் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்க இரண்டு நிமிஷம் ஆகிவிடுகிறது. “எனக்கு… திருச்சி” என்று முன்னமேயே முடிவு பண்ணி வைத்திருந்த பொய்யைச் சொல்லி வைக்கிறேன்.
“திருநெல்வேலி” என்று சொல்லி, அங்கே எந்த இடம் சிவபுரமா, ராஜ வீதியா, வண்ணாரப்பேட்டையா, பெருமாள் புரமா என்று மேலும் மேலும் கேள்வி எழுந்தால் ஏதாவது சொல்ல வேண்டிய வருமோ என்ற பயத்தில், நல்ல வேளயைாக, அந்த அம்மாள் மேலும் கேள்விகள் தொடுக்குமுன் ஊர்வலம் கல்யாணப் பந்தலை நெருங்குகிறது.
காரிலிருந்து மாப்பிள்ளை இறங்கி உள்ளே போனதும் எல்லோரும் உள்ளே நடக்கிறோம். தயாவிடம் போய் மாப்பிள்ளையப் பற்றி என் அபிப்பிராயத்தை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். அடுத்த நிகழ்ச்சிக்காக அவளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாப்பாடு முடிந்ததும் தயாவுடன் அவளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்குப் போகிறேன்.
“தயா, பேசிக் கொண்டே இராதே! காலை நாலு மணிக்கு எழுந்திருக்கணும். சீக்கிரம் தூங்கு” என்று அவள் அம்மா வந்து சொல்லி விட்டுப் போகிறார்.
தயாவும் நானும் பக்கத்தில் பக்கத்தில் படுத்துக் கொள்கிறோம். இம்மாதிரிக் கல்லூரி நாட்களில் ஐந்து வருடங்கள் கழித்திருக்கிறோம். ஹாஸ்டலில் சேர்ந்த முதல் நாள் இரவு எனக்கு நினைவு வருகிறது. திருநெல்வேலியிலிருந்து வந்த புதிதில் தாவணியையும் பாவாடையையும் விட்டு விட்டுப் புடவை அணிந்து கல்லூரி மாணவியாக ஹாஸ்டல் அறையின் தனிமையில், எதிரில் ‘ஹோ’ என்று ஆர்ப்பரிக்கும் கடலைத் தவிர சுற்று வட்டாரத்தில் குடியிருப்புக்களே இல்லாத அந்தத் தனிமைப் பகுதியில், முன்பின் தெரியாத ஒரு புதுப் பெண்ணுடன் தனி அறையில் தனித் தனி கட்டில்களில்படுத்துக் கொண்டு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த அன்றைய இரவு இப்போது நினைவுக்கு வருகிறது. என் பயத்தை வெளியில் சொல்லிக் கொள்ள முடியாமல் நானும், அவன் பயத்தை வெளியில் காண்பித்துக் கொள்ள முடியாமல் அவளும் மனசுக்குள் தவித்த நாள் நேற்றைக்கு நடந்தது போலிருக்கிறது.
காலை கண் விழித்தபோது தயா அருகில் இல்லை. எழுந்து கண்களைக் கசக்கிக் கொண்டு வெளியே வந்தால் ஹாலில் ஒரே பரபரப்பாக இருக்கிறது. புதுப் புதுப் பட்டுப் புடவைகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. தயா அவள் அப்பாவின்
அருகில் மணையில் உட்கார்ந்திருக்கிறாள். இன்னும் விடியவில்லை. மணி ஐந்துகூட ஆகியிராது. அரை மணி நேரம் அங்கே இருந்துவிட்டுத் தயா எழுந்து வருகிறாள்.
உள்ளே தயாவுக்கு அலங்காரம் நடக்கிறது. அந்த வேலையில் ஐந்தாறு பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். தலை முழுவதும் புஷ்பத்தால் மறைத்து, அதன் மீது ஜடைபில்லை வைத்துக் கண் நிறைய மைதீட்டிக் கழுத்துத்தாங்காமல் நகைகளும் உடல் முழுவதும் தகதகக்கும் வைர ஊசிப் புவையுமாக, இதுவரை நான் பார்த்திராத தயாவாக மாறுகிறாள் அவள். காட்டாற்று வெள்ளம்போல் வீடு முழுவதும் பரபரப்பு, “உம்… உம்… சீக்கிரம்! ஆச்சா? பரதேசக் கோலம் கிளம்பியாச்சு. தாமதப் படுத்தாதேங்கோ… ஆறரை மணிக்கு முகூர்த்தம்…” என்று யார் யாரோ உள்ளே எட்டிப் பார்த்து முடுக்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.
அப்புறம்…?
கெட்டி மேளம் முழங்க, அப்பாவின் மடியில் தயா அமர; மாப்பிள்ளை இடத்திலிருந்து எழுந்து வந்து எதிரில் நின்று அவள் கழுத்தில் மாங்கல்ய தாரணம் செய்ய, பூமாரி பொழிய, தயாவின் உயிரும் மெய்யும் சிலிர்த்தெழ, அவளைப் பார்த்துப் பெற்றவர்கள் கண்களிலிருந்து பொல பொலவென்று கண்ணீர் பெருக்கக் கல்யாணம் முடிகிறது.
மாலை ஐந்து மணி இருக்கும்.
“தயா எங்கே?…?” என்று கேட்டுக் கொண்டே வருகிறார் அவள் அப்பா.
“கல்லூரித் தோழிகள் வந்தார்கள். அவர்களுடன் வாசல் வரையில் போயிருக்கிறாள்” என்கிறேன்.
அவர் ஓய்ந்து போய் நாற்காலியில் அப்பாடா என்று உட்காருகிறார். அவரைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது. நேற்று மாலை பிள்ளை வீட்டார் வந்து இறங்கியதிலிருந்து அவர் ஓரிடத்தில் உட்கார்ந்து கொள்ளாமல் இங்கும் அங்குமாகப் பறந்தபடி அத்தனை ஏற்பாடுகளையும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்.
“உன் பேர் என்னம்மா?” என்று கேட்கிறார்.
“காந்திமதி” என்கிறேன்.
“தயாவுக்குக் கல்லூரித் தோழிகள் அத்தனை பேர் இருந்தும் நீமாத்திரம்தான் நட்பை மறக்காமல் கல்யாணத்துக்கு வந்திருக்கிறே போலிருக்கு… உனக்கு எந்த ஊர்?”
“திருச்சி…”
“திருச்சியா? திருச்சியிலே எங்கே?”
“ஆண்டார் வீதி.’
“ஆண்டார் வீதியா? வக்கீல் ஹாலாஸ்யம் வீடு இருக்கிறதே
அதற்குப் பக்கத்திலேயா?”
“ஆமாம்” என்கிறேன் தலை குனிந்த படியே. மேலும்என்னென்ன கேட்டுக் குழப்புவாரோ என்று பயமாக இருக்கிறது.
அவர் சற்று யோசித்துவிட்டு “திருச்சியில் ஹோலி கிராஸ், சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி எல்லாம் இருக்கும்போது சென்னைக்கு வந்து ஏன் படிச்சே?” என்று கேட்கிறார்.
மென்று விழுங்குகிறேன். “இங்கே ஹாஸ்டல் வசதியாக இருந்தது…”
“அப்பா என்ன பண்ணின்டிருக்கிறார்?”
“அப்படியா…? த்ச… த்ச… நான்கூட ரொம்ப வருஷங்களுக்கு
“அப்பா இல்லை.”
முன்னாலே திருச்சியிலே
பள்ளிக்கூடத்திலே படிச்சே?”
இருந்திருக்கிறேன்.
எந்தப்
தயா வந்து என்னைக் காப்பாற்ற மாட்டாளா என்று தவியாய்த் தவிக்கிறேன். வெளியில் எட்டி எட்டிப் பார்க்கிறேன். அவள் வரும் வழியாக இல்லை.
“நேஷனல் பெண்கள் உயர்நிலைப் பள்ளி.”
“நேஷகல் பெண்கள் பள்ளியா? நேஷனல் பாய்ஸ் ஸ்கூல் மாத்திரம்தானே இருந்தது? இப்போ பெண்கள் பள்ளியும் வந்துவிட்டதா? அதே மானேஜ்மெண்டா?”
“ஆமாம்.’
தயா சீக்கிரம் வந்துவிட மாட்டாயா?
“அட்வகேட் ஹாலாஸ்யம் வீட்டுக்கு எதிரில் சங்கரன் என்ற டாக்டர் பிராக்டிஸ் செய்கிறாரே, அவரைத் தெரியுமோ?”
“தெரியாது.”
“தெரியாதா?” ஹாலாஸ்யம் வீட்டுக்குப் பக்கத்தில்தானே உன் வீடு என்று சொன்னே? இப்ப நீங்க திருச்சியிலே இல்லையா?”
“ஆமாம். இப்ப நாங்க அங்கே இல்லை….”
“இப்ப எங்கே இருக்கீங்க?”
“சென்னையிலேதான்.”
நல்ல வேளை. தயா வந்து விடுகிறாள். எனக்கு உயிர்வருகிறது. இந்த ஐந்து நிமிஷங்கள் பட்ட சங்கடம் போதும். மேலும் இரண்டு நிமிஷங்கள் இவரிடம் தனியாக அகப்பட்டுக் கொண்டாலும் ஏதாவது உளற வேண்டி வந்திருக்கும். தயாவிடம் சொல்லிக் கொண்டு நானும் கிளம்பிவிட வேண்டியதுதான்.
ஆனால் தயா என்னைப் போகக்கூடாது என்று பிடிவாதமாகத் தடுக்கிறாள். “உன்னை விட்டால் எனக்குப் பேசக்கூட இங்கே யாரும் இல்லை. நீயே பாரேன். தயவுசெய்து போக வேண்டாம். உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நாளையிலிருந்து உன்னைக் கேட்கப் போகிறேனா? பிளீஸ்…. பிளீஸ்!” என்று கையைப் பிடித்துக் கொள்கிறாள்.
என்னால் அவள் பேச்சை மீறமுடியவில்லை.
‘அன்றிரவு தயாவுக்கு வாழ்க்கையின் முதலிரவு’ – இப்படித் தயாவின் அம்மா சொன்னதைக் கேட்ட எனக்கு அன்றைய இரவு தனி இரவு ஆகிறது.
மறு நாள் காலை கண் விழித்து எழுந்து அறையை விட்டு வெளியே வந்தபோது தயா பின் பக்கத்திலிருந்து கையில் காப்பித் தம்பளரும் டபராவுமாக மாடிப் படி ஏறிக் கொண்டிருக்கிறாள். அதற்குள் குறித்து வேற்றுடை அணிந்து ஈரத் தலையைப் பின் முடிச்சுப் போட்டுக் கொண்டு என்னைப் பார்ததுச் சிரிக்கிறாள். ஒரே நாளில் அவள் உருவத்தில், முகத்தில், நடையில், கண்களில் எவ்வளவு மாறுதல்!
நேரம் ஆக ஆக, அவரவர்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டுவதில் ஈடுபட்டிருக்கின்றனர். தயாவின் துணி மணிகளை அவள் சகோதரி எடுத்து ஒரு பெட்டியில் இது வேண்டுமா, அது வேண்டுமா என்று கேட்டுக் கேட்டு அடுக்கி வைக்கிறாள். அவர்கள் எல்லோரும் காலை பத்து மணி ரயிலில் மதுரைக்குப் போவதாக இருக்கிறார்கள். மதுரை தான் பிள்ளையின் ஊராம். நான் ஸ்டேஷன் வரை போய் வழியனுப்பி விட்டு அப்பியே நுங்கம்பாக்கம் போவதாக இருக்கிறேன். இனி அவளும் நானும் சேர்ந்திருப்பது என்று எங்கே முடியப் போகிறது? கல்லூரியில் எத்தனையோ பேரிடம் பழகினேன். ஆனாலும் இவளிடம் ஏற்பட்ட ஒட்டுதல் வேறு யாரிமும் ஏற்பட்டதில்லை. எனக்கு இருந்த ஒரே ஒட்டுதலும் இதோ கடைசி கடைசியாகப் பிரியப் போகிறது…
தயா மீண்டும் பெட்டியை ஒரு முறை திறந்து பார்த்து
உடைகளையும் மற்றவைகளையும் சரிபார்க்கிறாள். “கிளம்பியாச்சா, தயா?” என்று கேட்டுக் கொண்டே அவள் அப்பாவும் அம்மாவும் வருகிறார்கள். அந்தச் சமயம் பார்த்து மாடியிலிருந்து வந்த ஒரு பெண் தயாவையும் அவள் அம்மாவையும் அழைக்கவே இருவரும் வெளியே போகின்றனர். யாரிடம் தனியாக மீண்டும் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேனோ, அவருக்கு எதிரே மறுபடியும் தனித்து நிற்கும்படியாகி விடுகிறது.
“ஆமாம், திருச்சியில் யார் வீடு என்று சொன்னாய்?” என்று நேற்றுவிட்ட இடத்திலிருந்து பேச்சை ஆரம்பிக்கிறார். தயா திரும்பி வரும்வரை நேரம் போக்க ஏதாவது பேசிக் கொண்டிருக்கலாமே என்பது அவர் வரை ஒரு பொழுதுபோக்கு. எனக்கு?
முதல் பொய்யைத் தொடர்ந்து முடிந்த மட்டும் சொல்லிக் கொண்டே போக வேண்டியதுதான்.
“சரவணன் வீடு.’
“என்ன வேலை பார்த்தார்?”
ஆண்டவனே! சரியான சமயம் பார்த்துத் தயா என்னை இபடிபத் தவிக்கவிட்டு விட்டுப் போய் விட்டாளே!
“வாத்தியாராக இருந்தார்”
“எனக்கு உன்னை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறது. திருநெல்வேலியிலே எப்பவாவது இருந்திருக்கியா? அங்கேதான் எங்கேயோ உன்னையோ, அல்லது உன்னைப் பபோன்ற வேறு ஒருவரையோ பார்த்த மாதிரி நெஞ்சில் இருக்கிறது…”
கால்களிலிருந்து பூமி நழுவுகிறது. இப்போது பார்த்துத் தயா வந்து சேர்ந்து அப்பா அவளிடம் ஏதாவது கேட்கப் போக “இவளுக்குத் திருநெல்வேலிதான்” என்று சொல்லி வைத்தால் நான் கட்டிய பொய் மாளிகை ஒரு கணத்தில் சிதறுண்டு போகுமே!
“ஆமாம்… எனக்குச் சொந்த ஊர் திருநெல்வேலிதான்” என்று எப்படியோ சொல்லி முடிக்கிறேன். மேலும் பொய் சொல்லிக் கொண்டே போனால் அகப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான் என்று தோன்றுகிறது.
“எங்கே வீட அங்கே?”
“மாட வீதிப் பக்கம்…”
தயாவும் அம்மாவும் வேகமாக உள்ளே வருகிறார்கள். “என்னப்பா இது, பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? வாசலில் டாக்சி வந்துவிட்டது. அவர்கள் எல்லோரும் கிளம்பியாகிவிட்டது. மணி ஒன்பதே கால்” என்கிறாள் தயா. அவர் வெளியே போகிறார்.
எனக்குக் குளிர் விட்டுப் போய்விட்ட மாதிரி இருக்கிறது. இனிமேல் யாரிடமும் வேஷம் போட வேண்டியதில்லை. கேட்டால் திருநெல்வேலிதான் என்று சொல்லிவிட்டுப் போகிறது. அதிலே என்ன? தயாவும் நானும் கல்லூரித் தோழிகள். அவளுக்காக, அவள் கூப்பிட்டு நான் வந்திருக்கிறேன். யாரோ ஒரு பாட்டிக்காகவும், பொழுது போகாவிட்டால் ஊர் வம்படிக்கும் இவள் அப்பாவுக்காகவும் அல்ல. இனிமேல் என்ன…? எல்லோரும்தான் கிளம்பியாகி விட்டதே…
எழும்பூர் ஸ்டேஷன். முதல் மணி அடித்தாகி விட்டது. ஜன்னலருகில் உட்கார்ந்திருக்கும் தயா “போய்ட்டு வருகிறேன்” “போய் விட்டு வருகிறேன்” என்று மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொள்கிறாள். “டில்லிக்குப் போனதும் எழுதுகிறேன். கடிதத் தொடர்பையாவது விடாமல் வைத்துக் கொள்வோம். நீ ஒருத்திதான் எனக்குச் சிநேகிதி” என்கிறாள்.
“மதுரையில் எத்தனை நாட்கள் இருப்பாய்?” என்று கேட்கிறேன்.
“இரண்டு மூன்று நாள்தான் இருப்போம். பிறகு குற்றாலம் போகலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். சீஸனாக இருப்பதால் ஒரு வாரம், பத்து நாட்கள் தங்குவோம். நீ எப்போது திருநெல்வேலிக்குப் போகப் போகிறாய்?” என்று கேட்கிறாள்.
“ஒரு மாதம் ஆகலாம்..”
கார்டு வசில் ஊதிக் கொடி காட்டுகிறார்.
“ஒருவேளை இப்போது நீ திருநெல்வேலி வர நேர்ந்தால் அப்படியே தென் காசிக்கு வாயேன். நாங்கள் அங்கேதான் தங்குவோம். அப்பாவின் பூர்விக வீடு அங்கே இருக்கு. தென்காசியிலே சந்நிதித் தெரு, தேரடிக்கு நேர் எதிர் வீடு. அதை விற்றுவிட்டோம். அங்கே வந்து அப்பா பேரைச் சொல்லி விசாரித்தால் தெரியாது. சின்னம்பி என்று கேட்டால்தான் தெரியும். நாங்கள் தங்கியிருக்கும் வீட்டை அவர்கள் சொல்லுவார்கள்.”
ரயில் பெரிதாக ஊதிவிட்டு நகர்கிறது.
எதிர்பாராமல் இருக்கும்போது பொட்டில் ஓங்கி அறைந்தது போல் வலி ஏற்பட நான் சிலையாக அப்படியே நின்ற நிலையில் நிற்கிறேன். என் பார்வை தயாவுக்கு எதிர் பெஞ்சில் ஜன்னல் ஓரத்தில் ஒட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அவள் அப்பாவைப் பார்த்தபடி இருக்கிறது. கண்களில் உருவம் தெரியவில்லை.
பத்துத் தப்படி போனதும் ரயில் நிற்கிறது. உடனே கிளம்பவில்லை. எல்லாரும் வெளியே எட்டி எட்டிப் பார்க்கிறார்ள். என் கால்கள் என்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஜன்னலருகில் என்னை இழுத்துக் கொண்டு போகின்றன. அருகில் போனதும் புதிதாகப் பார்ப்பது போல் தயாவின் அப்பாவையே பார்க்கின்றன கண்கள். அவர் கண்களிலும் கண்ணீர் மறைப்பது தெரிகிறது. அவர் கையை நீட்டி என் தலையைத் தடவிக் கொடுக்கிறார். “காந்தி… தயாவுக்கு ஆனமாதிரி உனக்கும் கல்யாணம் நடக்கும்… எப்போது நடந்தாலும் எனக்குக் கடிதாசு போடு. நிச்சயம் வருகிறேன்..” என்று தழுதழுக்கிறார்.
ரயில் நகருகிறது.

One Comment on “வ.சா.நாகராஜன்/அப்பாவைத் தேடி…”

Comments are closed.