வ.சா.நாகராஜன்/மோர்க் குழம்பு

சேது சிறு வயதில் தாயை இழந்தவன். அத்தையின் பரிவில் வளர்ந்தவன். அத்தைக்கும் அன்பு வைக்க இவ்வுலகில் இரண்டே ஜீவன்கள்தாம் இருந்தன. ஒன்று சேது, மற்றொன்று படியளக்கும் எருமை மாடு.
மாடு தாராளமாகப் பால் கறக்கும். வியாபாரத்துக்குப் போக மோர் மிஞ்சும். அதனால் அநேகமாகத் தினந்தோறும் மோர்க்குழம்பு தான் சாப்பாடடில் பிரதானமான அம்சம்.
இப்படியாகச் சின்னஞ் சிறு வயதில், அறியாப் பருவத்தில் மோர்க் குழம்பின் மீது காதல் கொள்ள ஆரம்பித்தான் சேது.
பள்ளியில் படித்த காலத்தில் மோர்க் குழம்பு இருமுறை சேதுவின் வாழ்க்கையின் ஆழமான வடுவை ஏற்படுத்தி விட்டது. முதல் தடவை அவன் ஒன்பதாகவது படிக்கும்போது மோர்க் குழம்பின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளும் மனப் பக்குவம் பெற்று வந்த ஆரம்ப காலம். காலையில் பழைய சோற்றைப் போட்டுவிட்டுப் பிற்பகல் வேளைக்கு டிபன்பாக்சில் மோர்க் குழம்பு சாதத்தைக் கொடுத்து அனுப்புவாள் அத்தை. காரசாரமாகக் கிடைக்கும் மோர்க் குழம்பில் சேது உயிரை வைத்ததில் வியப்பில்லை.
அந்த நாட்களில் ஒரு நாள்.
நான்காவது பீரியட். மணி பன்னிரண்டரை. காலையில் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பும் அவசரத்தில் அரைகுறையாகச் சாப்பிட்டுவிட்டு வந்த சேதுவுக்குப் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பிக்கும் வேளை. டெஸ்க் மறைவில் வைத்திருந்த டிபன்பாக்சின் மூடியில் உள்ள சின்ன இடைவெளி வழியாக மோர்க் குழம்பின் மணம் ‘கம்’ என்று எழுந்து சேதுவைத் தீண்டும் நிர்ப்பந்தம். சேது பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான். சரித்திர வாத்தியார் சாமிதுரை, இரண்டாவது மகாயுத்தத்தில் போலந்து வீழ்ச்சியில் ஆரம்பித்து ஒவ்வொரு தேசத்தின் வீழ்ச்சியாக வர்ணித்துக் கொண்டே போனார். கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்ததால் அவர் பார்வை சேதுவின் மீது முழுமையாக விழுவதற்கு நியாயம் இல்லை. மெதுவாக டெஸ்கினுள் கைவிட்டு டிபன்பாக்சைத்திறந்தான். மல்லிகைக்கும் ரோஜாவுக்கும் பாரிஸ் செண்டுக்கும் இந்த மண சுகம் உண்டா? சேது கிறங்கிப் போனான். மெதுவாக ஓர் உருண்டை எடுத்துப் பிரசித்த பெற்றி அரசியல்வாதிகள் மேடையில் பொடி போடும் லாகவத்துடன், அடுத்த பையனின் கவனத்தைக்கூடக் கவராமல் வாய்க்குள் செலுத்தி விட்டான். பிறகு கிளம்பியது பிரச்னை. அப்படியே மருந்தை விழுங்குவது போல் விழுங்கினால் மோர்க் குழம்பின் மனம் எப்படிப் பூரணமாகும்? நாக்கு மெதுவாகச் சுழல ஆரம்பித்தது. வாய் மந்திர கதியில் அசைந்தது.
சேது சொர்க்கத்தில் மிதக்கத் தொடங்கினான்.
அடுத்த உருண்டை. அடுத்த உருண்…
“சேது! இரண்டாவது உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கர்கள் உபயோகித்த குண்டின் பெயர் என்ன?”
“மோர்க் குழம்பு சார்”
அத்தனை பையன்களிடமிருந்தும் ‘கொல்’ என்ற சிரிப்பு எழுந்தது. அதன் பிறகுதான் சேதுவுக்குச் சுய நினைவு வந்தது. ஆசிரியர் “உன் வாயில் என்ன?” என்ற கேள்வியைக் கேட்கவில்லை என்று உணர்ந்தான். சமாளித்துக் கொண்டு “இல்லை சார், துப்பாக்கி, கன்.. குண்டு..!” என்று தவித்தான்.
சரித்திர ஆசிரியர் கிட்டத்தட்ட ஒரு ஹைட்ரஜன் குண்டையே சேதுவின் உடலில் செலுத்தினார். ‘மோர்க் குழம்பு சேது’ என்று பெயர் அன்றிலிருந்து அவனுக்கு நிலைத்தது.
இரண்டு வருஷங்களுக்குப் பிறகு ஒருநாள், மாதாந்திரப் பரீட்சை. நடுப்பகல். அதே பசி நேரம்.
கேள்விகளில் அநேகமாக எல்லாவற்றுக்கும் விடை எழுதிவிட்டான். ஒரே ஒரு கேள்விதான் பாக்கி. இன்னும் அரை மணி நேரம் இருந்தது. திடீரென்று சேதுவுக்கு மோர்க் குழம்பின் நினைவு எழுந்தது. அப்போது அவன் அனுபவித்த உணர்ச்சியை இரண்டு வகையினர் தான் புரிந்து கொள்ள முடியும். சிகரெட் பழக்கத்துக்கு அடிமையாகி, சேர்ந்தாற்போல் ஏழு எட்டு மணி நேரம் புகை பிடிக்க முடியாமல் தவித்துப் போய் ஒரே ஓர் இழுப்புக்காகத் தவிப்பவர். மற்றொருவர்ட, ஐந்து நிமிஷங்களுக்கு ஒருமுறை நாசிக்குப் பொடியை நிவேதித்துப் பழக்கமாகி, சேர்ந்தாற்போல் ஐந்தாறு மணி நேரத்துக்கு மேல் பொடி போட முடியாத நிர்ப்பந்தத்துக்கு ஆளாகித் தவிக்க நேரிடும் சூரண தாசர்.
சேது மனத்தை அடக்க முயற்சி செய்தான். முன் அனுபவத்துக்குப் பிறகு வகுப்பறையில் டிபன்பாக்சைத் திறப்பதேயில்லை. இப்போது மனம் கட்டுப்படாமல் தன்னிச்சையில் வெறி கொள்ள ஆரம்பித்தது. வகுப்பறையைச் சூபர்வைஸ் செய்து கொண்டிருந்த ஆசிரியர் அறையின் வாசல் பக்கத்திலிருந்த ஜன்னல்வரை நடந்து கொண்டிருந்தார். ஒன்று, இரண்டு, மூன்று.. பத்து அடிகள். திரும்பி அதே கதியில் திரும்பும் போதும் சரியாகப் பத்து அடிகள். மீண்டும் வாசல் பக்கத்திலிருந்து ஜன்னலை நோக்கி நான்காவது தடவை… ஐந்தாவது தடவை.
சேது, எழுதி முடித்த விடைத் தாளை ஒரு நோட்டம் விட்டு விட்டு ஆசிரியரைப் பார்த்தான். அவரைக் காணாேம். அறை முழுவதும் கண்களைச் சுழற்றினான். இல்லை. பரீட்சை சமயத்தில் அறையை விட்டு விட்டு எங்கே போயிருப்பார்?
சேதுவுக்கு அதைப் பற்றிச் சிந்தனை செய்து கொண்டிருக்க மனமோ நேரமோ இல்லை.
டெஸ்கினுள் கையை விட்டான். டிபன் பாக்சைத்திறந்தான். பரீட்சையாதலால் டெஸ்குக்கு ஒரு மாணவன்தான் மிகவும் சௌகரியம். பெரிய உருண்டையாக உருட்டினான். குனிந்தான். உள்ளே தள்ளினான். வலது கன்னத்தில் ஒதுங்கிய குமிழை இடப்பகம் தள்ளினான். நடுப்பக்கம் கொண்டு வந்தான். விழுங்கினான். ஆஹா…!
ஆசிரியரை இன்னும் காணவில்லை.
அடுத்த உருண்டை.
இப்போதைக்குப் போதும். பாத்திரத்தை மூடினான்.
“சேது! ஒரு வழியாக முழுதும் சாப்பிட்டு விடேன். அரைகுறைப் பசியில் பரீட்சை எழுதுவானேன்?” பின் பக்கத்திலிருந்து ஆசிரியரின் குரல் கேட்டது.
திடுக்கிட்டுத் திரும்பினான். மோர்க் குழம்பு படிந்த கதையை டிராயரில் துடைத்தபடியே எழுந்து நின்றான்.
ஆசிரியர் எதிர்ப் பக்கம் வந்தார். மேஜையின் மீது இருந்த பேப்பரை எடுத்தார். நான்காகக் கிழித்தார். சேதுவின் பக்கம் விட்டெறிந்தார். “வாட் ஈஸ் திஸ்? பரீட்சைக் கூடமா? இல்லே, உன் வீட்டுச் சாப்பாட்டு அறையா?”
அந்த இடியோசையில் சேது நடுநடுங்கிப் போனான். அறை முழுவதும் கப்சிப்.
ஒருவாறாக ஆசிரியரின் கோபம் தணிந்து தமது இடத்தை நோக்கி நடந்தார்.
இப்படியாகப் பள்ளிப் பருவத்தில் அவனையும் மீறி ஆட்கொண்ட மோர்க் குழம்பு, சேது படிப்பை முடித்துவிட்டு ஒரு வேலையைப் பிடித்துக் கொண்டு சென்னைக்கு வந்த பிறகும் விடவில்லை. புது இடத்தில் முதலில் சில நாட்கள் மோர்க் குழம்பை ருசி பாராமல் தவித்துப் போன சேது, ஹோட்டல்களில் வாரத்தில் ஒரு நாள் மோர்க் குழம்பு இருப்பதை அறிந்து மகிழ்ந்தான். எந்தெந்தப் பேட்டை ஹோட்டலில் எந்தக் கிழமையில் மோர்க் குழம்பு என்பதற்கு அட்டவணையே, தயாரித்துப் பையில் வைத்துக் கொண்டான். திங்கட்கிழமை திருவல்லிக்கேணி செவ்வாய்க்கிழமை மயிலாப்பூர், புதன்கிழமை புரசைவாக்கம், வியாழக்கிழமை வண்ணாரப்பேட்டை, வெள்ளிக்கிழமை வேப்பேரி, சனிக்கிழமை சைதாப்பேட்டை..”
இப்படிப் பல வருஷங்கள் ஹோட்டல் மோர்க் குழம்பையே சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போனவன், “இனி ஹோட்டல் மோர்க் குழம்பை நம்பிப் பயன் இல்லை. வீட்டிலேயே அதற்கான ஏற்பாட்டைச் செய்து கொள்ளவேண்டியதுதான்” என்ற முடிவுக்கு வர வேண்டியதாயிற்று. கடையில் தேவையான சாமான்கள் கிடைக்கும் மோர்க் குழம்பு தயாரிக்க ஆள் தேவைப்பட்டது. கல்யாணம் செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.
பெண்ணைப் பெற்றவர் ஒருவர் சேதுவைக் கண்டு பேசி, பெண் பார்க்கப் போகும் படலம் வரை வந்தது. உறவில் இருந்த கிழவர் ஒருவரைப் பாட்டியுடன் அழைத்துக் கொண்டு போனான்.
டிபன், ஸ்வீட்டும் காரமும் நன்றாக இருந்தன. பெண் லட்சணமாக இருந்தாள். பாடினாள். சேதுவுடன் வந்த பாட்டி, அவனிடம் பெண்ணைப் பற்றி சர்டிபிகேட் கொடுத்தாள். ‘ஜடை, சவுரி இல்லை, அசல்தான். பெண் காலைச் சாய்த்து நடக்கவில்லை.’ மற்ப் பொருத்தங்களும் சரி.
அந்த வீட்டிலிருந்து கிளம்புவதற்குமுன் சேதுவுக்கு அந்தப் பெண்ணைத் தனியாகப் பார்க்கும் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. அவன் அதை நழுவவிடவில்லை.
ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். “உனக்கு மோர்க் குழம்பு நன்றாகப் பண்ண வருமா?”
வெட்கமும் பயமும் சூழ, தரையைப் பார்த்துக் கொண்டிருந்த பெண், சேதுவை மேலும் கீழும் பார்த்தாள். சட்டென்று ஓடி மறைந்தாள்.
சேது தன் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டு ஊருக்குத் திரும்பிய மறுநாள் அவர்களிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. இரண்டாவது தடவையாக ஒருவரிடம் பார்த்ததில், ஜாதகம் சரியில்லாததால் மேற்கொண்டு பேச முடியாமல் இருப்பதாக, காரணம் அதுவல்ல. சேதுவின் மோர்க் குழம்பைப் பற்றிய கேள்வியால் அவன் மூளை வளர்ச்சியைப் பற்றி அந்தப் பெண் சந்தேகப்பட்டதாகப் பின்னர் காதில் விழுந்தது.
அதிலிருந்து பெண் பார்க்கப் போகுமிடத்தில் மோர்க் குழம்பைப் பற்றிக் கேட்பதை விட்டுவிட்டான் சேது. அப்படியும், வந்த இடங்கள் வேறு காரணங்களினால் தட்டிப் போய்க் கொண்டிருந்தன.
கடைசியாக ஓரிடத்துக்குப் போக வேண்டியிருந்தது.
அந்த வீட்டுக்குப் போய், ஆரம்பப் பேச்சுக்கள் நடந்து முடிந்து, டிபன் சாப்பிடும் கட்டம் வந்தது. அந்த நிகழ்ச்சிகள் சேதுவுக்குப் பழக்கமாகி விட்டதால் இலை முன் வந்தமர்ந்தான். சின்னதான நுனி இலையில் இரண்டு மூன்று வடைகள் வந்து விழுந்தன. அவை ஊறிப் பருத்திருந்தன. அவை அருமையான மோர்க் குழம்பில் மூழ்கியிருந்தன என்பது அவற்றின் ஓரங்களில் தெரிந்த அழகிய மஞ்சள் நிறத்தால் தெரிந்தது. தொடர்ந்து, பொன்னிறக் கை ஒன்று பிடித்த கரண்டியிலிருந்து வடைகளுக்கு மோர்க் குழம்பு அபிஷேகம் ஆனதைப் புளகாங்கிதத்துடன் கவனித்தான் சேது.
தன்னை மறந்தான். பரவசமானான். இலையில் ஒரு துளிகூட இல்லாமல் நீர்த்துளி செய்தான்.
“ஹி… ஹி…” என்ற ஒலி கேட்டுத் தலையைத் தூக்கினான்.
“எங்கள் வீட்டில் மோர்க் குழம்புதான் பிரதானமான அயிட்டம். பிரமாதமாகவும் இருக்கும். எல்லாம் மோகனாதான். அவளுக்கு மோர்க் குழம்பு என்றால் உயிர். இது கூட அவள் கையால் ஸ்பெஷலாகச் செய்தது தான்.. ஹி… ஹி…” பெண்ணின் தகப்பனார் வாய் முழுவதையும் காட்டினார்.
சேது வாயடைத்துப் போனான்.
மற்ற விவகாரங்களைப் பற்றிப் பேச்சு வநந்தபோது, “நீங்கள் எது செய்தாலும் சரிதான்” என்று அடித்துச் சொன்னான்.
அப்போதே நிச்சயதார்த்தம் ஆகி, தேதி வைக்கும் வரை முன்னேற்றம் ஏற்பட்டது.
பெண்ணின் தகப்பனார் மோகனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “பதிமூணு வருஷங்கள் ஆகிவிட்டது. ஒரு வேளை சேது மாறிப் போயிருப்பானோ என்று நினைத்தேன். கொஞ்சம்கூட மாறவில்லை. அப்படியே இருக்கிறான். அன்றைக்குப் பரீட் சை ஹாலில் மோர்க் குழம்பு சாதத்தை எவ்வளவு ஆசையுடன் சாப்பிட்டானோ, அதே ஆர்வத்துடன் இன்றைக்கும் சாப்பிடுகிறான்…”
“ஆமாம், அப்பா! சாப்பிடும்போது அவர் முகத்தைப் பார்த்தீர்களோ? மோர்க் குழம்பைப் பார்த்ததுமே அவர் முகம் தாமரையாக மலர்ந்துவிட்டது. ஜகஜஜோதியாகப் பிரகாசித்தது…’
“நான் கவனிக்கவில்லையம்மா. எனக்கு ஒரே பயம்.
எங்கேயாவது என்னை அடையாளம் கண்டுகொண்டு, ‘பாவி, அன்றைக்குப் பரீட்சை ஹாலில் பேப்பரைக் கிழித்துப் போட்டவன்தானே நீ? உன் பெண்ணைப் பண்ணிக் கொள்ளமாட்டேன்’ என்று சொல்லி விடுவானோ என்று நடுங்கிக் கொண்டே இருந்தேன். நல்ல வேளை, மோர்க் குழம்பு என்னைக் கைவிடவில்லை. மோர்க் குழம்பு சேது, இன்னமும் மோர்க் குழம்பு சேதுவாகவே இருக்கிறான். அவனுக்கு அந்த வாத்தியார், என்னை நினைவில்லையா என்று கேட்டு எழுதுகிறேன்…”
“வேண்டாம்பா. கல்யாணத்திலே நாலு நாட்களும் மோர்க் குழம்பே வைத்துப் போடச் சொல்லி, அவரை முழுவதுமாகக் ‘குளிப்பாட்டி’ விட்டுப் பிறகு சொல்லிக் கொள்ளலாம்” என்றாள். வருங்கால மிஸஸ் மோர்க் குழம்பு சேது.

வ.சா.நாகராஜன்/அப்பாவைத் தேடி… – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)