சாய்ரேணு சங்கர்/வெள்ளம்

மேகம் கருத்தது மேகம் கருத்தது
மேவிடும் நீரினில் மேனி பெருத்தது
தாகம் தணித்திடத் தானும் நினைத்தது
தண்ணெணப் பூமியில் பொன்மழை பெய்தது

மயிலினம் ஆடுது மயிலினம் ஆடுது
மஞ்சினம் மின்னியே மத்தளம் கொட்டுது
குயிலினம் எல்லாம் கூட்டிலடங்குது
குளிரது பரவுது குவலயம் நடுங்குது

வானம் திறந்தது வானம் திறந்தது
வையம் செழித்திடப் பொழிந்தது வாரி
தாம்தோம் தரிகிட சந்தந்தனில் நீர்
தாண்டவ மாடிட நிறைந்தது ஏரி!

பாய்ந்தது வெள்ளம் பாய்ந்தது வெள்ளம்
பார்க்கும் இடமெங்கும் பெருநீர் வெள்ளம்
ஓய்ந்தன மாக்கள் ஒடிந்தன மரங்கள்
“ஓ! ஒ!” என்றே பதறுது உள்ளம்

கடலும் கலங்கிடக் கப்பல்கள் மூழ்க
கானிலும் உயிர்கள் சுழன்றே திரிய
அடடா! வீடுகள் உடைந்து சிதறிட
அடைக்கலமின்றி மனிதர் கதறிட

நிறங்களைக் காணோம் பொருட்களைக் காணோம்
நித்திலமெங்கும் நீர்க்காடாச்சு
உறவுகள் காணோம் உடமைகள் காணோம்
ஓர்ந்து அறிவதும் பெரும்பாடாச்சு

அடித்துப் போனது அடித்து போனது
ஆணவம் தனையும் அழித்துப் போனது
பிடித்தல் கூடா பெருமழை வெள்ளம்!
பூதலம் எங்கும் நீரே ஆனது!

வெள்ளங்கள் ஓடிடப் பாதைகள் வேண்டும்
வெள்ளாமை செய்திட ஏரிகள் வேண்டும்
உள்ள இடமெலாம் உயருதே கட்டிடம்?
ஓடும்நீர் ஓட ஏது வெற்றிடம்?

நீரோட்டம் தங்கிடக் காடுகள் உண்டாச்சு
நீரதை அழித்தீர்! உலகம் என்னாச்சு?
போராட்ட வெடியாய்ப் புகையும் கிளம்புது
போட்ட விதைகளை, செடிகளை அழிக்குது

வளர்ந்தது ஆசை, செல்வ வள வேட்டை
வளிமண்டலத்தில் விழுந்தது ஓட்டை
கிளர்ந்தது வெப்பம் காசினி யெங்கும்
காட்டுத்தீ பசித்தீ காமத்தீ என்றும்!

மன்ணெணும் அன்னை வாழ்ந்திடவே
மரங்களின் வளமை வேண்டுமன்றோ
பொன்னென வயல்கள் செழித்திடத்தான்
பூமிக்கு நன்மை சேருமன்றோ
விண்ணுயரக் காடுகள் வளர்ந்திடட்டும்
வீடுகளில் செடிகள் வளம்தரட்டும்
புண்பட்ட பூமி பண்படட்டும்
பொலிவுடன் பசுமை எழில்பெறட்டும்

நதிகளின் தூய்மை காத்திடுங்கள்
நடனமிட்டோட வழி கொடுங்கள்
நிதியது நீராம் அறிந்திடுங்கள்
நிலத்தடி நீரைச் சேமியுங்கள்
கதியது காசினிக் குணர்ந்திடுங்கள்
கார்மழை பெய்திட வளம்பெறுங்கள்
குதித்தோடும் நீராலே கொண்டாட்டமே
குவலயம் வாழ்ந்திடும் எந்நாளுமே

தீவளர்க தீவளர்க தீவளர்கவே!
தீமைகள் தீய்த்தே தீவளர்கவே!
காவியம் விஞ்ஞானம் கணிதமென்றே
கல்வியாம் தனிப்பெரும் தீவளர்கவே!
ஆவியை உருக்கும் பசித்தீயுடன்
ஆணவத்தீ யழியத் தீவளர்கவே!
மேவிடும் அறியாமை இருள்நீக்கியே
மேதினியிலெங்குமே தீவளர்கவே!

கதவுகள் ஜன்னல்கள் திறந்திடுங்கள்
காற்று வந்தின்பமாய்க் கவிபாடட்டும்
உதவிடாப் பொருட்களை உதறிடுங்கள்
உன்னதத் தென்றல்வந் தாடிடட்டும்
விதவித மாசுகள் வெளித்தள்ளிடும்
வாகனம் ஆலைகள் திருத்திடுங்கள்
இதமிலாப் புகைகளுக் கிடமில்லையே
இனியதாம் காற்றுக்கே இடங்கொடுங்கள்

மெய்யிது மெய்யிது வானம் சாட்சி
மேன்மையித் தர்மமே தரும் மாட்சி
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வரெல்லாம்
வானுறை தெய்வத்துக் கிணையாவரே!