கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/சிவபெருமானின் திரிசூலத்தின் பெயர் என்ன?

ஆசிரியர் கலைமகள்………………

திரிசூலத்தை சிவபெருமானுடன் சம்பந்தப்படுத்தி வழிபாட்டுக்கு உரிய ஆயுதமாகப் போற்றி வருகிறோம். பசுபதி முத்திரை பற்றி எழுதியதும் என்னுடைய இனிய நண்பர் திரு இந்திர நீலன் சுரேஷ் அவர்கள் திரிசூலத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கேட்டுக்கொண்டார்!!

ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை அழிக்கும் சக்தியின் அடையாளமாகக் காட்டப்டுகின்றது திரிசூலம்! எனவே இது தீய சக்திகளை அழிக்க வல்லதாகும். அம்பிகை காளி சிவபெருமான் ஆகியோர், இவ் ஆயுதத்தைக் கையில் ஏந்தி இருக்கிறார்கள்.

கிரேக்கப் புராணக் கதைகளைப் படித்தால் திரிசூலம் கிரேக்க கடவுள்களின் கையில் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.கடல் தெய்வமாகவும் வழிபாடு செய்யப்பட்டு வந்திருக்கிறது திரிசூலம். மீன்களைப் பிடிப்பதற்கு எளிதாக மூன்று ஈட்டி முனை போன்ற இந்த சூலாயுதத்தை கடல் வாழ் (கிரேக்கத்தில்) மக்கள் பயன்படுத்தி வந்தார்கள் என்றும் அறிய முடிகிறது.

சென்னையில் திரிசூலம் என்கின்ற பெயரில் ஒரு கோயிலும் சிவபெருமானுக்கு இருக்கிறது. இடைக்கால சோழ மன்னன் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு பின்னர் சுந்தர சோழரால் புதுப்பிக்கப்பட்டது இக்கோயில்!!

இக்கோயிலில் கிபி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் நிறைய உள்ளன. சுரம் என்றால் வளம் நிறைந்த மலை என்று பொருள். வளமான நான்கு மலைகளுக்கு நடுவில் வீற்றிருப்பதால் இறைவனுக்கு திருச்சுரமுடையார் என்றும் பெயர். இந்த திருச்சுரம் என்பது மருவி, பின்னர் திரிசூலமாகி விட்டதாகவும் கூறுகின்றனர். இக்கோவிலில் பூமிக்கு அடியில் திரிசூலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் சொல்வோர் உண்டு!!

தாமிரபரணி நதிக்கரை ஓரம் பிறந்த நாகரிகம் உலகின் முதல் நாகரிகம் என்பதனை தாமிரம் என்ற பெயர் இந்த நதிக்கு சூட்டப்பட்டதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். ஆதிமனிதன் கண்டுபிடித்த முதல் உலோகம் தாமிரம்தான். அந்தத் தாமிரத்தின் பெயரில் ஒரு நதியே அமைந்திருக்கிறது. இங்குதான் ஆதிமனிதன் தோன்றியிருக்க வேண்டும் என்பதை அகழ்வாராய்ச்சிகளும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியின் பொழுது திருசூலத்தை வைத்து மக்கள் வழிபட்டு இருக்கிறார்கள் என்கிற தகவலும் கிடைத்திருக்கிறது.

மகாபாரதம்: வன பர்வ: மார்க்கண்டேய-சமஸ்ய பர்வ: பிரிவு சிவபெருமானின் ஆயுதமான திரிசூலத்தை ” விஜயா ” என்று சொல்கிறது.

சிவனின் ” விஜயா ” என்று பெயரிடப்பட்ட திரிசூலம், வானத்தையும் பூமியையும் ஒளிரச் செய்யும் வகையில் பிரகாசித்தது. கோடிக்கணக்கான நண்பகல் சூரியன்களைப் போலவும், கோடிக்கணக்கான சூரியன்கள் எரியும் நேரத்தில் வெளிப்படும் நெருப்புச் சுடரைப் போலவும் கடுமையானது. அதைத் தடுக்கவோ, தாங்கவோ முடியவில்லை. எதிரிகளை அழிப்பதில் அது வலிமையானது! எல்லா ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளிலும் சிறந்து விளங்கக் கூடியதாக சிவபெருமானின் “விஜயா” சூலாயுதம் விளங்குவதாக சிவமகா புராணம் கூறுகிறது.

திரிசூலம் வழிபாட்டின் மூலம் எம பயம் இல்லாமல் இருக்கலாம். கெட்ட கனவுகள் வருவதும் தவிர்க்கப்படும் என்கிற நம்பிக்கையும் மக்களிடையே இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் திரிசூலத்தை யார் வணங்குகிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள்.

நேபாளம் ராணுவக் கொடியில் திரிசூலம் இடம்பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.