
- தோற்றம்
‘புதுக்கவிதை’ என்ற பெயர் அநேகருக்குப் பிடிக்கவில்லை, இந்தப் பெயரைக் கண்டு பலர் மிரளுகிறார்கள். கேலி செய்ய வேண்டும் என்ற தூண்டுதலை இது சிலருக்கு ஏற்படுத்துகிறது. இதன் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பார்த்துக் குழப்பம் அடைகிறவர்கள் பலர்.
காலவேகத்தில் கவிதைத்துறையில் இயல்பாக ஏற்பட்ட ஒரு பரிணாமம் இது. தமிழ்க் கவிதையில் மறுமலர்ச்சி பெற்ற இப்புதுமைக்கு ‘புதுக்கவிதை’ எனும் பெயர் 1960 களில் தான் சேர்ந்தது ‘நியூ பொயட்ரி’ என்றும், ‘மாடர்ன் பொயட்ரி’ என்றும் ஆங்கிலத்தில் கூறப்படுவதை ஒட்டி, தமிழில் ‘புதுக்கவிதை’ என்ற பெயர் இம்முயற்சிக்கு இடப்பட்டது.
ஆயினும் ஆரம்பத்தில், யாப்பு முறைகளுக்கு கட்டுப்படாமல், கவிதை உணர்வுகளுக்கு சுதந்திரமான எழுத்து உருவம் கொடுக்கும் இப்படைப்பு முயற்சி ‘வசன கவிதை’ என்றே அழைக்கப்பட்டது. பின்னர், ‘யாப்பில்லாக் கவிதை’, ‘இலகு கவிதை’, ‘கட்டில்டங்காக் கவிதை’ (Free Verse) போன்ற பெயர்களை இது அவ்வப்போது தாங்க நேரிட்டது.
புதுக்கவிதை என்பதில் மிரட்சிக்கோ பரிகாசத்துக்கோ, குழப்பத்துக்கோ எதுவும் இடம் இல்லை.
முன்பு பழக்கத்தில் இருந்து வருகிற-மரபு ரீதியாக அமைந்த-ஒன்றிலிருந்து மாறுபட்டு (அல்லது அதை மீறித்) தோன்றுவது புதுசு (புதிது). மரபு ரீதியான, யாப்பு இலக்கணத்தோடு ஒட்டிய கவிதைகளிலிருந்து மாறுபடும் இக்கவிதைப் படைப்பு புதுக்கவிதை எனப் பெயர் பெற்றது பொருத்தமேயாகும். பார்க்கப்போனால், கவி சுப்பிரமணிய பாரதி தனது எல்லாக் கவிதைகளையுமே ‘புதுக்கவிதை’ என்றுதான் குறிப்பிடுகிறார்- அந்நாள் வரை இருந்து வந்த தமிழ்க் கவிதைகளிலிருந்து அவை மாறுபட்ட தன்மைகளைப் பெற்ற படைப்புகளாக விளங்கியதால்,
‘சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
சொற்புதிது, சோதிமிக்க
நவகவிதை’
என்று பாரதியார் தன் கவிதைகளைப் பற்றிப் பெருமையோடு பேசுகிறார்.
தனது கவிதா உணர்வுகளையும் உள்ளத்தின் எழுச்சிகளையும், கனவுகள் கற்பனைகள் எண்ணங்கள் அனைத்தையும் மரபு ரீதியான யாப்பு முறைகளுக்கு உட்படும்-கவிதைகளின் விதம் விதமான வடிவங்களில் வெளிப்படுத்திய கவிபாரதி, இலக்கணத்துக்கு உட்படாத புதிய வடிவத்திலும் உருக்கொடுக்க முயன்று வெற்றியும் கண்டார். அதுதான் ‘காட்சிகள்’ என்ற வசன கவிதைத் தொகுப்பு.
பாரதி தன் எண்ணங்களை எழுத்து ஆக உருவாக்குவதற்குப் பல சோதனைகளில் ஆர்வம் கொண்டிருந்தார் என்பது அவரது படைப்புகளை ஆராய்வோருக்குப் புரியும். கவிதைகளில் பல சோதனைகள் செய்தது போலவே, வசனத்தில் தராசு, ஞானரதம், நவதந்திரக் கதைகள் போன்ற புதிய முயற்சிகளை அவர் செய்திருக்கிறார். அதே தன்மையில், வசனத்தை மீறிய, ஆயினும் கவிதையின் பூரணத்துவத்தை எய்தாத ஒரு முயற்சியாக அவர் படைத்துள்ள வசன கவிதைகளே ‘காட்சிகள்’. எனவே, கவி சுப்பிரமணிய பாரதிதான் தமிழ்ப் ‘புதுக்கவிதை’யின் தந்தையாவார்.
பாரதியின் ‘காட்சிகள்’ வசனம்தான்; அவரது படைப்புகளைத் தொகுத்துப் பிரசுரித்தவர்கள் தவறுதலாக அவற்றையும் கவிதைகளோடு இணைத்து, வசன கவிதை என்று வெளியிட்டுவிட்டார்கள் என்று அந்தக் காலத்தில் ஒரு சிலர் எதிர்க்குரல் கொடுத்தது உண்டு.
பாரதி ‘காட்சிகள்’ என்ற தலைப்பில் எழுதியிருப்பது வெறும் வசனம் அல்ல. தவறுதலாகக் கவிதைத் தொகுதியில் இடம் பெற்றுவிட்ட வசன அடுக்குகள் என்று அதைக் கொள்வதும் சரியாகாது. என்றோ எழுதப்பட வேண்டிய கவிதைச் சித்திரங்களுக்காக அவ்வப்போது குறித்து வைக்கப்பட்ட துணுக்குகள் என்று மதிப்பிடுவதும் பொருந்தாது. பாரதியின் கட்டுரைகள் என்ற பெயரில் துண்டு துணுக்குகள், எண்ணச் சிதறல்கள் பற்பல காணப்பட்ட போதிலும், ‘காட்சிகள்’ முழுமைபெற்ற-நன்கு வளர்க்கப்பட்ட-சிந்தனைக் கட்டுமானங்களாகவும், சொல் பின்னல்களாகவுமே அமைந்துள்ளன.
தனது எண்ணங்களுக்கும், அனுபவங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் வெவ்வேறு விதமான வடிவங்கள் கொடுக்க ஆசைப்பட்ட பாரதிக்குக் கவிதை ‘தொழில்’; இதயஒலி; உயிர் மூச்சு. என்றாலும், கவிதை சில சமயங்களில் சக்தியை இழந்து விடுகிறது. வசனம் அநேக சமயங்களில் கவிதையை விட அதிகமான வலிமையும் அழகும் வேகமும் பெற்று விடுகிறது. இதை பாரதியே உணர்ந்திருக்கிறார். இதற்கு ‘பாஞ்சாலி சபதம்’ நெடுங்கவிதையில் வருகிற ‘மாலை வருணனை’ எனும் கவிதைகளும், பாரதி எழுதியுள்ள ‘ஸூர்யாஸ்தமனம்’ என்ற வசனப் பகுதியும் நல்ல எடுத்துக்காட்டு ஆகும். ஆகவே அவர் ‘வசன கவிதை’ என்ற புதிய சோதனையை மேற்கொண்டார்.
மேலும் பாரதி ‘வடிவம்’ (Form) பற்றி தெளிவாக சிந்திக்கிறார் என்று கொள்ள வேண்டும். ‘வசனகவிதை’யில் வருவது இது-
“என் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது.
அதற்கு ஒரு வடிவம், ஓரளவு ஒரு நியமம்
ஏற்பட்டிருக்கின்றது
இந்த நியமத்தை, அறியாதபடி சக்தி
பின்னே நின்று காத்துக் கொண்டிருக்கிறாள்.
மனிதஜாதி இருக்குமளவும் இதே தலையணை
அழி வெய்தாதபடி காக்கலாம்.
அதனை அடிக்கடி புதுப்பித்துக் கொண்டிருந்தால்
அந்த வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும்,
புதுப்பிக்கா விட்டால் அவ்வடிவம் மாறும்,
வடிவத்தைக் காத்தால்,
சக்தியை காக்கலாம்;
அதாவது, சக்தியை அவ்வடிவத்திலே காக்கலாம்;
வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை
எங்கும், எதனிலும், எப்போதும் எல்லா விதத்
தொழில்களும் காட்டுவது சக்தி.
வடிவத்தைக் காப்பது நன்று, சக்தியின் பொருட்டாக.
சக்தியைப் போற்றுதல் நன்று வடிவத்தைக் காக்குமாறு.
ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவோர்
சக்தியை இழந்து விடுவர்.” (‘சக்தி’)
பாரதி தன்னுள் லீலைகள் புரிந்த சக்தியைப் போற்றினார். சக்தியை விதவிதமான வடிவங்களில் துதித்தார். பாம்புப் பிடாரன் பற்றி பாரதி கூறுவது அவருக்கும் பொருந்தும்.
“இஃது சக்தியின் லீலை,
அவள் உள்ளத்திலே பாடுகிறாள். அது
குழலின் தொளையிலே கேட்கிறது.
பொருந்தாத பொருள்களைப் பொருத்திவைத்து
அதிலே இசையுண்டாக்குதல் — சக்தி”
இப்படி ‘பொருந்தாத பொருள்களைப் பொருத்தி வைத்து அதிலே இசையுண்டாக்கும்’ முயற்சிதான் பாரதியின் வசனகவிதைப் படைப்பு ஆகும்.
“கருவி பல, பாணன் ஒருவன்.
தோற்றம் பல, சக்தி ஒன்று.”
பாரதி என்னும் பாணன், தன்னுள் ஜீவனுடன் பிரவாகித்துக் கொண்டிருந்த சக்திக்கு புறத்திலே பலப்பல தோற்றங்கள் கொடுக்க விரும்பியபோது அவருக்குப் பயன்பட்ட கருவிகள் பல. முக்கியமானது கவிதை. வசனமும் வசன கவிதையும் பிற.
பாம்புப் பிடாரன் குழல் ஊதும் ஆற்றலை பாரதியின் வசன கவிதைச் சொல்லமைப்புக்கு ஒப்பிடலாம். பாரதி சொல்கிறார்:
“இதோ பண்டிதன் தர்க்கிப்பது
போலிருக்கின்றது.
ஒரு நாவலன் பொருள் நிறைந்த
சிறிய சிறிய வாக்கியங்களை
அடுக்கிக் கொண்டு போவது போலிருக்கிறது,
இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்?
… பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக
வாசித்துக் கொண்டு போகிறான்.”
பாரதியின் வசனகவிதை முயற்சிகளும் ‘பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவதும்’ பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக’ வாசிப்பதும் ஆகத்தான் அமைந்துள்ளன.
இந்த விதமான ‘வசனகவிதைப்’ படைப்பில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை பாரதிக்கு ஏன், எப்படி ஏற்பட்டிருக்கக் கூடும் என்று இன்று சர்ச்சை செய்வது சுவாரஸ்யமான யூகங்களுக்கே இடமளிக்கும். எனினும், பேராசிரியர் பி.மகாதேவன் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அபிப்பிராயமாகவே தோன்றுகிறது.
பாரதி ரவீந்திரநாத் தாகூருடன் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டினார்; தாகூரின் ‘கீதாஞ்சலி’ மாதிரி அவரும் இதை எழுதினார் என்று மகாதேவன் சொல்லியிருக்கிறார்.
தாகூரின் ‘கீதாஞ்சலி’ முதலிய படைப்புகளை ரசித்த பாரதி அவற்றைப்போல் வசனகவிதை படைக்க முன்வந்திருக்கலாம். அக்காலத்தில் அவருக்கு வால்ட் விட்மனின் ‘லீவ்ஸ் ஆவ் கிராஸ்’ பாடல்களும் அறிமுகமாகி இருந்தன. மேலை நாட்டு நல்ல கவிஞர்களின் திறமையை அறிந்து கொள்ளத் தவறாத பாரதி விட்மனையும் அறிமுகம் செய்து கொண்டிருந்தார். இதற்கு பாரதியின் கட்டுரையில் சான்று கிடைக்கிறது. வால்ட் விட்மன் பற்றி பாரதி இவ்வாறு எழுதியிருக்கிறார்- “வால்ட் விட்மன் என்பவர் சமீப காலத்தில் வாழ்ந்த அமெரிக்கா (United States) தேசத்துக்கவி. இவருடைய பாட்டில் ஒரு புதுமை என்னவென்றால், அது வசனநடை போலேதான் இருக்கும். எதுகை, மோனை, தளை ஒன்றுமே கிடையாது. எதுகை மோனையில்லாத கவிதைதான் உலகத்திலே பெரிய பாஷைகளில் பெரும் பகுதியாகும். ஆனால், தளையும் சந்தமும் இல்லாத கவிதை வழக்கமில்லை. வால்ட் விட்மான், கவிதையை பொருளில் காட்ட வேண்டுமே யல்லாது சொல்லடுக்கில் காட்டுவது பிரயோஜனமில்லை யென்று கருதி ஆழ்ந்த ஓசை மாத்திரம் உடையதாய் மற்றப்படி வசனமாகவே எழுதிவிட்டார். இவரை ஐரோப்பியர், காளிதாஸன், கம்பன், ஷேக்ஸ்பியர், மில்டன், தாந்தே, கெத்தே முதலிய மகாகவிகளுக்கு ஸமான பதவியுடையவராக மதிக்கிறார்கள். குடியாட்சி, ஜனாதிகாரம் என்ற கொள்கைக்கு மந்திர ரிஷிகளில் ஒருவராக இந்த வால்ட் விட்மானை ஐரோப்பிய ஜாதியார் நினைக்கிறார்கள். எல்லா மனிதரும், ஆணும் பெண்ணும் குழந்தைகளும், எல்லாரும் ஸமானம் என்ற ஸத்யத்தை பறையடித்த மஹான்களில் இவர் தலைமையானவர்.”
புல்லையும் மண்ணையும் நீரையும் மனிதர்களையும் நாடுகளையும் உற்சாகத்தோடு பாடிப் பெருமைப்பட்ட விட்மனைப் போல பாரதியும் காற்றையும் கயிற்றையும் மணலையும் விண்ணின் அற்புதங்களையும் மண்ணின் மாண்புகளையும் போற்றி, ‘பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கி’ தர்க்கித்துக் கொண்டு போக விரும்பியிருக்கலாம். பாரதத்தின் பழங்கால ரிஷகளைப் போல, உபநிஷத் கர்த்தாக்களைப் போல பாரதியும் ஒளியை, வெம்மையை, சக்தியை, காற்றை, கடலை, ஜகத்தினைப் போற்றிப் புகழ இப்புதிய வடிவத்தைக் கையாண்டிருக்கலாம்.
அது எவ்வாறாயினும், தமிழுக்குப் புதிய வடிவம் ஒன்று கிடைத்தது. பாரதியின் வசனகவிதை இனிமை, எளிமை, கவிதை மெருகு, ஓட்டம் எல்லாம் பெற்றுத் திகழ்கிறது. இதற்கு ஒரு உதாரணமாகப் பின் வருவதைக் குறிப்பிடலாம்.
“நாம் வெம்மையைப் புகழ்கின்றோம்,
வெம்மைத் தெய்வமே ஞாயிறே, ஒளிக்குன்றே,
அமுதமாகிய உயிரின் உலகமாகிய
உடலிலே மீன்களாகத் தோன்றும்
விழிகளின் நாயகமே
பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே,
வலிமையின் ஊற்றே, ஒளி மழையே, உயிர்க்கடலே,
சிவனென்னும் வேடன் சக்தியென்னும்
குறத்தி உலகமென்னும் புனங்காக்கச்
சொல்லி வைத்து விட்டுப் போன விளக்கே,
கண்ணனென்னும் கள்வன் அறிவென்னும்
தன்முகத்தை மூடி வைத்திருக்கும்
ஒளியென்னும் திரையே.
ஞாயிறே, நின்னைப் பரவுகின்றோம்.” (ஞாயிறு புகழ்)
இது வெறும் வசனம்தானா? இல்லை, இது கவிதைதான் என்று எப்படிச் சொல்ல முடியும்?
வசனத்தின் வறண்ட, அறிவு பூர்வமான சாதாரண இயல்பை மீறியது. கவிதையின் தன்மையைப் பூரணமாகப் பெறாதது. எனவேதான் ‘வசனகவிதை’ என்று பெயர் பெறுகிறது.

One Comment on “வல்லிக்கண்ணன்/புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”
Comments are closed.