வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

  1. இரட்டையர்

பாரதி தோற்றுவித்த வசனகவிதை முயற்சி பின்னர் 1930களின் பிற்பகுதியில்தான் துளிர்விடத் தொடங்கியது. பாரதிக்குப் பிறகு புதுக்கவிதை முயற்சியில் ஆர்வத்துடன் முதன் முதலாக ஈடுபட்டவர் ந. பிச்சமூர்த்திதான்.
சிறுகதைத் துறையில் குறிப்பிடத் தகுந்த வெற்றி பெற்றிருந்த ந. பி., ‘பிக்ஷு’ என்ற பெயரில் கவிதைகள் எழுதலானார். அவர் எழுதிய முதல் கவிதை எது, அது எந்தப் பத்திரிகையில் பிரசுரமாயிற்று என்பது இப்போது தெரியவில்லை.
(‘நான் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தது 1934 ‘மணிக்கொடி’யில்; ‘காதல்’ முதல் கவிதை. தொடர்ந்து ‘ஒளியின் அழைப்பு’, ‘கிளிக்குஞ்சு’, ‘பிரார்த்தனை’, ‘தீக்குளி’ முதலியவை 1934-ம் வருஷ ‘மணிக்கொடி’ யிலேயே பிரசுரமாயின. 1934 முதல் நான் புதுக்கவிதை தொடர்ந்து எழுதியிருக்கிறேன்’ என்று ந.பி. ஒரு கடிதம் மூலம் பின்னர் அறிவித்தார்.)
நான் முதன் முதலாகப் பார்க்க நேர்ந்த பிக்ஷுவின் கவிதை ‘கிளிக்கூண்டு’, 1937-ம் வருடம் ‘பிரசுரமான அருமையான இலக்கிய மலரான ‘தினமணி’ ஆண்டு மலரில் (புதுமைப் பித்தன் பொறுப்பில் தயாரானது அது) வெளிவந்தது.

இருளின் மடல்கள் குவிந்தன,
வானத்து ஜவந்திகள் மின்னின.
காவிரி நாணல்கள் காற்றில் மயங்கின,
மேற்கே சுடலையின் ஓயாத மூச்சு,
காலன் செய் ஹோமத்தில் உடல் நெய்யாகும் காட்சி,
கிழக்கே பெண்களின் மட்டற்ற பேச்சு,
கட்டற்ற சிரிப்பு
காவிரி மணலில் குழந்தைகள் கொம்மாளம்…”

இப்படி இனிமையாக ஆரம்பிக்கும் அழகான வசனகவிதை அது. (‘கிளிக்கூண்டு’ என்ற இக்கவிதை, 1962-ல் சி.சு. செல்லப்பா தயாரித்த எழுத்துப் பிரசுரம் ‘புதுக்குரல்கள்’ 1964-ல் வெளியிட்ட ந. பிச்சமூர்த்தியின் ‘வழித்துணை’ ஆகிய இரண்டு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. பின்னர் பிரசுரம் பெற்ற ‘பிச்சமூர்த்தி கவிதைகள்’ என்ற தொகுப்பிலும் உள்ளது.)
“சம்பிரதாயமான யாப்பு முறைகளுக்கு உட்படாமல் கவிதையைக் காணும் புதுக்கவிதை முயற்சிக்கு, யாப்பு மரபே கண்டிராத வகையில் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் எழுதிய ‘புல்லின் இதழ்கள்’ என்ற கவிதைத் தொகுப்புத்தான் வித்திட்டது. அதைப் படித்தபோது கவிதையின் ஊற்றுக்கண் எனக்குத் தெரிந்தது. பின்னர் பாரதியின் ‘வசனகவிதை’யைப் படிக்க நேர்ந்தது. என் கருத்து வலுவடைந்தது. இவற்றின் விளைவாக என் உணர்ச்சிப் போக்கில் இக்கவிதைகளை எழுதினேன்” என்று ந.பி. கூறுகிறார்.
வசனகவிதை ரீதியில் கவிதை எழுதுகிறபோதே, மரபு வழிக்கவிதை போல் தோற்றம் காட்டுகிற, ஓசை நயமும் செவிநுகர் செஞ்சொல் ஓட்டமும் நிறைந்த கவிதை இயற்றுவதிலும் பிக்ஷு நாட்டம் கொண்டிருந்தார். 1937 இறுதியில் ‘மணிக்கொடி’யில் பிரசுரமான ‘அக்கா குருவி’ இதற்கு நல்ல உதாரணம் ஆகும். ‘வசனகாவியம்’ என்றுதான் அது அச்சாயிற்று.

சித்திரைச் சூரியன் செஞ்சூலம் பாய்ச்சலால்
ஆற்றுமணல் வெள்ளம் அனலாகக் காய்ந்தது;
பத்தரை மாற்றுச் சொர்ணப்பொடி போல்ரவி
ஏற்ற மணல்காடு அங்கங்கு மின்னிற்று.
செழிப்புற்ற தோட்டமும் பாவீனும் ஏற்றமும்,
பேணாது பொங்கிய கவிஞன் கனவைப் போல்
எழில் மண்டித் தூங்கும் விரிசடை மரங்களும்
நாணாத பச்சைக்கை நீண்டு பரவல்போல
வானப் பகைப்புல சித்திர மூங்கிலும்
மொக்கின் வரிசையும் மலர்களின் சூழ்ச்சியும்
கானமே உயிர்மூச்சாய்க் கொள்ளும் பறவையும்
கொக்கின் வர்ணங்கொள் கரையோர நாணலும்…”

இவ்வாறு மேலே மேலே வளர்கிறது கவிதை. ‘துன்பத்தில் அக்காவுக்கென்றென்றும் ஏங்கும்’ ஒற்றைக் குயிலின் சோகத்துடன் முடிகிறது.
அதே காலகட்டத்தில்தான் கு.ப. ராஜகோபாலனும் கவிதை முயற்சியில் ஈடுபட்டார். அவரும் சிறுகதையில் சாதனைகள் புரிந்தவர்தான்.
கு.ப.ரா. வின் வசனகவிதைகள் பிக்ஷுவின் கவிதைகளினின்று தொனியிலும், சொல்லும் பொருளிலும் மாறுபட்டிருந்தன.

ஏர் புதிதா?

முதல் மழை விழுந்ததும்
மேல் மண் பதமாகி விட்டது.
வெள்ளி முளைத்திடுது, விரைந்து போ, நண்பா!
காளைகளை ஓட்டிக் கடுகிச் செல், முன்பு!
பொன் ஏர் தொழுது, புலன் வழிபட்டு,
மாட்டைப் பூட்டி
காட்டைக் கீறுவோம்!
ஏர் புதிதன்று, ஏரும் நுகத்தடி, கண்டது,
காடு புதிதன்று, கரையும் பிடித்ததுதான்!
கை புதிதா, கார் புதிதா? இல்லை !

நாள் தான் புதிது, நட்சத்திரம் புதிது!
ஊக்கம் புதிது, உரம் புதிது!

மாட்டைத் தூண்டி, கொழுவை அழுத்து.
மண் புரளும் மழை பொழியும்!
நிலம் சிலிர்க்கும் பிறகு: நாற்றும் நிமிரும்.
எல்லைத் தெய்வம் நிலம் காக்கும், கவலையில்லை!

கிழக்கு வெளுக்குது!
பொழுதேறப் பொன் பரவும் ஏரடியில்
நல்ல வேளையில் நாட்டுவோம் கொழுவை

பெண்மையை வியக்கும், பெண்ணை எண்ணி ஏங்கும், அகத்துறைக் கவிதைகளையே கு.ப.ரா. அதிகம் எழுதினார். ‘கருவளையும் கையும்’, ‘பெண்ணின் பிறவி ரகசியம்’, ‘விரகம்’ போன்ற பல இனிய கவிதைகள் ரசிகர்களுக்கு மகிழ்வூட்டும் படைப்புக்கள் ஆகும்.
கிராமியக் காதலர்கள் பற்றி, கிராமியப் பாங்கான முறையில் கவிதை எழுதுவதிலும் கு.ப.ரா. உற்சாகம் காட்டினார். நல்ல வெற்றியும் கண்டார்.அவரது அந்த ஆற்றலுக்கு ஒரு உதாரணம் ‘ராக்கி நெனப்பு’. (1939 – மணிக்கொடி, ஏப்ரல்15)

குட்டி அவ என்ன சோக்கு
என்ன ‘சோரு’ தெரியுமா?
தீண்டாத சாதியவ
கலியன் சாம்பான் பொண்ணுடா!
பட்டிக்குச்சு மோட்டு மேலே
பூத்த பறங்கி போலே
ஏண்டா அங்ஙணெ போயி பொறந்தா
கட்டுக் கொண்டெக்காரி?
மட்டசாதி ஈனசாதி
எண்ணு ஆர்ரா சொன்னவென்?
அவனெக் கொண்டு அவமுன்னே
நிறுத்தி யல்ல பாக்கணும்!
கெட்ட பயமவடா அவ
என்ன மயக்கு மயக்கரா!
மவராசி போலே அவ
மவா ராங்கிக்காரி!
ஓடக்கெர மரத்துங்கீளே
உருமத் துநேரம்
மாட்டை ஓட்டி மேயவுட்டு
படுத்திருக்கையிலே

கோடேவெயிலு காலுங்கீளே
கொளுத்திச் சுட்டுப் பொசுக்க
பாட்டை வெளியே போன ராக்கி
அங்கே வந்து ஒதுங்ணா!
வேத்துக் கொட்டி வெள்ளேச்சேலே
மேலே ஓட்டிப்போயி
அள்ளிச் சொருவியிருந்த மயிரு
அவுந்து மேலே கொட்டி
நேத்து தாண்டா அவளே கிட்டே
பாத்து சொக்கிப் போனேன்!
கள்ளிப் பசப்பிப் பேரைக் கேட்டா
குனிஞ்சு நின்னு சிரிச்சா!
அடபோடா – நீ யென்ன
கண்டே அந்த அளவே?
பொளுதே மறந்தேன் போக்கை மறந்தேன்
பெறப்பெக் கூட மறந்தேன்
மொடவன் பேலே மரத்துங்கீளே
பாவிமய மாயம்
உளந்து கெடந்தேன், பொச்சாய
ஆத்தா வந்து பாத்தா!
ராக்கி நெனப்பு ராக்கி சிரிப்பு-

அது என்ன போடா-
ராப்பவலா எந்நேரம்
வேறே நெனப்பு இல்லே!
பாக்கி நாளு என்னா செய்வேன்
சொல்லு பாப்பம் சொக்கா!
சப்புன்னு இருக்கு சீவன்
செத்துப் போனாத் தேவலாம்,

இதேபோல ‘கள்ளுப் போனா போகட்டும் போடா எனக்கு சொக்கி இருக்கா சொக்கா!’ என்று முடியும் ரசமான கவிதை ஒன்றும் உண்டு.

வல்லிக்கண்ணன்/புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)