புகைவண்டி நிலையம்

*

ஆர். வத்ஸலா

அவன் காத்துக் கொண்டிருக்கிறான்

நேற்றிரவு முதல்

கோப்பை கோப்பையாக

ரயில் நிலையக் கடை தேநீரை குடித்துக் கொண்டு

அவன் மனைவி பிறந்த ஊரிலிருந்து

இன்று காலை தான் வரும் வண்டி என்றறிந்திருந்தாலும்

நெஞ்சு படபடக்க

கை பெஞ்சில் தப்புத் தாளம் போட

திருமணமான இரண்டாண்டுக்குள் மூன்று முறை

அவள் கோபித்துக் கொண்டு போயிருக்கிறாள்

இப்படி

ஒவ்வொரு முறையும் இவனுடைய இமாலயத் தவற்றினால்

என்று இவன் ஒப்புக் கொள்வான்

மனதிற்குள்

மன்னிப்பு கேட்டால் மட்டுமே

திரும்பப் போவதாக சொல்லிப் போவாள்

அது இவனால் இயலாத ஒன்று

முதல் தடவை திருமணமான புதிதென்பதால்

இவனுடைய காதலொழுகும் மின்னஞ்சலில் மயங்கி

திரும்பிவிட்டாள்

பின் விழித்துக் கொண்டு விட்டாள்

அடுத்த முறை நண்பனை விட்டு

தனக்கு ஏக ஜுரமென்று பொய் குறுஞ்செய்தி

அனுப்ப வைத்து அவளை வரவழைத்து

வாங்கிக் கட்டிக் கொண்டான்

இம்முறை இவ்விரண்டும் பலிக்காதென்பதால்

வேறு வழியை கடை பிடித்தான்

நேற்று மின்னஞ்லில் சொல்லியிருந்தான்

நான் குரியரில் கையெழுத்து போட்ட ஒரு வெற்று காகிதம்

அனுப்பியுள்ளேன்

அதில் உனக்கு வேண்டியபடி எழுதிக் கொண்டு

பின்னர் கிழித்துப் போட்டுவிடு

காத்துக் கொண்டிருக்கிறான்

2 Comments on “புகைவண்டி நிலையம்”

Comments are closed.