திரு அருட்பா/திருவடிப் புகழ்ச்சி

பரிமிதா தீதம் பரோதயம் பரகிதம்
பரபரீணம் பராந்தம்
பரமாற் புதம் பரம சேதனம் பசுபாச
பாவனம் பரம மோட்சம்
பரமானு குணநவா தீதம் சிதாகாச
பாஸ்கரம் பரம போகம்
பரிபாக வேதன வரோ தயானந்த
பதபாலனம் பரம யோகம்

பரம சாத்திய அதீதானந்த போக்கியம்
பரிகதம் பரிவேத் தியம்
பரகேவலாத் விதானந் தானுபவ சத்த
பதாக்ர சுத்த பலிதம்
பரம சுத்தாத் விதானந்த அனுபூ திகம்
பரிபூத சிற்குணாந்தம்,
பரமசித்தாந்த நிகமாந்த சமரச சுத்த
பரமானுபவ விலாசம்:

தரமிகும் சர்வசா திட்டான சத்தியம்
சர்வஆனந்த போகம்
சார்ந்த சர்வாதார சர்வமங்கள சர்வ
சத்திதரம் என் றளவிலாச்
சகுண நிர்க்குணமுறு சலட்சண விலட்சணத்
தன்மை பலவாக நாடித்
தம்மைநிகர் மறையெலாம் இன்னும் அளவிட
நின்ற சங்கரன் அநாதி யாதி

சாம கீதப் பிரியன் மணிகண்ட சீகண்ட
சசிகண்ட சாம கண்ட
சயசயவெனும் தொண்டர் இதயமலர் மேவிய
சடாமகுடன் மதன தகனன்
சந்திர சேகரன் இடபவாகனன் கங்கா
தரன் சூலபாணி இறைவன்
தனிமுதல் உமாபதி புராந்தகன் பசுபதி
சயம்பு மாதேவன் அமலன்

தாண்டவன் தலைமாலை பூண்டவன் தொழும்.
அன்பர் தங்களுக்கு அருள் ஆண்டவன்
தன்நிகரில் சித்தெலாம் வல்லவன் வடதிசைச்
சைலமெனும் ஒரு வில்லவன்
தக்ஷணா மூர்த்தி அருண்மூர்த்தி புண்ணிய மூர்த்தி
தகும் அட்டமூர்த்தி யானோன்
தலைமைபெறு கணநாயகன் குழகன் அழகன்
மெய்ச்சாமி நந் தேவதேவன்

சம்பு வேதண்டன் பிறப்பிலான் முடிவிலான்
தாணு முக்கண்க ளுடையான்
சதுரன் கடாசல உரிப் போர்வையான்.
செந்தழல் கரத்தேந்தி நின்றோன்
சர்வகாரணன் விரற் காலகாலன் சர்வ
சம்பிரமன் சர்வேச் சுரன்
தகைகொள் பரமேச்சுரன் சிவபிரான் எம்
பிரான் தம்பிரான் செம்பொற் பதம்