
டெக்ஸஸ் – ஆஸ்டின் நகரில் கலாவின் அத்தை பேத்திக்குக் கல்யாணம் – குபெர்ட்டினோவிலிருந்து டொரொண்டோ போகிற வழியில் ஒரு நாள் ஆஸ்டினில் தங்கி, கல்யாணம் அட்டெண்ட் பண்ணிவிட்டு, டொரொண்டோ செல்வதாகத் திட்டம்.
ஆஸ்டினில் இருந்து டொரொண்டோ செல்ல டைரக்ட் ஃப்ளைட் மதியம் 12 மணிக்குப் பிறகு கிடையாது என்பதாலும், அன்றே டொரொண்டோ செல்ல வேண்டியிருந்ததாலும், மாலை 4 மணி ஃப்ளைட்டில் ஆஸ்டினிலிருந்து ஹூஸ்டன் சென்று (40 நிமிட விமானப் பயணம்), 6 மணிக்கு ஹூஸ்டன் – டொரொண்டோ ஃப்ளைட்டில் செல்வதற்கான டிக்கட்டுகள் கையில் தயாராக வைத்திருந்தோம்.

சனிக்கிழமை மதியம் 3.30 மணிக்கு, சான் ஃப்ரான்சிஸ்கோ விலிருந்து, ஆஸ்டின் வந்து விட்டோம். யுனைடட் ஏர்வேஸ் ஏர்ஹோஸ்டஸ் புன்னகையுடன் ஒரு சின்ன பேக்கட் சிப்ஸும், ஒரு கிளாஸ் ஆப்பிள் ஜீஸும் குடுத்து, புன்னகையைக் குறைத்துக்கொண்டாள்! நல்ல வேளையாக இட்லிபொடி பிரட்டிய மெந்திய தோசை கையோடு கொண்டு வந்திருந்தோம். ‘ஆகாயத்தில் நம்ம தோசைக்குத் தனி சுவை வந்துவிடுமோ’ என்று நான் கவிதைத்துவமாகச் சொல்ல, ‘உங்களுக்குப் பசி, வேறொன்றுமில்லை’ எனக் கலா என் கற்பனைக்குத் தடை போட, பக்கத்திலிருந்த வெள்ளைக்காரப் பெண்மணி, சிப்ஸை மெதுவாக மென்றுகொண்டிருந்தார். ஆஸ்டின் ஏர்போர்ட்டில் கலாவின் தம்பிக்காகக் காத்திருந்து, அவனுடன் ஒரு கார் வாடகைக்கு எடுத்துக்கொண்டு, கூகிள் மேப் வழி காட்ட, ஒரு மணி நேரத்தில் ‘மெஹந்தி’ நடக்கும் இடம் வந்து சேர்ந்தோம்.

நூறு பேர் – உறவினர்கள், நண்பர்கள் என நம்ம ஊர் மாதிரியே ஒரே பேச்சும், சிரிப்புமாய் அந்த இடம் கல்யாண களை கட்டியிருந்தது. ‘சாட்’ ஐட்டம்ஸ், காப்பி, டீ வரவேற்றது. சூப்பர் சிங்கர் புகழ் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் ஒரு பெண் கரோக்கியில் ராஜா, ரெஹ்மான், எம் எஸ் வி பாடல்களை ஆடிக்கோண்டே பாடினர். ‘எந்த ஊரு என்றாலும், அது நம்மூருக்கீடாகுமா?’ பாடல் பெற்ற வரவேற்பு, அங்குள்ளவர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.

இறுதியில் குத்துப்பாட்டுகளுக்கு -அண்ணாத்தே ஆடுறார், தண்ணீத்தொட்டி தேடி வந்த பாடல்கள் – எல்லோரும் ஆடினார்கள். தனி அறையில் மெஹந்தி இட்டுக்கொள்ள பெண்கள் – சில ஆண்களும் – வரிசையில் காத்திருந்தார்கள். டின்னர் வெஜ் புலாவ், நூடுல்ஸ், உப்புமா, சட்னி, சாம்பார், காஜு கத்லி, தயிசாதம் என அமர்க்களமாக இருந்தது. வெளிநாட்டில், நண்பர்களுடைய உதவியும், அன்பும் சொல்லி மாளாது. தங்களுக்குள் ஒரு சொந்த ஊரை அமைத்துக்கொண்டு, நம்மூர் பழக்க வழக்கங்களுடன் வாழ்கிறார்கள் – நல்லதுதான்.

அன்று இரவு, அருகிலிருந்த ‘Wingate’ ஓட்டலில் வசதியாகத் தங்கினோம். மறுநாள் காலை பாரம்பரிய உடைகளில், திருமணத்திற்குச் சென்றோம். ஆஸ்டின் வெயில் சுட்டெரித்தது – 100 டிகிரி – பெரிய ஏர் கண்டிஷண்ட் ஹால் – மேடையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள், ப்ளூ டூத் ஸ்பீக்கரில் நாதஸ்வரம் என தமிழ்நாட்டில் உள்ள ஃபீலிங்! காலை உணவு இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார், பிரட், பட்டர் (இது ஆங்கில பட்டர்),

ஜாம், காப்பி, டீ என தென்னிந்திய மெஸ்ஸின் கைவண்ணம் – சுவையாக இருந்தது.
தமிழ் நாட்டுப் பெண், அமெரிக்க மாப்பிள்ளை. பஞ்சகச்சம், முழுக்கை சர்ட், பெண்ணுக்கு மடிசார், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்குக் குர்த்தா, பைஜாமா! மாலை மாற்றி, ஊஞ்சல் ஆடி, பச்சைப் பொடி சுற்றி, அப்பாவின் மடியில் அமர்ந்து தாலி மாட்டிக்கொண்டு, அக்னி வலம் வந்து, அம்மிக்கு பதில் பலகாய் மிதித்து எல்லாம் நடந்தன. பெண்ணின் பெற்றோர் முகத்தில் மகிழ்ச்சி.

பிள்ளை வீட்டுக்காரார்களுக்கு மகிழ்ச்சியுடன், ஒரு ‘த்ரில்லிங்’ அனுபவம்! மதியம் 12 மணிக்கு முழு கல்யாண சாப்பாடு, வடை அப்பளத்துடன் – தாம்பூலம், ரிடர்ன் கிஃப்ட் எல்லாம் வாங்கிக் கொண்டு, வெளியில் கார் மறைவில் உடை மாற்றிக்கொண்டு விடை பெற்றோம்.

40 நிமிட டிரைவ் – ஆஸ்டின் ஏர்போர்டுக்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே வந்துவிட்டோம். ஒரு சூட்கேஸ் ‘செக் இன்’ செய்து விட்டு, செக்யூரிடி செக் முடித்து, கேட்டுக்கு வந்தோம். எங்கள் ஆஸ்டின்-ஹூஸ்டன் ஃப்ளைட் அரை மணி டிலே என்றார்கள். ஹூஸ்டனில் ஃப்ளைட் பிடிக்க நேரம் இருக்குமா? அல்லது தவற விட்டுவிடுவோமா?
(தொடரும்)
