
கையில் ம்ஃப்ளர் சுற்றிய பேப்பர் டம்ப்ளரில் ஸ்ட்ராசொருகிய மூடியுடன் காப்பியை உறிஞ்சிக்கொண்டு, கல்யாணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். சென்னையில், இந்தியப் பையனுக்கும், அமெரிக்கப் பெண்ணுக்கும் விமரிசையாக நடந்த கல்யாணத்திலும் இதே போல பஞ்சகச்சம், மடிசாருடன் அமெரிக்கர்கள் கலந்துகொண்டதைப் பற்றி சிலாகித்தோம். இந்தக் கல்சுரல் ஃப்யூஷன், காலத்தின் கட்டாயம், தவிர்க்க முடியாதது! அழகான பெட்டியில், ஒரு பேக்கட் மிக்ஸர், லட்டு, டின் ஃபாயிலில் ஏழு சுற்று முறுக்கு எல்லாம் போட்டுக் கொடுத்திருந்தார்கள், கல்யாண பட்சணங்களுக்கே ஒரு தனி மணமும் ருசியும் உண்டு என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, கேட்டிலிருந்த யுனைடெட் ஏர்வேஸ் பெண்மணி, ஆஸ்டின் – ஹூஸ்டன் ஃப்ளைட் அரை மணி தாமதமாகப் புறப்படும் என்ற அறிவிப்பைச் செய்தாள்.
எங்களுக்குப் ‘பகீர்’ என்றிருந்தது. அரை மணி லேட் என்றால், ஹூஸ்டன் போய்ச் சேர ஆறு மணி ஆகிவிடும். அங்கு 3 ஆவது கேட்டிலிருந்து 40 ஆவது கேட்டுக்குச் செல்ல குறைந்த பட்சம் 25 நிமிடங்களாவது ஆகும். டார்சான் போல விமான நிலையத்தின் சீலிங்கில் கயிற்றைக் கட்டி, மாறியபடி தொங்கிச் சென்றால், 10 நிமிடங்களில் போகலாம் (நம்ம ஊர் சீலிங்கை நம்ப முடியாது!). ஹூஸ்டனில், 6.02 க்கு போர்டிங் நிறுத்தி, 6.25க்கு ஃப்ளைட் கிளம்பிவிடும் என்கிறது கையிலிருக்கும் போர்டிங் பாஸ்!
ஹூஸ்டனில் டொரொண்டொ ஃப்ளைட்டைத் தவறவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்பதால், வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தோம். ‘கேட்’ கவுண்டரில் இருந்த இரண்டு பெண்மணிகள் சுவாரஸ்யமாக ஏதோ அமெரிக்க வம்பு பேசிக்கொண்டிருந்தார்கள். மற்றொரு இளந்தாடி இளவட்ட அலுவலர், கம்ப்யூட்டர் திரையில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தார். அதற்குள், ஹூஸ்டனிலிருந்து கனெக்டிங் ஃப்ளைட்டுக்குத் தாமதமாவதை உணர்ந்த பயணிகள் ஒரு வரிசையில் நின்று, குறுந்தாடியிடம் ஒவ்வொருவராகத் தங்கள் சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டிருந்தனர். அந்த அவசரத்திலும் ஓர் ஒழுங்கு!
வரிசையில் எனக்கு முன் நின்றுகொண்டிருந்த இளம்பெண் மறுநாள் வேலைக்கு நியூஜெர்சி செல்ல முடியுமா என்ற கவலையில் இருந்தார். பின்னால் நின்றுகொண்டிருந்த மூதாட்டியும் அதே கவலையில் இருந்தார். கவுன் போட்டு வந்த அறுபது வயது மூதாட்டி, இந்த வரிசை எதற்கு என்று கேட்டுவிட்டு, பின்னால் நின்று கொண்டார். ஒன்று, இங்கேயே தங்கி விடலாம் என்றால் ஆஸ்டினில் சூட்கேசை திரும்ப எடுத்து, எங்கு தங்குவது என்ற பிரச்சனை. அல்லது, டிக்கட்டைக் கேன்சல் செய்து, திரும்ப சான்ஃப்ரன்சிஸ்கோ சென்று விடலாம் என்றால், நேரம், பணம் விரயம் அதிகமாகிறது. இப்படி யோசிக்கும் போது, ஹுஸ்டனில் டொரொண்டோ ஃப்ளைட் 15 நிமிடம் தாமதமாகக் கிளம்புகிறது என்ற செய்தி வந்தது! மூச்சு விட்டுக்கொண்டோம், ஃப்ளைட்டைப் பிடித்துவிடலாம் என்று சிறிது நம்பிக்கை வந்தது.
குறுந்தாடி இளைஞனும் எங்களிடம் மிகவும் அமைதியாகப் பேசி, இங்கிருந்து ஒன்றும் செய்ய முடியாது என்றான். சில சமயங்களில், கனெக்டிங் ஃப்ளைட்டை சிறிது தாமதப்படுத்தி, வரும் பயணிகளை ஏற்றிக்கொள்ளுவார்கள், ஆனால் நிச்சயமாகச் சொல்ல முடியாது என்றும் சொன்னான். ஹூஸ்டனில் ஃப்ளைட்டைத் தவறவிட்டால், மறுநாள் காலை 7.30 மணி ஃப்ளைட்டில் டொரொண்டோ போகலாம், அதுவரை தங்கும் வசதிகள் யுனைடட் ஏர்வேஸ் செய்துதரும் என்ற உத்தரவாதத்தையும் கொடுத்தான்! ஒரு மாதிரியாக, ஹூஸ்டன் சென்றுவிடுவது என்று முடிவு செய்து கொண்டோம். நம் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து, நடப்பது நடக்கட்டும் என்று முடிவு செய்துவிட்டோம்!
ஆஸ்டினில் ஃப்ளைட் 5.20க்குக் கிளம்பியது. எல்லாமே மெதுவாக நடப்பதைப்போன்ற பிரமை. ஏர் ஹோஸ்டஸ் கூட ஸ்லோ மோஷனில், சத்தமின்றி ஏதோ பேசிக்கொண்டு நடப்பதாகவும், உலகமே மெதுவாகச் சுழல்வதாகவும் தோன்றியது! தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டுப் பேசிய பைலட், 5.50க்கு ஹூஸ்டனில் இறங்கி விடலாம் என்று சொல்லி மைக்கில் பாலை வார்த்தார். பாதி வழியில், ஆறடி உயர அமெரிக்க ஆப்பிரிக்க ஏர் ஹோஸ்டஸை விபரம் கேட்க, அவள் மண்டியிட்டுத் தன் போனைத் தடவி, நேரம் பார்த்து, ‘ஏர்போர்ட்டில் சிறிது வேகமாக நடந்தால், ஃப்ளைட்டைப் பிடித்துவிடலாம்’ என்று கூறி, ‘டக்’ கென்று எழுந்து சென்றாள்.
எங்கள் சீட்டுக்குப் பின் சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணும் (அவளுடைய சுமாரான வயதில் எனக்கும் கலாவுக்கும் அபிப்ராய பேதம் இருந்தது என்பதை இங்கு சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது!) டொரொண்டோ செல்வதாகத் தெரிந்தது. அவளைப் பார்த்தபோது, புன்னகையுடன், எந்தவிதப் பதட்டமும் இல்லாமல், இயர் போனில் பாட்டுக் கேட்டு, தலையாட்டிக் கொண்டிருந்தாள். நாங்கள், குலதெய்வம், பாபா என வேண்டிக்கொண்டு, சீட் முனையில் (பெல்டுடன்தான்!) அமர்ந்துகொண்டு வந்தோம்!
5.45 க்கு இறங்கிய ப்ளைட் 6.15 வரை கேட் கிடைக்க, வெளியிலேயே நின்று கொண்டு, எங்கள் மினிமம் நம்பிக்கையையும் வழித்தெறிந்தது, பின்னால் அந்தப் பெண் புன்னகை மாறாமல் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தது, வியப்பாக இருந்தது.
சீக்கிரமாகவோ, ஒரு முன்னுரிமை தந்தோ எங்களுக்கு யுனைடட் ஏர்வேஸ் உதவவில்லை. ஆளுக்குக் கையில் ஒரு சிறிய பெட்டி, மணியோசை கல்யாண்குமார் மாதிரி என் முதுகில் ஒரு லாப்டாப் பேக் – நடக்கத் தொடங்கினோம். கேட் 12 லிருந்து மேலே போர்டில் கேட் நம்பரைப் பார்த்தபடி கேட் 40 ஐ நோக்கி இரண்டு 65+ நடந்து….ஓடினோம்.
குறுக்கே காப்பியுடன் வந்த மூதாட்டி, சாண்ட்விச் கடித்து புன்னகையுடன் வந்த குண்டு அமெரிக்கர், சின்னக் குழந்தையுடன் வண்டியைத் தள்ளி வந்த பெண்ணும் அவள் கணவனும், குடும்பமாகச் செல்லும் சீனாக்காரர்கள் (?பிலிபைன்ஸ்), முதுகுப் பையுடன் கனவுலகைல் மிதப்பது போலச் செல்லும் இளவட்டங்கள் – யார் மீதும் மோதிவிடாமல், வளைந்து நெளிந்து ஹூஸ்டன் விமான நிலையமே ஒரு விநாடி ஸ்தம்பிக்கும் வகையில் கிட்டத்தட்ட ஓடினோம்.
40 வது கேட் மூடுவதற்குத் தயாராக இருந்த அந்த ஆப்பிரிக்கப் பெண்மணி நான் ஓடி வருவதைப் பார்த்து, கையை ஆட்டி ‘சீக்கிரம் வாருங்கள், உங்களுக்காகத் தான் காத்திருக்கிறோம்’ என்றாள். 10 அடி பின்னால் வந்துகொண்டிருந்த கலாவும் வந்துவிட, பாஸ்போர்ட் ஒற்றி, போர்டிங் பாஸ் பார்த்து, கையிலிருந்த சிறிய பெட்டிகளுக்கு டாக் கட்டி (உள்ளே இடமில்லையாகையால், செக் இன் செய்தார்கள்), எங்களை அனுமதித்தார்கள். உதடுகள் உலர ஃப்ளைட்டில் நுழைந்து காலியாக இருந்த இரண்டு சீட்களில் அமரும் வரை, 200 ஜோடிக் கண்கள் எங்களை விழுங்கி விடுவதைப்போலப் பார்த்துக் கொண்டிருந்தன. தண்ணீர் குடித்து சிறிது ஆசுவாசப் படுத்திக்கொண்டு, “பாவம், அந்தப் பின் சீட் பெண்ணைக் காணவில்லை. ஃப்ளைட்டைத் தவற விட்டிருப்பாள்” என்றேன். கலாவும் கதவு மூடும் வரை வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் வரவில்லை. “அவளுக்கென்ன, அவர்கள் ஊர், அவர்கள் மக்கள், இரவு தங்கி, நாளைக் காலை வருவாள்” என்றாள் கலா.
நாங்கள் வந்த வேகத்தில், ஆஸ்டின் லக்கேஜ் வருவதற்கு வாய்ப்பில்லை. ஆனாலும் 7 மணிக்குத்தான் ஹூஸ்டனில் ஃப்ளைட்டை எடுத்தார்கள் என்பதால், வந்திருக்கலாம் என மனதைத் தேற்றிக்கொண்டோம்.
வானத்தில் பறக்கத் தொடங்கியதும், சுற்றும் முற்றும் பார்த்தேன். நடைபாதைக்கு அந்தப் புறம் ஒரு பெண்மணி காதில் இயர் போனுடன், கண்மூடிப் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
அவளா இவள்?
கலா ‘அவள் மாதிரிதான் இருக்கிறது’ என்றாள். எனக்கு இவள் சற்று வயதானவளாகத் தெரிந்தாள்…
திரும்பிப் பார்த்தவள் சிரித்தாள். சிரிப்பு காட்டிக்கொடுத்தது, அவளேதான்!
ஆச்சரியத்தில் கேட்டேன். ‘எப்படி? எப்பொ? வந்தீர்கள்?’
அவள், ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் முன்னும் பின்னும் ஆட்டி,”உங்களுக்கு முன்னால் ஓடி வந்தேன்.நான்தான் நீங்கள் இருவர் வருவதை கவுன்டரில் சொன்னேன். உங்களுக்காகத்தான் விமானம் காத்திருந்தது” – கண்களை மூடி, இசையுலகுக்குள் புகுந்துவிட்டாள்!
‘கடவுள் இருக்கான் கொமாரு’ மொமெண்ட்!
டொரொண்டோவில் இறங்கி, கியாஸ்கில் பாஸ்போர்டை ஒற்றி, கோணலான எங்கள் முகத்துடன் வந்த இமிக்ரேஷன் ஸ்லிப்பை உருவிக்கொண்டு, லக்கேஜ் வரும் பெல்டுக்கு வந்தோம். அப்போது மணி இரவு 10. இந்த ஏர்போர்ட்டில், எந்தப் பெல்டில் வேண்டுமானாலும் லக்கேஜ் வரும். பெட்டிகளைக் கீழே இறக்கியும் வைத்து விடுவார்கள்! 11 ஆம் நம்பரில் அரை மணி காத்திருந்து, 9 ஆம் நம்பரில் இரண்டு சின்ன பெட்டிகளையும் எடுத்துக்கொண்டோம். ஆஸ்டினில் ‘செக் இன்’ செய்த சூட்கேஸ் வரவில்லை! அலைந்து, ஒரு சின்னஞ்சிறிய போர்டுக்குப் பின் வேலை செய்துகொண்டிருந்த ஆப்பிரிக்க மூதாட்டியிடம், விபரம் சொன்னோம். திரும்ப பெல்டுகளில் தேடச் சொல்லி, மேலும் அரை மணிநேரம் எங்களை சுற்ற வைத்தார். பின்னர் கம்ப்யூட்டரில் டிராக் செய்து, எங்கள் சூட்கேஸ் (என்ன கலர், என்ன சைஸ், தோல் பெட்டியா, பிளாஸ்டிக் பெட்டியா, துணிப் பெட்டியா, கடைசியாக எங்கு விட்டீர்கள்….) ஹூஸ்டனில் இருப்பதாகவும் மறுநாள் விட்டிற்கே அனுப்பிவிடுவார்கள் என்றும் சொல்லி, ஒரு ஃபார்ம் பூர்த்திசெய்து வாங்கிக்கொண்டார். ஒரு பெருமூச்சு விட்டு வெளியே வந்து, வீட்டிற்கு வரும்போது மணி நள்ளிரவு 12.40!
44 மணி நேரம் கழித்து, சூட்கேஸ் எந்த சேதாரமும் இன்றி வந்து சேர்ந்தது!
.
