டாக்டர் ஜே.எஸ். ராஜ்குமார்/ஒரு சாண் உலகம்எழுத்து வடிவம் : எஸ்.ஜென்னி

2
வயிற்றுக்குள் இருக்கும் விஷம்

மனிதன் உயிர் வாழத் தேவை யான அத்தனையும், ‘இயற்கை’ என்ற பெயரில் படைக்கப்பட்டு உள்ளன.
வாயு மண்டலத்தில் இருக்கும், ‘நல்ல’ ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கெட்ட’ கரியமில வாயுவை வெளித் தள்ளி நம்மை உயிருடன் வைத்திருப்பது, சுவாச மண்டலம் என்றால், உணவுப் பொருள்களில் ‘நல்ல’ சத்துகளை மட்டும் எடுத்துக்கொண்டு கழிவுகளை வெளித் தள்ளுவது ஜீரண மண்டலம். இந்த ஜீரண மண்டலத்தின் மிக முக்கியமான பகுதி வயிறு. அது எப்படி என்பதைப் பார்ப் போம்.
அம்மா தோசை வார்த்துக் கொண்டிருக் கிறார்.
அதன் வாசத்தையும், தேங்காய், புதினா மற்றும் மிளகாய்ச் சட்னி வகைகளைப் பார்த்தும், நம்முடைய மூக்கும் கண்களும் மூளைக்கு ஒரு செய்தியை அனுப்புகின்றன.
அதே நேரத்தில் வாயில் உமிழ்நீரும், வயிறில் அமில நீரும், செரிப்பதற்குத் தேவையான மற்ற என்ஸைம்களும் சுரக்கத் தொடங்குகின்றன.
அதாவது, உணவு செரிப்பதன் முதல் கட்டம் வாயிலேயே தொடங்கிவிடுகிறது.
வாய்க்குள் போகும் உணவுப் பொருள்கள், தாடையாலும் பற்களாலும், நாக்காலும் நொறுக்கப்படுகின்றன.
வாயில் அரைக்கப்படும் உணவுடன், உமிழ்நீரில் இருக்கும் ‘அமைலேஸ்’ என்ற என்ஸைம் கலக்கிறது. தேவையான அளவுக்கு உணவு அரைக்கப்பட்டவுடன், அது தொண்டைப் பகுதிக்குள் தள்ளப்படுகிறது. அப்போது, மூச்சுக் குழாயை ‘எபிகிளாடிஸ்’ என்ற வால்வு மூடிக்கொள்ள, தொண்டை யில் இருந்து உணவுக் குழாய் வழியாக, பாதி அரைக்கப்பட்ட உணவு இரைப்பைக்குள் செல்கிறது.
இந்த இடத்தில் ஒரு தகவலை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இரைப்பைக்குள் உணவு வருவதற்கு முன்பே, ‘வேகஸ் என்ற நரம்பு மூலமாக, இன்னும் சற்று நேரத்தில் இரைப் பைக்குள் உணவு வந்து சேரப்போகிறது’ என்கிற தகவல் இரைப்பைக்குக் கிடைத்து விடுகிறது.
இந்தத் தகவல் கிடைத்த அடுத்த மைக்ரோசெகண்டில், ரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரந்து உணவை வரவேற்கக் காத்திருக்கும்.
இந்த இடத்தில் இன்னொரு தகவலையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பசியுடன் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்கக் கூடாது என்று சொல்வது இதனால்தான். ஏன்? என்ன ஆகும்?
உணவு செரிப்பதற்கு உதவும் ஹைட்ரோகுளோரிக் அமிலம், காலியான வயிறின் இரைப்பையின் உள்பக்கச் சுவரையும், உணவுக்குழாயின் கடைசிப் பகுதியையும் பாதித்துவிடும். அந்த அளவுக்கு இந்த அமிலம் மிகவும் ஆபத்தானது.
நம் வீட்டு சமையல் அறையில், சமையல் பணிக்கு உதவும் மிக்ஸி, கிரைண்டரைவிட அதிக ஆற்றல் கொண்டது நம்முடைய இரைப்பை.
அப்படிப்பட்ட ஓர் அபூர்வமான பகுதியான இரைப்பை, உணவு வந்து சேர்ந்ததும், தன்னுடைய மேல் மற்றும் கீழ்ப் பகுதிகளை நன்றாக இறுக்கித் தன் தசைகளால் சுழற்றத் தொடங்குகிறது.
நன்றாக அரைக்கப்பட்டோ, அரையும் குறையுமாக அரைக்கப்பட்டோ இருந்தாலும், அது சைவ உணவோ, அசைவ உணவோ எதுவாக இருந்தாலும் இரைப்பைக்கு முன் எல்லாம் ‘வெகு சாதாரணம்’.
ஆக, தனக்குள் வந்த எந்த உணவுப் பொருளையும் அடித்து, உடைத்து, நொறுக்கி, தூளாக்கி, ஜீரணத்தின் அடுத்த கட்டத் துக்குத் தயார் செய்கிறது இரைப்பை.
இரைப்பைக்குள் வந்த உணவு முழுவதுமாகச் செரிமானம் ஆக, குறைந்தது மூன்று முதல் நான்கு மணி நேரம்வரை ஆகும். அதனால், அதற்குப் பிறகே நாம் அடுத்த உணவை எடுத்துக் கொள்வது நல்லது.
இரைப்பையில், சிறுகுடலின் முதல் பகுதியான டியோடினம் என்ற பகுதிக்குள் வரும்போதுதான் உணவு சரியாக ஜீரணிக்கப்படுகிறது.
அதற்குக் காரணம், கல்லீரலும் கணையமும்தான்.
இந்த இரண்டு உறுப்புகளில் இருந்து சுரக்கும் ஜீரண நீரும் (பித்த நீர்) கணைய நீரும், இரைப்பைக்குள் வந்த உணவுடன் கலந்து, அந்த உணவை மேலும் ஆக்ரோஷமாகச் செரிக்கச் செய்கின்றன. அம் மம்
இன்னும் நுட்பமாகச் சொல்லப்போனால், கல்லீரலின் பித்த நீர், சோப்பு போன்றது. இந்த பித்த நீரில், உணவு கலந்ததும் குபுகுபு வென்று நுரை பொங்கும். அந்த நுரையே, உணவில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய்ச் சத்தை ஜீரணமாக்கும்.
இந்த பித்த நீர் இல்லாவிட்டால் நாம் சாப்பிடும் உணவின் கொழுப்புச் சத்து சரியாக ஜீரணம் ஆகாது.
இந்த பித்த நீர் சுரப்பில் ஒரு நுட்பம் இருக்கிறது. அதாவது, உணவு செரித்தல் வேலை முடிந்ததும், அந்த பித்த நீர் வீணாகிவிடக் கூடாது என்பதற்காக, அந்த பித்த நீரின் முக்கிய மூலப் பொருளான ‘பைல் சால்ட்’, சிறுகுடலில் நுனிப் பகுதியில் இருக்கும் குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது.
வயிறின் மர்மங்களில், தொழில் நுட்பங்களில் இதுவும் ஒன்று.
பித்த நீரை அடுத்து, கணைய நீரும் உணவுப் பொருள்களில் உள்ள கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்புச் சத்துகளின் மீது செயல்பட்டு, சிறுசிறு சர்க்கரைத் துகள்களாக மாற்றுகிறது. அப்போதுதான் அவற்றை, குடல் உறிஞ்சிகள் கைப்பற்றிக்கொள்ள முடியும்.
ஜீரண நீர்களில், மிகவும் சக்தி வாய்ந்தது இந்தக் கணைய நீர்தான். உணவு செரிமானத்துக்குத் தேவையான பித்த நீரும், கணைய நீரும், சிறுகுடலில் வந்து சேர்கின்றன. இந்த இரண்டு நீரும் இங்கே வந்து சேர்வதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது. அது என்ன?
முதலில் பித்த நீர் சுரந்ததும், அதில் இருக்கும் சில என்ஸைம்கள், கணையத்தைத் தூண்டி, கணைய நீர் சுரப்பதற்கான வேலையைச் செய்கின்றன. ‘நான் வந்துட்டேன். நீயும் வந்தா சாப்பாட்டைச் செரிச்சிடலாம்’ என்பது மாதிரி இரண்டு நீரும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து தங்களுக்கான பணியைச் செய்கின்றன.
குடலின் அளவை வைத்து சிறுகுடல், பெருங்குடல் எனப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
சிறுகுடலின் விட்டம் சுமார் ஒன்றரை அங்குலம் இருக்கும். பெருங்குடலின் விட்டமோ மூன்று அங்குலம். ஆனால், நீளத்தில் சிறுகுடல் பெரியது. சுமார் இருபது முதல் இருபத் தைந்து அடி நீளம் இருக்கும். ஒரு மனிதன், பெருங்குடல் இல்லாமல்கூட உயிர் வாழ்ந்து விடலாம். ஆனால், சிறுகுடல் இல்லாமல் உயிர் வாழவே முடியாது. ஏனெனில், உணவின் “சக்தியை ரத்தத்தில் சேர்ப்பதே இந்த சிறுகுடல்தான்.
சிறுகுடலின் பணிகள், அதன் சுவர்களின் சுருக்கங்கள் பற்றிய ஆச்சரியங்கள், சிறுகுடலில் சுரக்கும் என்ஸைம்கள் போன்ற பல விஷயங்களைப் பற்றி அடுத்து வரும் அத்தியாயங்களில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். ஆக, வாய் வழியாக உள்ளே செல்லும் உணவின் கழிவுகள், பெருங்குடலைக் கடந்து, ஆசன வாய் வழியாக வெளியேறுகிறது.
இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். உணவின், வாய் டூ ஆசன வாய் வரையிலான பயணம் குறித்து ஓரளவுக்கு இங்கே தெரிந்துகொண்டோம். வாயிலிருந்து ஆசன வாய் வரையி லான இந்த பயணத்தில், எங்கு பிரச்னை ஏற்பட்டாலும் நமக்கு ஆபத்துதான்.
உதாரணத்துக்கு…
குடல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு, கணைய நீர் உடலுக்குள்ளேயே மற்ற பகுதிகளுக்குள் கசிந்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான். நம் வாழ்க்கை அத்தோடு முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொள்ளவேண்டியதுதான். அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆம். நம் உடலுக்குள் உணவு செரிப்பதற்காகச் சுரக்கும் கணைய நீர், கொடிய பாம்பின் விஷத்தைவிடக் கொடுமையானது.

டாக்டர் ஜே.எஸ். ராஜ்குமார்/ஒரு சாண் உலகம்எழுத்து வடிவம் : எஸ்.ஜென்னி – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)