
ஆசிரியர் கலைமகள்………………….
சேகண்டி அல்லது சேமக்கலம், செகண்டை , செயகண்டி , செயகண்டிகை , சேண்டி என்றும் அழைக்கப்படும் வாத்தியம் வெண்கலத்தால் உருவானது, வட்ட வடிவமானது! பொதுவாக சங்கொலியுடன், சேகண்டி அல்லது சேமக்கலத்தை, தடுமனான தேக்குக் குச்சியால் அடித்து தெய்வீக ஒலியை சிவன் கோவில்களில் எழுப்புவார்கள்.
சங்கு திருமாலுக்கு உரியது. சேமக்கலம் சிவனுக்கு உரியது.
சிவன் கோயில்களில் சுவாமி புறப்பாட்டின்போது சேமக்கலம் எனும் சேகண்டி இசை ஒலி எழுப்பப்படுகிறது. பிற்காலத்தில் மனித இறப்புகளில் சேகண்டியுடன் சங்கு ஒலிப்பது நடைமுறைக்கு வந்துள்ளது.
சோமன் என்ற சமஸ்கிருத சொல்லிற்கு சந்திரன் என்று பொருள் கொள்ள வேண்டும்.சந்திரன் போன்று வட்ட வடிவ அமைப்புக் கொண்ட சேகண்டிக்கு சோமன் கலம் என்று பெயர். பின்னர் இப்பெயர் மருவி சேமக்கலம், சேகண்டி என்று அழைக்கப்பட்டது!
கிராமங்களில் ஏண்டா சேண்டி அடிக்கிற என்று கிண்டலாக சொல்வதுண்டு! ஒருவர் சொல்வதை அப்படியே கேட்டு அவரை குளிர்விப்பதற்காக எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லாமல் சொல்வதை
” சேண்டி “அடிக்கிறே என்று கொச்சையாகச் சொல்வார்கள். அவர் சொல்வதற்கு மறுப்பே தெரிவிக்காமல் நல்ல தாளம் போடுடா அடி அடி சேண்டி அடி என்று சிறுகதைகளில் வர்ணிப்பதும் உண்டு!!
சோழர் காலத்தில் பல தமிழிசை நூல்கள் இருந்துள்ளன. ஆனால் இன்று எந்த நூலும் நம் கைகளுக்கு கிடைக்கவில்லை! பொருநாரை, பெருங்குருகு, பஞ்சபாராதீபம். இசைநுணுக்கம், பஞ்சமரபு, இந்திரகாளியம் முதலிய நூல்கள் இருந்ததாக தெரிய வருகிறது.
பொ.ஆ 1237ல் வடமொழியில் இயற்றப்பட்ட சாரங்க தேவரின் “சங்கீத ரத்தினாகரம்” என்னும் நூல் பல தமிழ்ப் பண்களைப் பற்றி பேசுகின்றது. குறிப்பாக தேவாரப் பண்களான சுத்தசதாரி, தேவாரவர்தினி, தக்கராகம், கௌசிகம், சுத்தபஞ்சமம், பக்க கௌசிகம் போன்றவை அந்நூலில் புகழப்பட்டுள்ளது அதோடு மட்டுமல்லாமல் சேண்டி பற்றிய குறிப்பும் உள்ளது
