சாய்ரேணு சங்கர்/பாதம் சிரமேல் பதி

அகங்காரம் ஒன்று அதிவினை ஒன்று
சகமிரண் டென்னுளே சுற்ற – பகவனே!
தாதை உனக்கெனத் தான மளிக்கிறேன்
பாதம் சிரமேல் பதி.

வேஷமிட்ட மாயை விரிந்து பரந்ததே
சேஷனார் தாங்கச் சேர்ந்ததே – சீர்ஷத்தே
ஓதப் புரோக்த உலகை அளந்தபின்
பாதம் சிரமேல் பதி.

காணச் சிறியவன் காசி னியளக்க
ஓணத் தலைவன் உயர்ந்ததனன் – பேணிட
வேதம்சொல் தர்மமுண்டு வேதனையாய் நானுண்டு
பாதம் சிரமேல் பதி.

துறுதுறுப்பாய் வந்தாய் குறுகுறுப்பாய்க் கண்டாய்
விறுவிறுவென் றேநீ வளர்ந்தாய் – குறுமாமணி
நாதா பணிகிறேன் நான்தயார் நன்மைசெய்
பாதம் சிரமேல் பதி.

செங்கையில் விட்டநீர் தன்னையே தந்திட
கங்கையாய் ஆச்சுதே கண்ணனே! – செங்கண்மால்
பாதவழி யோடப் பரசிவன் தாங்கிடப்
பாதம் சிரமேல் பதி.

எந்தைதந் தைதந்தை எம்மூத்தோர் எல்லோரும்
சிந்தையால் பக்திசெய் ஸ்ரீதரா! – எந்தனையும்
ஆதரவாய் அன்புடனே ஆட்கொள்ள வந்திடுவாய்
பாதம் சிரமேல் பதி.