
5. தீர்த்தயாத்திரை
அறுபதாண்டுகட்கு முன்னர் கோவை மாநகரில் ஆண்டுதோறும் ‘பிளேக்’ என்னும் கொடியநோய் தோன்றிப் பரவிக்கொண்டிருந்தது.
‘பிளேக்’கிருமிகள் முதலில் எலிகளைத்தாக்கும், தாக்குண்ட எலிகள் சுருண்டு விழுந்து சாகும். அவ்வாறு செத்த எலிகளின் ரோமங்கள் சிலிர்த்து நிற்கும். அவற்றினின்று பிளேக் கிருமிகள் பரவும். அக்கிருமிகள் மனிதரைத்தாக்கும். தாக்குண்ட மனிதருக்குக்காய்ச்சல் வரும். அரைகளில் கட்டிகள் தோன்றும். இக்கொடிய நோய் விரைவில் பரவும். மக்களும் வெகு விரைவாக எமலோகம் செல்வர்.
இவ்வியாதி பரவுவதைத் தடுக்க கோவை நகரசபையார் தக்க நடவடிக்கைகள் எடுத்தனர்.
அக்காலத்தில் ஆந்திர நாட்டுப் பரலாக்கிமிடி என்னும் ஊரைச் சேர்ந்த மகமது அப்துல் ஹபிஸ் சாயபு என்பவர் கோவையில் ஹூசூர் டிப்டி கலெக்டராக இருந்தார். அன்றைய பிரிட்டிஷ் அரசு அவரையே கோவை நகர சபையின் சேர்மேனாக நியமித்தார்கள். அவருக்கு மாதச்சம்பளம் ரூபாய் ஐந்நூறு தரப்பட்டது.
அப்துல் ஹபீஸ் மிக்க அநுபவம் வாய்ந்தவர். அவரிடம் ஒரு நான்கு சக்கர கோச் வண்டியிருந்தது. அதிகாலையில் அவ்வண்டியிலேறிச் சென்றால், காரியாலய வேலைகளைக் கவனித்தபிறகு, தெருத்தெருவாகப் போய்க் கொண்டிருப்பார். அவர் அவ்வண்டியிலேயே குடியிருந்தார் என்று சொல்லவேண்டும். நாள் முழுவதற்கும் வேண்டிய சாப்பாட்டையும் சிற்றுண்டிகளையும் வண்டியிலேயே எடுத்துச் செல்வார்.
அவர் காலத்தில்தான் கோவை நகரிலிருந்த சந்து பொந்துக ளெல்லாம் இடித்துத்தள்ளி பிளேக் நோய்க்கு ஆதாரமாயிருந்த நெருக்கமான குடிசைகளெல்லாம் தகர்க்கப்படுவதற்குத் திட்டம் போடப்பட்டது.
எலிகளைப் பிடிக்க வீடுவீடாக நகரசபையார் எலிக்கூடுகள் கொடுத்தார்கள். அக்கூடுகளில் எலிகள் விழுந்திருந்தால் அவற்றைப் பெற்றுக்கொண்டு வேறு கூடுகள் கொடுத்துச் சென்றார்கள். பிரதி தினமும் நகரசபைச் சிப்பந்திகள் வீடுதோறும் சென்று விசாரித் தார்கள். மூன்று தினங்கட்குச் சேர்ந்தாப்போல் ஒரு வீட்டில் எலிகள் விழவில்லையானால், அங்குள்ள எலிக்கூட்டை எடுத்துச் செல்வார்கள்.
எலிகள் சாவதற்குப் பாஷாண மருந்தையும் மாவுகளில் கலக்கிச் சிறிய சிறிய உருண்டைகளாக்கிக்கொடுத்தார்கள்.
நகரசபைச்சிப்பந்திகள் வீடுவீடாகச் சென்று, உள்ளேநுழைந்து, சகல அறைகளிலும் காணப்படும் அட்டறைகளை அடித்துச் சுத்தம் செய்து, மருந்தெண்ணெய் தெளித்துவிட்டுப் போவார்கள்.
எங்கேனும் எலிவிழுந்து செத்த தகவல் கிடைத்ததும் அவ்வீட்டைக் காலி செய்து, தண்ணீர்விட்டுக் கழுவிச் சுத்தம் செய்து, வீட்டைப்பூட்டிச் சீல்வைத்து விட்டு, அவ்வீட்டில் குடியிருந்தவர்களை பிளேக் முகாம்களில் வாசம் செய்ய அனுப்பி வைப்பார்கள்.
ஊரில் உள்ள எல்லோருக்கும் கட்டாயமாக பிளேக் தடுப்பு ஊசி மருந்து குத்துவார்கள். ஊசி குத்தியவர்களுக்குக் கைகள் வீங்கும். வலி எடுக்கும். காய்ச்சலும் வரும். அவர்களால் யாதொரு வேலையும் செய்ய முடியாது. அதற்குப் பரிகாரமாக முனிசிபாலிட்டியார் ஊசி குத்திக்கொண்ட ஆண்களுக்கு ஆறணாவும், பெண்களுக்கு மூன்றணாவும், குழந்தைகளுக்கு இரண்டணாவும் உபகாரத் தொகை கொடுத்தார்கள்.
முனிசிபாலிட்டியார் சீல்வைத்த வீட்டுக்குள் யாரும் பிர வேசிக்க முடியாது. அத்துமீறிப் பிரவேசிப்போருக்கு ஆறுமாதச் சிறைவாசம் கிடைக்கும்.
காலிசெய்யப்பட்ட தெருக்களில் பிளேக் போலீஸ் படையினர் காவல் புரிவார்கள். இப்படையினர் பிளேக் காலங்களில் தற்காலிகமாகத் திரட்டப்பட்டனர். இவர்கள் வெள்ளைக் கால்சட்டை, வெள்ளை மேல்சட்டை, வெள்ளைத் தொப்பி, காலில் செருப்பு ‘யூனிபாரம்’ அணிந்திருந்தார்கள். இவர்களுக்கு மாதச் சம்பளம் ரூபாய் ஐந்து! சாதாரண போலீஸ் படையினருக்கு உதவியாக இப்படை பணிபுரிந்து வந்தது.
கோவை நகரைவிட்டு வெளியூர் செல்ல விரும்புவோர் முனிசிபாலிடியிலிருந்து பாஸ்போர்ட்டுகள் பெற்றுச் செல்ல வேண்டும். ரயில் நிலையங்களில் நகர சபைக் குமாஸ்தாக்கள் அமர்ந்திருந்து இரவும் பகலும் பிரயாணிகளுக்குப் பாஸ்போர்ட் வழங்கிவந்தார்கள். அக்குமாஸ்தாக்கள் கைக்கூலி வாங்காதிருக்கக் கண்காணிப்பாளர்களும் இருந்தார்கள்.
பிரயாணிகள் தாங்கள் செல்லும் ஊர்களிலுள்ள சுகாதார அதிகாரியிடம் பிரதி தினமும் சென்று தாங்கள் பாஸ்போர்ட்டைக் காட்டி உடலைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பாஸ் போர்ட்டைக் காட்டினால்தான் ரயில்வேக்களில் டிக்கட் பெற முடியும்.
பிளேக் நோய்கண்டு செத்தவர்கள் சவத்தை முனிசிபாலிடியாரே அப்புறப்படுத்திச் சுடுகாடு சேர்ப்பார்கள்.
சம்பிரதாயமுறையில் பாடைகள் கட்டிச் சுமக்காமல் பிணங்களைக் குப்பை வண்டிகளில் போட்டு, ஓட்டிச் செல்வார்கள்.
வண்டிகள் கிடைப்பது அரிதானால் ஒரு ஒற்றை மூங்கிலில் சவத்தைச் சேர்த்துக்கட்டி, வைக்கோல் பிரிகளால் மூடி, இரண்டு பேர்கள் சுமந்து செல்வார்கள்.
பிளேக்நோய் பரவுமுன்னரே கோவைநகர் கிடுகிடுவெனக் காலியாகத் தொடங்கிவிடும்.
தொழிலாளர்களும் பிறரும் தூரத் தொலைவில் நகருக்கு வெளியேயுள்ள இடங்களில் குடிசைகள் கட்டி வாழத்தொடங்குவார்கள். நகரசபையார் அமைத்துள்ள முகாம்களுக்கும் சென்று குடியேறுவார்கள்.
மற்றும் சிலர் அண்டை அயல் கிராமப் புறங்களில் குடி வேறுவார்கள்.
வசதியுள்ளவர்கள் இதுதான் தக்க தருணமென்று தீர்த்த வாத்திரை செய்யப் புறப்படுனார்கள்.
எங்கள் பாத்திரை
1910 ஆம் ஆண்டு ஐப்பசியில் எனது அன்னையும், நானும், என்னைவிட மூண்றாடுகள் மூத்திருந்த எனது சகோதரன் கப்பையனும் யாத்திரை புறப்பட்டோம். அப்போது எனக்கு வயது
பணிரெண்டு.
கோவையிலிருந்து கிளம்பி பொள்ளாச்சி வழியாக நூறு மைலுக்கு அப்பாலுள்ள திண்டுக்கல்லில் ரயிலேறி, மதுரை வழியாக இராமேஸ்வரம் செல்வதென்பது எங்கள் பிரயாணத் திட்டத்தின் முதல் கட்டம்.
அக்காலத்தில் கோவையிலிருந்து திண்டுக்கல் செல்ல ரயிலோ, இப்போது பேருந்து எனப் புதுப்பெயர் சூட்டப்பட்டுள்ள பஸ்ஸோ கிடையா.
தபால் வண்டிகள் எனப்படும் குதிரை வண்டிகளில்தான் அக்காலத்தில் பிரயாணம் செய்யவேண்டும்.
எனவே நாங்கள் மூவரும் எங்கள் உடைகளை இலகுவான ‘ரயில்’ பைகளில் வைத்து, கையில் ஒரு கூஜா சொம்பும், தூக்குப் பாத்திரமும் எடுத்துக் கொண்டு கோவையில் உக்கடம் என்னு மிடத்தில் குதிரைவண்டியொன்றில் ஏறினோம். அவ்வண்டியில் சகபிரயாணிகள் இருவர் வந்தார்கள்.
கோவையிலிருந்து தெற்கே உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலின் முன்பாக எங்கள் வண்டி நின்றது. வண்டியிலிருந்து நாங்கள் இறங்கியதும் அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த வேறொரு குதிரை எங்கள் வண்டியில் பூட்டப்பட்டது.
ஈச்சனாரி விநாயகர் மிகப்பெரியவர். தொந்தியும் தொப்பையுமாக உள்ளவர்களை ஈச்சனாரி விநாயகன் மாதிரியல்லவா இருக்கிறான் என்று சொல்வார்கள்.
விநாயகர் கோவிலின்முன் ஒரு தேங்காயை எங்கள் இருவரின் தலையைச் சுற்றிக் கீழே உடைத்தோம். அத்தேங்காய்ச்சில்லுகளை
அங்கு நின்றிருந்த பையன்கள் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு பொறுக்கினார்கள். அதன்பின் நாங்கள் பிரயாணத்தைத் தொடர்ந்தோம்.
அடுத்த ஐந்தாவது மைலில் ஒத்தக்கால் மண்டபம் என்ற இடத்தில் வண்டியை நிறுத்தி, அங்கும் தயாராக நின்றிருந்த குதிரையை மாற்றிப் பூட்டிக்கொண்டு சென்றோம்.
ஒத்தக்கால் மண்டபம் எனும் இடத்தில் அழகான கோவில்களும், அழகிய ஓடையும், ரஸ்தாவின் இருபுறமும் அடர்ந்த தென்னந்தோப்புகளும் காண்பதற்கு ரம்மியமாகவும், குளிர்ச்சியாகவும் இருந்தன.
அடுத்த ஐந்தாவது மைலில் கிணத்துக்கடவு என்ற ஊரில் குதிரை மாற்றப்பப்பட்டது.
கிணத்துக்கடவில் ஒரு மலைக்குன்றின் மேல் பொன்மலையாண்டவர் கோவில் கொண்டிருக்கிறார். ஐந்தே நிமிடங்களில் கோவில் சந்நிதியை அடையலாம். பாலக்காடு கணவாயுக்கு நேர் எதிராகக் கிணத்துக்கடவு இருப்பதால், ஜில்லென்று காற்றடித்துக் கொண்டிருந்தது. இங்கும் செழிப்பான தென்னந்தோப்புகள் காணப்பட்டன.
கிணத்துக்கடவைவிட்டுக்கிளம்பிய எங்கள் வண்டி கோவில் பாளையம் என்னுமிடத்தில் குதிரையை மாற்றிக் கொண்டு, காலை ஒன்பது மணிக்கெல்லாம் யாதொரு ஆயாசமுமின்றி ஜாம் ஜாமென்று பொள்ளாச்சி சந்தைப்பேட்டையருகில் சென்று நின்றது.
கோவையிலிருந்து பொள்ளாச்சி சரியாய் இருபத்தைந்து மைல்கள். நாங்கள் கோவையில் புறப்படும் போது அதிகாலை மணி ஆறு. எனவே, மூன்றுமணி நேரத்தில் யாதொரு பரபரப்புமின்றிப் பொள்ளாச்சி போய்ச் சேர்ந்தோம்.
பொள்ளாச்சியிலிருந்து உடுமலை செல்லும் வண்டிதயாராகக் காத்துக்கொண்டிருந்தது. அவ்வண்டியில் நாங்கள் தாமதமின்றி ஏறிக்கொண்டோம்.
கோமங்கலம் புதூர் போய்ச் சேருதல்
பொள்ளாச்சியில் நாங்கள் ஏறிய வண்டி, நடுவழியில் கோலார்பட்டி என்ற இடத்தில் குதிரையை மாற்றிக்கொண்டு, பகல் பனிரண்டுமணி சுமாருக்கு கோமங்கலம் புதூர் என்ற இடத்தை அடைந்தது. அங்கே, அன்று எங்கள் பிரயாணத்தை முடித்துக்
கொண்டோம்.
வண்டியை விட்டிறங்கியதும் எங்களைக் குதூகலத்துடன் வரவேற்க ஒரு போலீஸ்காரர் நின்றிருந்தார்.
ஆள் ஆறடி உயரம், உயரத்துக்கேற்ற பருமன். முகத்திலே நீண்ட கருத்த கிருதா மீசை. தலையிலே சிவப்புத் தொப்பி.
அவர் வேறு யாருமில்லை. என்னுடைய சாட்சாத் அம்மான். என் அன்னையின் நேர்மூத்த சகோதரன்.
கோவைச் சிறைச்சாலைக்கு கைதிகள் கொண்டு வந்திருந்த போலீஸ் ஜவான்கள் மூலம், நாங்கள் புறப்படும் நாளும், கிழமையும், நேரமும் அவருக்கு முன் கூட்டியே தெரிவித்திருந்தபடியால், அவர் எங்கள் வண்டியை எதிர்பார்த்து நின்றிருந்தார்!
அவர் – மருதாசலக் கவுண்டர் – அந்த நாளில் கோமங்கலம் புதூர் போலீஸ் ஸ்டேஷனில் ‘ஸ்டேஷன் ஹவுஸ் ஆபீசர் இன்சார்ஜ்’ ஆக இருந்தார்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்ப்புறம் ஒரு சத்திரம். அதில் எங்களுக்கு ஜாகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கே கயிற்றுக்கட்டில்கள் மூன்றும், நடுவில் மேஜை நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.
ஒரு பண்டாரம் சமையல்செய்து, தயாராக நின்று கொண்டிருந்தான்.
இராஜோபசாரம் எங்கட்கு நடந்தது. தயிர், பால், வெண்ணெய், காய்கறிகள், மீன், முட்டை, கோழிசப்ளை மிதமிஞ்சிக் கிடைத்தது.
சத்திரத்தைச் சுற்றிலும் கரிசல்மண் காட்டில் கருங்கண்ணிப் பருத்திச் செடிகள்கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு அப்பாலும் பச்சைப் பசேலெனக் காட்சி அளித்தன. என் நினைவைவிட்டு அகலாதது, அச்செடிகளிடையே சால்விடப்பட்டிருந்த கொத்தமல்லிச்செடிகள். அதன் நறுமணம் காற்றில் மிதந்துவந்து எங்கள் நாசியைத் துளைத்தது. ரசத்திலும், சட்னியிலும் அதன் மணம் கமழ்ந்தது.
எட்டுநாட்கள் அங்கு தங்கியிருந்த பின் எங்கள் மாமன் எவ்வளவோ தடுத்தும் நாங்கள் ஒரே பிடிவாதமாக அங்கிருந்து கார்த்திகை தீபத்துக்கு நாங்கள் திருவண்ணாமலை செல்லத் திட்டமிட்டிருந்தபடியாலும், நாங்கள் தரிசிக்க எண்ணியிருந்த க்ஷேத்திரங்கள் அநேகம் இருந்தபடியாலும், கோமங்கலத்தில் ஒருவார காலத்துக்குமேல் தங்கமுடியாது போயிற்று.
எங்கள் பயணத்துக்காக இரட்டைக் காளைகள் பூட்டிய வில்வண்டியொன்று வந்து நின்றது.
அதில் நாங்கள் ஏறிக்கொண்டதும் வண்டி புறப்பட்டது. ஆனால் எங்களை வழியனுப்பக் கூடியிருந்த கோமங்கலத்தார்களும் எங்கள் மாமனும் ஒரு பர்லாங் தூரம் எங்கள் வண்டியைப் பின்தொடர்ந்து வந்து விடைபெற்ற காட்சி இக்காலத்தில் காண்பதற்கு அரிதானதாகும்.
கையில் ஒரு நீண்ட குத்தீட்டியுடன் ஒரு ஆள் எங்கள் பாதுகாப்பிற்காக எங்கள் வண்டியைப் பின்தொடர்ந்து வந்தான். அவனையும் வண்டியில் ஏறிக்கொள்ளுமாறு நாங்கள் எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லியும், அவன் கேட்காமல் வழி நெடுக நடந்தே எங்களைப் பின் தொடர்ந்தான்.
உடுமலைப்பேட்டையைக் கடந்து அன்று மாலை நாங்கள் மடத்துக்குளம் என்ற ஊரை அடைந்தோம். ஊரின் கீழ்புறமுள்ள நதியின் பாலம் உடைந்து போயிருந்தது. பிற வண்டிக்காரர்களின் உதவியோடு எங்கள் வண்டியை மறுகரை சேர்த்து அங்கிருந்த ஒரு சத்திரத்தில் இரவுப் பொழுதைக் கழித்தோம்.
மறுநாள் மாலை பழனி சேர்ந்து, ஒரு மடத்தில் தங்கியிருந்து அடுத்த நாள் காலை, ஸ்நானபானாதிகளை முடித்துக் கொண்டு பழனி மலைப்படிகளேறிச் சென்று, ஆண்டவனைத் தரிசித்துப் பஞ்சாமிர்தம் சாப்பிட்டுவிட்டுக் கீழிறங்கி வந்து, அன்றே புறப் பட்டுப் பதினெட்டு மைலுக்கப்பாலிருந்த ஒட்டன்சத்திரம் என்ற ஊரை அடைந்து தங்கினோம்.
அன்றிரவு சமைத்து உண்டபின் அடுத்த நாள் பிரயாணத்துக்கு வேண்டிய கட்டுச்சாதத்தை தூக்குப் பாத்திரத்தில் நிரப்பி வைத்துக் கொண்டோம்.
ஒவ்வொரு ஊரிலும் பலசரக்குக் கடைக்காரர்கள்சமையலுக்குத் தேவையான பாத்திரங்களையும் சொற்ப வாடகை பெற்றுக் கொண்டு கொடுத்தபடியால், பிரயாணிகள் சமையல் பாத்திரங் களைச் சுமந்து செல்ல வேண்டிய சிரமம் இருக்கவில்லை.
கிளம்பினோம்.
இக்காலத்தைப்போல அக்காலத்தில் சாப்பாட்டுக் கடைகள் இருக்கவில்லை. சத்திரம் சாவடிகளுக்குப் பக்கத்தில் சில ஊர்களில் சோற்றுக்கடைகள் இருந்தன. எனினும் அங்கு சென்றபின் இத்தனை பேருக்குச் சாப்பாடுவேண்டும் என்று சொன்ன பிறகுதான்சமைத்துப் போடுவார்கள். தேரடியிலும், மரத்தடியிலும் தெருத்திண்ணைகளிலும் சிலர் இட்லி, தோசை, ஆப்பம், புட்டு, வடை போன்ற சிற்றுண்டிகள் விற்றார்கள். வள்ளிக்கிழங்கும் வேகவைத்து விற்றார்கள். பாலும் மோரும் வேண்டிய அளவு கிடைத்தது. கோவில்களில் வெண் பொங்கல், தயிர்சாதம், எலுமிச்சம்பழம்சாதம், சர்க்கரைப் பொங்கல் போன்ற பிரசாதங்களும் யாத்ரீகர்களுக்குக் குறிப்பிட்ட நேரங்களில் விலைக்குக் கிடைத்தன.
ஒட்டன்சத்திரத்திலிருந்து மறுநாள் அதிகாலையில் புறப்பட்ட வண்டிகளுடன் நாங்களும் துணைசேர்ந்து திண்டுக்கல் போய்ச் சேர்ந்தபின், எங்கள் வண்டிக்காரனுக்கும் குத்தீட்டிக் காவலனுக்கும் தகுந்த சன்மானத்தை வற்புறுத்திக் கொடுத்தனுப்பிவிட்டு, திண்டுக்கல் மலைமீதேறி அங்கிருந்த கோட்டை கொத்தளங்களைப் பார்த்துவிட்டு, ரயிலேறி மதுரை மாநகரம் போய்ச்சேர்ந்தோம். மதுரையில் எங்களுக்குப் பழக்கமான சண்முகம் பிள்ளை என்பவரின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துக் தங்கினோம்.
மறுநாள் மதுரையில் மாபெருங் கோவிலையும், அதன் கம்பீரமான கோபுரங்களையும், தமிழ்நாட்டின் மகோன்னதச் சிற்பிகளின் கைத்திறனையும், திருமலை நாயக்கர் மஹாலையும், மாரியம்மன் தெப்பக்குளத்தையும் கண்டுகளித்தோம். அதற்கடுத்த நாள் சண்முகம் பிள்ளையின் குடும்பத்தாருடன் அழகர்கோயில் சென்று திரும்பினோம்.
மறுநாள் மதுரையினின்று புறப்பட்டுத் திருப்பரங்குன்றம் சென்று சுப்பிரமணிய ஸ்வாமியைத் தரிசித்தோம். அக்கோவிலில் எங்களுக்கு அளிக்கப்பட்ட வெண்பொங்கலில் வடிந்த நெய்யின் மணம் அறுபது வருடங்களாகியும் என் நெஞ்சில் கமழ்ந்து கொண்டே இருக்கிறது. அழகர்கோவிலில் கொடுக்கப்பட்ட பெரிய வடையும் பிரமாதமாகவிருந்தது.
புண்ணியத்தைப் பறிகொடுத்துச் சோறுண்பதா?
மதுரையில் ரயிலேறி இராமேஸ்வரத்தையடைந்து அங்கொரு குருக்கள் வீட்டில் தங்கினோம். குருக்கள் வீட்டிலேயே உணவாதிகட்குப் பணம் கொடுத்து ஏற்பாடு செய்துவிட்டுச் சமுத்திரத்தில்
குளிப்பதற்குச் சென்றோம்.
உடன்வந்த குருக்கள் பல தீர்த்தங்களின் பெயர்களைச் சொல்லிப் பல இடங்களில் எங்களைக் குளிக்க வைத்தார். இறுதியாக நாங்கள் சேதுவில் குளித்து உடைகளை
மாற்றி, குருக்களின் இல்லத்துக்குத் திரும்பும் சமயத்தில், சாட்சாத் பழநியாண்டவர். போன்று மொட்டைத் தலையும், திருநீறு பூசிய நெற்றியும், கழுத்தில் உத்திராட்சமும், சட்டையில்லாத மேனியும், புன்முறுவல் பூத்த வதனமும் பூண்ட நாட்டுக்கோட்டைச் செட்டியார் ஒருவர் எங்களை அணுகினார்.
‘ஆச்சி! இதோ எங்கள் சத்திரம் வெகு சமீபத்தில் இருக்கிறது. அங்கு சௌகர்யமாகத் தங்கலாம். பிராமணர்களைக்கொண்டு சமைத்த நேர்த்தியான போஜனம் தயாராக இருக்கிறது. நீங்கள் என்னுடன் வந்து உண்டு இளைப்பாற்றிச் செல்லலாம் என்று மிக்க விநயத்தோடு அவர் உரைத்தார்.
விருந்தோம்ப வந்த அந்தச் சிவபக்தச் செல்வரைப் பார்த்து என்தாயார் கைகள் குவித்து வணங்கி-
‘செட்டியாரே! எங்களை மன்னிக்க வேண்டும். இதோ எங்களுடன் வந்திருக்கும் குருக்களின் வீட்டில் சகல ஏற்பாடுகளும் செய்துவிட்டு வந்திருக்கிறோம்’ என்றார்.
செட்டியார் மீண்டும் ஏதோ சொல்ல வாயெடுத்ததைக் காதில் போட்டுக் கொள்ளாமல் என் தாயார் நகர்ந்தார்.
சிறிது தூரம் சென்றபின் சுப்பையன்:
‘ஏனம்மா! செட்டியார் சத்திரத்தில் சாப்பாட்டை முடித்து விட்டுப் போனால் என்ன?’ என்று கேட்டான்.
‘போடா போ! பைத்தியக்காரா! இவ்வளவு பாடுபட்டு, இத்தனை தூரம் வந்து, தேடிய புண்ணியத்தைச் செட்டியார் கொஞ்சம் சோற்றைப்போட்டுப் பறிக்கப் பார்க்கிறான், பேசாமல் வா’ என்றார்.
இராமேஸ்வரத்தை விட்டுக் கிளம்பி, நாங்கள் திருநெல்வேலி, திருக்குற்றாலம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் முதான க்ஷேத்திரங்களைத் தரிசித்துவிட்டு, திருச்சி உச்சிப்பிள்ளை யாரையும், ஸ்ரீரங்கநாதரையும் வணங்கிவிட்டுத் திருப்பதி சென்று ஏழுமலையானை கும்பிட்டு, அம்மலைமீது மூன்று நாட்கள் தங்கியிருந்து கடைசியாக திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தைக் கண்குளிரப் பார்த்துவிட்டு, அம்மாள் சொன்ன ‘புண்ணி யத்தையும்’மூட்டைகட்டிக்கொண்டு கோவை மாநகர்திரும்பினோம்.
சேதுவில் செட்டியார் அழைத்த விருந்துக்கு நாங்கள் செல்லாவிடினும், திருவண்ணாமலையில் எங்களுடன் சத்திரத்தில் தங்கியிருந்த செட்டிநாட்டு ஆச்சிகள் பிரியத்தோடு தந்த தேன் குழலையும், பிற பணியாரங்களையும் தின்றதால், அவை இன்றும் என் மனதில் தித்தித்துக் கொண்டே இருக்கிறது!
பிளேக் நோயினால் எத்தனை தீமையும் சங்கடமும் விளைந்த போதிலும், அதனால் தீர்த்தயாத்திரை புரியும்படியான ஓர் அரிய சந்தர்ப்பம் வாய்த்தது எவ்வளவு பெரிய நன்மை!
இதைத்தானோபெரியவர்கள்தீமையிலும் நன்மை பயக்கும் என்று சொன்னது?
