தொகுப்பு : ஸ்ரீதர் சாமா /காஞ்சி மஹான் காப்பாற்றிய திருப்பதி

திருமலா திருப்பதி கோவிலில் வெளியில் தான் மாற்றங்கள் செய்வர். உள்ளே அர்த்தமண்டபம் போன்றவை அப்படியே தான் இருக்கும் . சுமார் 50 வருடங்கள் முன் ஒருமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் , ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஒரு முடிவிற்கு வந்தனர். அதாவது திருமலாவிற்கு பக்தர் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதாலும் மூலஸ்தானம் போகும் போதும் வரும்போதும் பக்தர்கள் ஒரே நுழைவாயிலை உபயோகிப்பதால் நெரிசல் ஏற்படுவதாலும் அதைத் தவிர்க்க மூலஸ்தானம் பக்கம் உள்ள அர்த்தமண்டபச் சுவரை இடித்து இரண்டு வாயில் அமைக்கலாம் என்னும் முடிவு அது. இந்தச் சுவர் இடிக்கும் பணிக்காக வெளிநாட்டில் இருந்து ரூபாய் 40 லட்சம் செலவில் ஒரு நவீன யந்திரம் தருவிக்க முடிவானது.

செய்தி அறிந்த கணபதி ஸ்தபதி அதிர்ந்தார். ஆகம விதிப்படி கட்டப்பட்ட அர்த்த மண்டபத்தை மாற்றுவதாவது? மூலஸ்தான மூர்த்தியின் சக்தி இதனால் பாதிக்கப்படுமே. வரப்ரசாதியாக இருக்கும் பகவான் இருப்பிடத்தை மாற்ற நாம் யார் ? ஆனால் இதையெல்லாம் யார் இன்றைய அரசியல் வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் சொல்வார்கள்? சொன்னால் தான் அவர்கள் கேட்பார்களா?

ஆனால் மற்றவர்கள் அழுத்தம் கொடுக்க, வேறு வழியில்லாமல் அறிக்கையில் கையெழுத்து போட்டுக்கொடுத்தார். கையெழுத்து போட்ட கையேடு காஞ்சி மகான் இருப்பிடம் அறிய ஆவல் கொண்டார். . திருமலை திருப்பதி விவகாரங்களில் எப்போதுமே காஞ்சி மடத்தைக் கலந்தாலோசிப்பார்கள். இந்த முறை என்ன ஆயிற்று?

காஞ்சி பெரியவர் அப்போது ஆந்திர கார்வேட்டி நகரில் முகாமிட்டிருந்தார். அவரிடம் போய் அழுதார். பெரியவர் பொதுவாக “எல்லாம் உன் மனசுப்பிரகாரம் நடக்கும். கவலைப்படாதே ” என்றார்.

எனினும் திருப்தி கொள்ளாமல் கணபதி ஸ்தபதி ஆந்திர முதலமைச்சரைப் பார்க்க விரைந்தார். முதல்வர் இல்ல வாயிலில் தடுத்தார்கள் .

“அப்பாய்ண்ட்மென்ட் இருக்கா ?”

“இல்லை . ஆனா விஷயம் ரொம்ப முக்கியம்.”

“ஒண்ணு பண்ணுங்க. இப்ப எப்படியும் அவரைப் பார்க்க முடியாது. விடியற்காலை நாலரை மணிக்கு மாடியிலிருந்து இறங்கிக் காபி சாப்பிட வருவார். அப்ப பாருங்க.” . பார்த்தார். முதல்வர் சம்பந்தப்பட்ட அமைச்சரைப் போனில் கூப்பிட்டார்.
” வெங்கண்ணா ஜோலிக்குப் போகாண்டி .” (வெங்கடாசலபதி விஷயத்தில் தலையிடாதே) விஷயம் பெரியவர் சொன்ன மாதிரி எளிதாக முடிந்தது .

தொகுப்பு ஸ்ரீதர் சாமா/WORDS ARE ENERGY – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)