சீவக சிந்தாமணி

 நாமகள் இலம்பகம்-4

உஷாதீபன்

வளமிக்க ஏமாங்கத நாட்டின் இயற்கை வளம் செழித்துக் கொழித்துக் கிடக்கிறது. நாமகள் இலம்பகம் பாடும் திருத்தக்கத்தேவரின் மனமும் நிறைந்து கிடக்கிறது. இயற்கையைப் பாடுகையில் அவர் மனம் துள்ளிக் குதித்துக் கொண்டாட்டம் போடுகிறது. 

மலையருவிகள் பெருக்கெடுத்து ஓடும்  காட்சியை வர்ணிக்கையில் ஒரு நாட்டையே சூறையாட வந்த ஒரு மாமன்னனின் செயல்பாடு எப்படி வெறி கொண்டு, புயலெனப் பாய்ந்து கதி கலக்குமோ அதற்கொப்ப முறையிலான இயற்கையின் சீற்றம் தன் செழுமையான வளத்தை மலை நெடுகிலும் சேகரித்து அள்ளிக் கொண்டு வந்து அந்த நாட்டில் கொட்டியது என்பதாக உள்ளம் ததும்ப எடுத்துரைக்கிறார். 

இலங்கு நீள்முடி இந்திரன் மார்பின்மேல் விலங்கி வீழ்ந்தமுத் தாரமும் போன்றவை நலங்கொள் பொன்னொடு நன்மணி சிந்தலால் கலன்பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே 

கலன்பெய் பேழை… எனும் வரியில் வரும் கலன் என்ற சொல்லுக்கு அணிகலன் என்று பொருளாகிறது. இதுவே வெவ்வேறு கூறுகிறது. கலன் என்னும் சொல்லின் மூல வடிவம் கலம். இடம்-இடன், நிலம்-நிலன், அகம்-அகன். அணிகலம் என்பதாக யாரும் எழுதுவதில்லை. அணிகலன்தான். என்கிறார் எழுத்தாளர் திரு.பெருமாள் முருகன் தன் விளக்கவுரையில். 

மலையிலிருந்து வீழும் அருவிகள் பொன் துகள்களையும், மணிக்கற்களையும் சுமந்து நவரத்தினப் பேழையைக கவிழ்த்துக் கொட்டியது போல் இருந்தன. நெடுமுடியைக் கொண்ட இந்திரனின் அகன்ற மார்பில் உல்லாசமாய்க் கிடந்தசையும் முத்துச்சரம் போல, நீர் முத்துக்களை ஏந்தி அந்த நவரத்தினப் பேழையைக் கவிழ்த்துக் கொட்டியது போன்றதான காட்சி இன்பத்தை அளித்தது என்று விளக்குகிறார் திருத்தக்கத் தேவர்.

வள்ளல் தைத்தல மாந்தரின் மால்வரைக் கொள்ளை கொண்ட கொழுநிதிக் குப்பையை உள்ளம் இல்லவர்க்கு ஊர்தொரும் உய்த்து உராய் வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே…!

இங்கே மால்வரை என்ற சொல் பெரிய மலையைக் குறிக்கிறது. மல் என்றால் வலிமை என்று பொருள். வலிமையான கருங்கற்களால் ஆன நிலப்பகுதி என்று பொருள் கொள்ள வேண்டும். மலை என்று அழைக்கப்பட்டது இங்கே மால்வரை என்று நின்று மலையையே குறிக்கிறது.

அதாவது மலையினின்று சுமந்து வந்த பொற்குவியல்களை, நாட்டிலே இல்லாத ஏழையர்க்கு வாரி வழங்குவதுபோல், இரப்போர்க்கு இல்லையென்று சொல்லாது வாரி வழங்கும் வள்ளல் பெருந்தகையாய் வாரிச் சுருட்டிக் கொண்டு வந்து மலையை விட்டிறங்கி நாட்டிற்குள் கொண்டு வந்து பொற்குவியல்களைக் கொட்டிச்  சேர்த்து நாட்டையே மூழ்கடிக்கும் நிலையாய் பெரும் கடலே உட்புகுந்ததோ என வியக்கும் வகையில்  வளத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் அருவிகள் என்பதாக இதை உணர்ந்து நாம் வியந்து நிற்கிறோம். 

———————————