
அதங்கோடு அனிஷ்குமார்
ஒரு வேளை
நீங்கள்
ஒரு பறவையாக விரும்பினால்
எந்தப் பறவையாக விரும்புவீர்கள்?
நெல்மணிகளுக்காக
கால காலத்திற்கும்
கூண்டுக்குள்
அடைந்து கிடக்கும்
ஜோசியக் கிளியாகவா?
வீட்டு கூண்டுகளில்
அடைபட்டு
விடுதலையை
மறந்த கிளியாகவா?
மரங்களும் பழங்களும்
குறைந்து கொண்டே வரும்
மனிதர்கள்
நிறைந்த உலகில்
ஒரு பழத்திற்காக
பல மைல்கள்
பறக்கும் கிளியாகவா?
‘விட்டு விடுதலையாகி’
நின்ற
சிட்டுக்குருவிகள்
கைபேசி கோபுரங்களின்
ராட்சச அலைகளால்
அருகிவரும் காலத்தில்
ஒரு சிட்டுக்குருவியாகவா?
மனித சஞ்சாரங்களுக்கஞ்சி
அடர் புதர்களில்
தஞ்சம் புகுந்து
வெளியேறும்
தருணமொன்றில்
புறவெளிச்சாலைகளில்
செத்துக்கிடக்கும் செம்போத்தாகவா?
ஒரு வேளை?
ஒரு விலங்காக
விரும்பினால்
எந்த விலங்காக விரும்புவீர்கள்?

அழகிய கற்பனை. விலங்குகளிலேயே அரக்கத்தனமான விலங்கான மனிதன் மற்றோரு விலங்காக விரும்புவது அசாத்தியமே.
மனிதனற்ற உலகில் சாத்தியமாகலாம். ஆனால் …என்ன…இந்த அழகான கவிதை பிறந்தும் இருக்காது…..படிக்கவும் முடிந்திருக்காது.