வாஷிங் மெஷின்

 

எஸ் வி வேணுகோபாலன் 

“வணக்கம் சார்…இவர் என் உதவியாளர், மெஷின்ல என்ன பிரச்சனை சொன்னீங்க….”

“ஒழுங்கா வாஷ் பண்ணிக் கொடுத்துருது சார்…ஆனால், சவுண்ட் கொஞ்சம் அதிகமா வருது. உள்ளே டிரம் சுழல்றது கொஞ்சம் பாலன்ஸ் இல்லாத மாதிரி தோணுது, பையன் தான் சொன்னான், சாரை அழைச்சு பார்க்கச் சொல்லுன்னு..”

“இதோ பார்த்துரலாம் சார்…. தம்பி கொஞ்சம் இப்படி வாங்க”

ப்படித் தான் அன்றைய நண்பகல் பொழுது மிகுந்த நம்பிக்கையோடு கடந்தது. வழக்கமாக வரும் வாஷிங் மெஷின் சர்வீஸ் செய்பவர், உதவியாளரோடு களத்தில் இறங்கினார். 

“சார் நேரம் எடுக்கும்னா அப்புறம் பார்க்கலாமா, ஒன்றரை மணிக்கு உள்ளே என் பையன் காலேஜ் ஹவர்ஸ்…ஆன் லைன் வகுப்பு. சத்தம் கேட்டால் சிக்கலாயிரும்”.

“அதுக்குள்ளே வேல முடிஞ்சிரும் சார்.. எங்கே என்ன ஃபால்ட் பார்த்துரலாம் “

இருபது நிமிடங்களுக்குள் சொல்லிவிட்டார்:

“சார், டிரம் தான் பிரச்சனை…இங்கே பாருங்க…பூரா அரிச்சிருச்சு…செட் ஆகாது. வேற மாத்தணும். “

“அய்யய்யோ …இப்போ ரெண்டு வருஷமோ என்னவோ கூட ஆகல, இப்போ தான் புது டிரம் மாத்திச்சு சார்…”

“வாரண்டி இருக்கா…நான் வந்தப்புறம் மாத்தலையே சார்…மெஷின் ஒழுங்காய் போயிட்டிருந்துச்சே …”

“இல்ல…அது வேற ஒரு ஆள் வந்து செஞ்சது…”

“இப்ப மாத்தித்தான் ஆகணும் சார்…இங்கே பாருங்க (மொபைலில்) டிரம்னா இப்படி இருக்கணும் (புது டிரம் புகைப்படம்)…உங்க டிரம் நீங்களே பாருங்க…வேற எந்த பிரச்சனையும் இல்ல…சொன்னீங்கன்னா இரண்டு நாள்ள வேற டிரம் போட்டு ஓட வைக்கலாம்…அப்புறம் அஞ்சு வருஷம் மெஷின் ஓடிக்கிட்டே இருக்கும், டிரம்முக்கு ஒரு வருஷம் கியாரண்டி”. 

“அவரும் அப்படித்தான் சொன்னாரு…போயிருச்சே சார்..”

“சார்…இதெல்லாம் பொருளுங்க சார்..வாரண்டி கேரண்டி கொடுக்கிறோம்..சிலது உத்தரவாதம் சொல்லலாம், அதுக்குமேல நீங்க பயன்படுத்தறது எல்லாம் இருக்கே, எங்க சித்தப்பா சும்மா கல்லு மாதிரி இருப்பார் சார், இந்த கொரோனாவுல பட்டுன்னு மூணாம் நாள் போயிட்டாரு, யாரைப் போய்க் கேக்கறது…”

“சரி…சொல்லுங்க எவ்வளவு ஆகும் “

“டிரம் போட்டு சர்வீஸ் பண்ணிக் கொடுத்துறலாம், மொத்தமா ஒன்பதாயிரம் ஆகும் “

“என்னங்க, ரொம்ப ஹெவியா இருக்கு…அவரே ஆறாயிரம் தான் கேட்டாரு…”

“அது எந்த வருஷம் சார்… நீங்க யோசிச்சு சொல்லுங்க..கால் பண்ணுங்க..உடனே வந்து பண்ணித்தரேன்..தம்பி, டூல்ஸ் எல்லாம் எடுத்துப் போட்டுக்கிட்டியா. .போலாமா… ஓகே, வரேன் சார்..”

இருவரும் போன பிறகு தான் கவனிக்கிறேன், டிரம் வெளியே எடுத்து வைத்தது அப்படியே இருக்கிறது. மெஷின் உள்ளிருந்து சிறியதும் பெரியதுமாக குறைந்தபட்சம் 12 பொருள்கள் இப்போது வெளியே இருந்தது.

குடும்ப செயற்குழு உடனே வாட்ஸ் அப், மெசேஜ், அலைபேசி அழைப்பு மூலம் சந்தித்துப் பேசி, ‘வேண்டாம், இந்தப் பழைய மெஷினுக்கு இன்னும் மேலே மேலே கொட்டி அழவேண்டாம், வேறு வாங்கி விடுவது’ என்று முடிவு. 

மாலை, சர்வீஸ்காரரை அழைத்து, “சார், இனி டிரம் எல்லாம் மாற்ற வேண்டாம் என்று யோசிக்கிறோம். டிரம்முக்கு அதிக விலையா இருக்கு.”

சரிங்க சார்.. எட்டாயிரம் கொடுங்க சார்…முடிச்சி தர்றோம்….”

“இல்ல சார்…நாங்க வேற மெஷின் பாத்துக்கறோம்”

” நல்ல மெஷினா பாத்து வாங்கிக்கங்க..”

“நன்றி சார், இந்த மெஷினை என்ன செய்யலாம் சார்..”

“அது ஒன்றும் வேலைக்கு ஆகாது சார்…ஸ்க்ராப் தான் எடுத்துப்பாங்க..அதிகபட்சம் 700 ரூபாய்க்குப் போகும். அவ்வளவு தான்” 

“என்ன சார்… முந்தா நேற்று வரை நல்லா ஓடி இருக்கு..சரி, அந்த டிரம், ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் வெளியே எடுத்து வச்சது அப்படியே போயிட்டீங்க, பழையபடி செட் பண்ணிக் கொடுக்கணுமே சார்..”

“அது திரும்ப உள்ள உக்காராது சார்…வேணும்னா அந்தத் தம்பிய அனுப்பறேன்…அதுக்கு  ஆயிரத்து ஐநூறு ஆகும், நீங்க ஆயிரம் கொடுத்துருங்க, போதும்…”

“என்ன சார், மெஷின் 700க்குக்கூட போகாதுன்னா, பழையபடி எடுத்து வைக்கவே ஆயிரம் கேட்டா எப்படி சார்… “

“சார், மெஷின்ல அப்படித்தான் சார்…நான் ஏற்கெனவே உங்களுக்கு சொன்னேன் இல்ல..”

“ஆமா, உங்க சித்தப்பா கல்லு மாதிரி, அதானே, எங்க அத்தை கூட போயிட்டாங்க சார் திடீர்னு…நான் பாத்துக்கறேன்” என்று உரையாடல் முடிந்தது. 

சரி, இந்த பழைய மெஷினை எப்படி ‘டிஸ்போஸ்’ செய்வது என்று ஆலோசனை நடந்தது வீட்டில்.  பழைய பேப்பர் கடைக்காரர் இப்படியான பொருள்களும் எடுப்பவர்தான். அவர் நம்பர் எடுத்து அழைத்தேன்.

“சுந்தர், வணக்கம்”

“சொல்லுங்க சார்…”

“பழைய வாஷிங் மெஷின்…டிரம் மட்டும் ரிப்பேர் …எடுத்துக்க முடியுமா..”

“இப்போ ஓடுதுங்களா சார் “

“இல்லிங்க…ஓடாது, அது இல்லாம, டிரம் எல்லாம் தனித்தனியா கழற்றி வச்சிருக்கு “

“அப்படியா, என்ன மாடல் மெஷின், சார்?”

“சாம்சங் “

“எந்த வருஷம் வாங்கினது “

இருக்கும், எட்டொம்பது வருஷம் 

“டாப் லோடுங்களா, ஃபிரண்ட் லோடு மெஷினா?”

:”ஃபிரண்ட் லோடு தான்”

“அப்ப, 500 ரூபாய்க்குத் தான் எடுப்பாங்க, அதுக்கு மேல தேறாது சார் …”

“இந்த 500க்கு இத்தனை கேள்வியா கேட்பீங்க சுந்தர்?”

அலைபேசி உரையாடல் முடிந்ததும், “அப்படின்னா, அங்கேயே கூப்பிட்டுப் பேசலாம்ப்பா” என்றான் மகன். 

முன்னதாக, ஏசி, ஃபிரிஜ், வாஷிங், மெஷின் எல்லாம் எடுக்கும் ஒரு கடைக்குப் பேசி இருந்தோம், அவர்கள் அப்படியே புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பக் கேட்டிருந்தனர், அனுப்பியாயிற்று,

இப்போது மீண்டும் நினைவூட்டல் போட்டதும், 800 என்று மட்டும் பதில் வந்தது. 

அவர்களை அழைக்கவும், மூன்று நான்கு நினைவூட்டலுக்குப் பிறகு மறுநாள் மாலையில் வந்து கையோடு 800 ரூபாய் கொடுத்துவிட்டு பழைய மெஷின், டிரம் எல்லாமும் எடுத்துக் கொண்டு போய்விட்டனர்.. 

ந்தப் பெருமழை நாள்களில் வீட்டை வெள்ளநீர் சூழவும், தப்பி வெளியேறி மகள் வீட்டில் குடிபுகுந்தோம்.  மழை விட்டுக், கொஞ்சம் தெருவில் இலேசாகத் தண்ணீர் மட்டம் குறைந்த ஒரு நாளில், மகனோடு வீட்டினுள் நுழைந்துபோய் என்ன நிலைமை என்று பார்க்கையில், அதிர்ஷ்டவசமாக, வெள்ள நீர் உள்ளே புகாமல் இருந்தது. 

மகன் கேட்டான், “மழைக்குப் பிறகு வாங்கி இருக்கலாமோ இந்தப் புது மெஷினை, ஒன்றும் ஆகி இருக்காதுல்ல. ? ஆனா, வாரண்டி எல்லாம் உள்ளே எடுத்து பத்திரமா வச்சிருக்கேன் “.

ஒன்றும் பதில் சொல்லாமல் என்னை மௌனமாகப் பார்த்தது புதிய வாஷிங் மெஷின்.  

17 Comments on “வாஷிங் மெஷின்”

  1. நாட்டு நடப்பை எடுத்துச் சொல்லும் யதார்த்தமான எளிய நடையில் கட்டுரை. அருமை கவிஞரே !

    – பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை சென்னை 🦚👌

  2. நிதர்சன உண்மை. எல்லோரும் வேலையாட்களின் தயவில்தான் வழவெண்டியுள்ளது.

    உண்மையை நன்றாக படம் பிடித்து கட்டியுள்ளார்.

  3. அடடா…பழுதாகாத வரை எந்த மெஷினுமே பொக்கிஷம் தான் என்ற உண்மையை பிரதிபலித்தது.

  4. ஒரு எதார்த்தமான நிகழ்வுதான். அதை சுவைபட எடுத்துக் கூறும் பொழுது நம் வீட்டில் நடந்ததாகவே பார்க்க தோன்றிற்று. அருமை.

    1. எல்லோர் வாழ்விலும் தினமும் நடக்கும் எதார்தம்தான் இந்த நிகழ்வு, ஆனாலும் எல்லோராலும் இதுபோன்று கோர்வையாக இனிமையாக வார்த்தைகளை அடுக்க முடியாதே! இதுதான் எழுத்தாளர்களின் சிறப்பு. மிகவும் ரசிதேன் நன்றி. வாழ்த்துகள் .

  5. மழை வெள்ளத்தில் உயிருடன் மனிதர்களும் ஆடு மாடு கோழி அடித்து செல்லப்பட்டது ஞாபகம் வந்தது. அவர்களை மீட்க முடியாமல் போனது மனவருத்தம்.‌ வாஷிங் மிஷின் ரிப்பேர் பண்ணலாம். வேறு மாற்றலாம். ஆனால்?!

  6. எனக்கு சென்ற ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட இதே அனுபவத்தை உங்களுக்கும் ஏற்பட்டுள்ளதை குறித்து ஒரு ஆறுதல். நீங்கள் மெஷினை மாற்றி விட்டீர்கள். நானோ மாற்றிட இயலாமல் பழுது நீக்கித்தான் உபயோகித்து வருகிறேன்.
    அனுபங்களை பகிர்ந்த்தற்கு நன்றி.

  7. ஒவ்வொருவர்க்கும் கொஞ்சமாவது தொழில்நுட்ப அறிவு வேண்டும். இல்லையென்றால் சேவாதாரர் கேட்பதைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருக்க வேண்டும்.

  8. ஹா…ஹா…..
    வாஷிங் மெஷினுக்கு கம்பெனி வாரண்டி !
    கம்பெனி வாரண்டிக்கு….?
    மறுவருடம் வரும் மழையும் வெள்ளமுமே வாரண்டி கொடுக்கும் 😌

  9. The dialogues and the evaluating method by the service man are funnily picturised.
    When he quotes an instance of his chitappa thou strong like a stone had to give-in before covid in comparison with the product is not unrealistic.
    The service man generally quotes examples are always dreadful is very much portrayed.
    Good writing ✍️

  10. ரீபிள் விலையும் ஒரு ரூபா
    புதிய ரிபில் பேனா விலையும் அதே

    வாங்கு
    பயன்படுத்து
    ரிப்பேர் ஆனால்
    தூக்கி எறி

    பழசையே ரிப்பேர் செய்து பயன்படுத்த கனவிலும் நினைக்க கூடாது

    ஒரு தடவை வாங்குனதையே ஊழிக்கும் பயன்படுத்த நினைச்சா
    நாங்க எப்படி பொழைக்கிறது ?

Comments are closed.