மதுவந்தி
கூடவே பயணித்தாலும்
சேரவே முடியாத தண்டவாளங்கள் போல்
என் கூட வர உன்நினைவு மட்டுமே.
விழி ததும்பும் நீர்
நடை மேடையிலும் பிரதிபலிக்க
தூண் ஓரம் ஒளிந்து
உன்னைப் பார்த்திருக்கிறேன்.
கூடவே பழகிய நாட்களில்
உன்னிடம் சொல்லத் தயக்கம்.
இன்று புத்தாடை சரசரக்க,
வளையோசை சிணுங்க,
மருதாணிச் சிவப்பேறிய கையசைத்து,
அம்மாவைக் கட்டிக் கொள்கிறாய்.
வழியனுப்ப வந்திருக்கும் குடும்பம்
கண்ணில் நீர் வழிய உன்னை
விடையனுப்பத் தயாராகிறது.
உள் நுழையும் ரயிலின் சப்தம்
கேளாமல் நின்றிருக்கிறேன்,
புத்தகத்துள் புதைத்த மயிலிறகென
உன் நினைவைப் புதைத்தபடி.
– ( பூபாளம் கீதம்14 ல் வெளியானது)
