பிஸ்ரீ/நான் அறிந்த தமிழ் மணிகள்

நம் தேசிய மகாகவி

இருபதாண்டுகளுக்கு மேலாக நாம் வளர்த்து வரும் சுதந்திரத்திற்கு இத்தமிழகத்தில் அடிப்படை அமைத்தவர்களில் இவரும் ஒருவர் என்று பேசிக்கொண்டு வந்தேன் நண்பர் முதலியாரிடம்.
”அப்படி அவர் என்ன செய்து விட்டார்?”
சுந்தர முதலியாரே! உம்மைச் சுதந்தர முதலியார் ஆக்கி விட்டார்!”
“அதனால் என்ன பயன்?”
“அதுவே பயன்!”
அந்தப் பயனையும் பொருளையும் நாம் இன்று சரியாக உணர்ந்து கொள்ளவில்லையெனினும், நாளடைவில் மேலும் மேலும் அனுபவித்த வண்ணமாயிருப்போம். இது ஒரு பழைய நாடு. எத்தனையோ பழம்பெரு நாகரிகங்கள் மறைந்து விட்டன. இந்திய நாகரிகம் எத்தனையோ ‘மறுமலர்ச்சிகள்” பெற்று வளர்ந்த வண்ணமாக இருக்கிறது. இழந்த சுதந் திரத்தை மீண்டும் பெறுவதால் இந்திய நாகரிகமும் பண் பாடும் ஒரு புதிய மார்க்கண்ட சிகிச்சை பெற்று உலகிற்கே புதுமையாக விளங்கும் என்பது பாரதியின் தீர்க்கதரிசனம்.
பாரதியார் பிரமாதமாகச் செய்ததுதான் என்ன? இக் கேள்வியை இன்று சுந்தர முதலியாரைப்போல் வேறு சிலரும் கேட்கலாம். ஒரு சமயம் டாக்டர். ஜான்சன் ஸ்காத்திலாந்தில் யாத்திரை செய்தபோது அந்தப் பிரதேசவாசி ஒருவனை நோக்கி, “கிராம்வெல் அப்படிப் பிரமாதமாய்த் தன் தேசத்திற்காக என்ன செய்துவிட்டான்?” என்று கேட்டார்.
”அவரா? அரசர்களின் கழுத்து உருக்கால் ஆக்கம் பட்டதன்று. தலைவேறு, முண்டம் வேறு என்று பிரித்துவிட இடம் கொடுக்கிறது. இந்த நிலையை அரசர்களே பார்த்துக் கொள்ளும்படி அவர்கள் பார்வையைக் கழுத்தை நோக்கித் திருப்பி விட்டார் கிராம்வெல் துரை!” என்று சூத்திரமாகச் சொன்னான் ஸ்காத்திலாந்துக்காரன். இப்படிப் பயங்கரமாக ஒன்றும் செய்துவிடவில்லை நம் பாரதியார். எனினும் நம் கவிஞரும் கிராம்வெல் துரையைப் போல் பரமபதத்தின் பயங்கர அதிகார முத்திரை தரித்து வந்த ஒரு மகாபுருஷர்தாம்.
கிராம்வெல் செயல் வீரர்; பாரதி பாட்டுத்திறத்தால் புதிய பாரதம் படைத்த அதி வீரருள் ஒருவர். மக்களின் இதயத்தைப் பெருஞ்சிந்தனை வழியிலும் பெருஞ் செயல் துறைகளிலும் திருப்பிவிடும் பாடலும் செயல்தான்! நாம் வாழும் நாடு நமது என்றுகூடத் தெரிந்து கொள்ளாமல் “இது பிரிட்டிஷ் இந்தியா” என்று நம்பிக் கொண்டிருந்த காலம் அண்மையில் தான் மறைந்து போயிற்று. அது பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்ப் போகுமாறு ஆம்; செய்த பாட்டுத்திறத்தைப் பாரதியாரின் படைப்பு செயல்-திறன் எனக் கூறுவதில் என்ன தவறு?
நான் மாணாக்கனாக இருந்தபோது எங்கள் சரித்திர ஆசிரியர், “இது ஏழை இந்தியாதான்; ஆனால் பிரிட்டிஷ் பேரரசின் மணிமுடியில் கோகினூர் வைரமாகும்!” என்று வெட்கப்படாமல் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். நாகரி கமும் பிரிட்டிஷ்காரர் இங்கே இறக்குமதி செய்த பொருள் தான் என்று நம்பியிருந்த கருந்துரைகளும் அந்நாளில் உண்டு. இளைஞர்களிலும் உண்டு, முதியவர்களிலும் உண்டு. அந்த நிலையில் வந்து விழுந்தது பாரதியின் கணீர் என்ற மணி வாக்கு எங்கள் காதிலே.

நாமிருக்கும் நாடு நமது
என்பதறிந்தோம்- இது
நமக்கே உரிமையாம்
என்பதறிந்தோம்!

பாரதியார் கண்டு படம் பிடித்துப் பாட்டிலே காட்டிய உண்மை இது. ஆசிரியர்களிடம் நாங்கள் கற்ற பூமி சாத்திரப் பாடங்களைக் காட்டிலும் பாரதியார் அன்று தாம் நடத்திய ‘இந்தியா” பத்திரிகை மூலமாகப் போதித்த பாடம் எங்கள் உள்ளத்தில் ஆழ்ந்து விட்டது. பாரதியார் அப்பொழுது பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். நாளடைவில் கவிஞராக மாறிப் பிறந்து “கவிதையே என் தொழில்” என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் துணிந்தார். இந்தத் தொழில் சோறு போடுமா? வயிற்றுப் பசி தீர்க்கப் பத்திரிகைத் தொழிலை நம்பியிருந்தார்.
பாரதியாரின் வாழ்க்கை க வரலாறு குறித்துப் பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. எனினும் இந்த வாழ்க்கையின் உயிர்நாடி பேசுவது இவர் கவிதையிலேதான்.

நித்தச் சோற்றினுக்கே ஏவல் செய வந்தேன்;
நிகரிலாப் பெருஞ்செல்வம் உதவினான்!

என்ற வாக்கியத்தைத் தான் பாருங்கள். இது கண்ணன் பாட்டில் வருகிறது. பத்திரிகைத் தொழில் செய்து கொண் டிருக்கும்போது வயிற்றுக்கு உணவு மட்டுமா கிடைத்தது பாரதியாருக்கு? நிகரில்லாப் பெருஞ் “செல்வ” மாகிய கவிதையும் வாக்கிலே வந்து விழுந்ததாம். கண்ணன் அருளாலே.
தமது பத்திரிகைத் தொழிலைப் பாரதியார் பெருவிநய மாகவும் உசிதமான நகைச் சுவையுடனும் குறிப்பிடுகிறார்.

திண்ணை வாசல் பெருக்க வந்தேன்
எனைத் தேசம் போற்றத்தன் மந்திரி ஆக்கினான்!

என்ற வாக்கை உற்று நோக்குவோம். ‘திண்ணை வாசலில் பெருக்கும் தொழிலைத்தான் செய்தாராம். பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கும்போது அதற்குக் கூலியாக மந்திரி பதவி கிடைத்துவிட்டதா என்ன? எந்த ராஜ்யத்தின் மத்திரியாகி விட்டாரோ? என்ன பகற் கனவு!
இவர் செய்த பத்திரிகைத் தொழிலுக்குக் கிடைத்த கூலி, பரிசு எல்லாம் துன்பம்தான், தீராத வறுமைதான், அதிகாரிகளின் ஓயாத தொல்லைதான். “திண்ணை வாசல் சுத்தம் செய்கிறானே!” என்று நன்றி செலுத்தினார்களா? தூசியைக் கிளப்பிவிட்டானே!” என்று கர்ச்சித்தது பிரிட்டிஷ் சிங்கம் , “ஒட்டடை அடிக்க வேண்டாமே!” ஆனால்

அச்சமில்லை அச்சமில்லை,
அச்சமென்பதில்லையே

என்று பாடிக் கொண்டே பாரதியார், அன்னிய அதிகாரிகளின் மூளையில் ஒட்டிக்கொண்டிருந்த ஒட்டடைகளையும் துடைக்க முயன்றார் தம் ‘துடைப்பத்தாலே!’ (எழுது கோலாலே).
இதன் விளைவாகப் பாரதியார், சென்னையை விட்டுப் புதுவையில் வசிக்க நேர்ந்தது. ஜராசந்தனுக்காக வட மதுரையைவிட்டுத் துவாரகையில் குடியேறிய கண்ணன் போலே. புதுவையில்தான் கண்ணனுக்கு மந்திரியானார்! புரட்சிக் கவிஞர் என்பது குறிப்பு. கண்ணனின் நியமனப் பத்திரம் கண்ணன் பாட்டிலேயே காணக்கிடக்கிறது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இவருக்கு மந்திரி பதவி கிடைத்துவிட்டது! அதுதான் தேசீயமகாகவி என்ற நிலையான பதவி. கவிஞர்களை மக்கட் குலத்திற்கெல்லாம் பொதுவான சட்டசபை உறுப்பினர் என்று ஆங்கிலத்தில் கூறுவதுண்டு. அரசியல் வாதங்களுக்கு அப்பாற்பட்ட சட்ட சபைதான்! ஆனால் இந்தக் கற்பனைக்கும் எவ்வளவு மேலே பறந்து போகிறது பாரதியாரின் மனோபாவம்!
கவிஞனைக் கடவுளின் மந்திரி சபையில் இடம்பெறச் செய்த நெஞ்சுத் துணிவை என்னென்பது? கவிஞனிடம் ஆலோசனை கேட்கிறதாம் தெய்வம். பகுத்தறிவுக்கு எட்டாத கவிஞரின் உள்ளொளியாக உண்மை நிலையை இப்படி வற்புறுத்தும் பாரதியாரைப் பாரத பூமியின் அதிதேவதையான பாரதசக்தி தனக்குரிய ஆஸ்தான கவியாக்கிக் கொண்டாள்! கம்பனை ராம்ராஜ்யத்தின் ஆஸ்தான கவி என்று கூறுவது அவ்வளவு உண்மையானது எவ்வளவு பாரதியாரைப் பாரத சக்தியின் ஆவேச பீடமாகிய ஆஸ்தான தமிழ்க் கவியாகக் கண்டு கொள்வதும்.
தமிழனும் பாரத சக்தியின் பிள்ளைதான்: மூத்த பிள்ளை இந்திய நாகரிகத்தின் சிறப்பான யாசுக் கொள்ளலாம். அம்சங்களில் பல இந்தியா என்ற பாரத சக்திக்குத் தமிழர் காணிக்கைகள் என்பதிலும் கள் மனமுவந்து அளித்த பாரதியாருக்குச் சிறிதும் ஐயமில்லை. தமிழன் ஒரு சிறந்த பண்பாட்டை உருவாக்கி வந்திருக்கிறான், சரித்திர காலத் திற்கு முன்பே. இதிலும் இவருக்கு ஐயப்பாடு இல்லை. ஆனால் இந்தப் பண்பாடு அகில இந்தியப் பண்பாட்டுடன் முரண்படுவதன்று. தமிழகம் இந்தியா என்றவீட்டில் குறுக்குச் சுவர் ஒன்றும் எழுப்பிவிடவில்லை. தமிழர் கதை இந்திய நெடுங்கதை என்ற இதிகாசத்தின் காண்டம்தான்- சுந்தர காண்டம் என்று மதிப்பிடுவதும் பொருத்தமே. இவற்றை யெல்லாம் இவர் பாடல்கள் மெய்ப்பிக்கின்றன.
தமிழகமும் ஒரு முக்கியமான பாரத சக்தி பீடம்தான். தமிழர்களின் நீண்டகாலச் சாதனைகளையும் ‘ஆரியசம்பத்’ தாக மதிப்பிடுகிறார் கவிஞர். இவருக்கு ஆரிய-திராவிட வேற்றுமைகளில் நம்பிக்கைகிடையாது. அன்னிய அரசினரின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு ஆரிய-திராவிட ஆராய்ச்சிகளும் பயன்பட்டன என்பதை அறியாதவரா பாரத சக்தியின் இத்தமிழ்க்கவி? சாதிப்பிரிவுகளுடன் புதிய சூதுப்பிரிவு களும் வேண்டுமா எனக் குமுறியது இவர் நெஞ்சு. இந்தக் குமுறல்களையும் கதறல்களையும் கவிதையாக்கியுள்ளது இவர் மேதை.
மாணாக்கனாக ஒதுங்கி நின்று பாரதி தரிசனம் செய்த நான். 1919ஆம் ஆண்டிலும் 1920ஆம் ஆண்டிலும் இவரிடம் நெருங்கி வந்து தோழமை கொண்டேன். ”ஊழிக் கூத்து” முதலான பாடல்களை இடிக்குரலில் இவர் பாடக் கேட்டிருக்கிறேன்.

ஆடை குலைவுற்று நிற்கிறாள்-அவள்
“ஆ” வென்று அழுது துடிக்கிறாள்

என்று இவர் பாடியபோது, பாஞ்சாலி வாயிலாக உரிமை இழந்த பாரத அன்னையைக் கண்டேன். கண்ணன் அருளால் துகில் வளர்ந்ததும், இழந்த உரிமைகளை இந்திய அன்னை மீண்டும் பெறுவாள் என்ற நம்பிக்கையும்பெற்றேன்.
சுருங்கச் சொன்னால், பாரதசக்தியே பாரதியாகிப் பாரதி-தமிழாகி வந்து தன்எதிர்கால மகோன்னத நிலையைப் புலப்படுத்திக் கொண்டதோ எனத் தோன்றியது அந்த நாளிலே
இன்றும் அப்படித் தோன்றுகிறது பாரதி பாட்டை நேரில் கேட்ட அந்தப் பாக்கியத்தை நினைத்துப் பார்க்கும் போது.