
பூக்காத செடிக்கு
இலையே தான் பூவடியோ!
பிள்ளையிலா பெண்ணுக்கு
புருஷனே தான் பிள்ளையடி!
ஆலையில்லா ஊருக்கு
சர்க்கரை இலுப்பையடி!
ஆளில்லாக் கோயிலுக்கோ
வௌவாலே பக்தனடி!
வேகமில்லா வண்டிக்கு
சாலையிறக்கம் வேகமடி!
வேலையில்லா வீணனுக்கு
ஊர்வம்பே வேலையடி!
ரசிச்சவன் கண்ணுக்கு
ராட்சசியும் ரம்பையடி !
பசிச்சவனுக்கே பழையசோறும்
பந்தி வைச்ச விருந்தடியோ!
கெட்டுப்போன உறவுக்கே
திருவிழா ஒரு குசலமடி!
விட்டுப்போன மனசுக்கு
ஊர்சேவை மருந்தடியோ!
ஊர் திரியும் காளைக்கு
விளைஞ்ச இடம் தொழுவமடி!
பேர் தெரியா சாமிக்கு
படையல் வச்சா போதுமடி!
வித்தையறியா வல்லவனுக்கு
வெறும் வாயில் பந்தலடி!
ஒத்தைப்பனை நிழலுமே
கால்பதிக்கப் போதுமடி!
எல்லாமும் எல்லோர்க்கும்
இருப்பதிங்கு இல்லையடி!
உள்ளதுகொண்டு தளராமல்
ஓட்டுவதே வாழ்க்கையடி!
