அழகியசிங்கர்/ஆயிரம் நீதிக் கதைகள் – பாகம் 3

இரு பெண்மணிகள்

போலந்து நாட்டில் பிரபு குலப் பெண்மணிகள் இருவர் தத்தம் குதிரை வண்டிகளில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்களது வண்டிகள் ஒரு குறுகிய சந்தில் எதிரெதிராக வந்து நின்றுவிட்டன. எவராவது ஒருவர் மற்றவருக்கு வழி விட்டாலொழிய இருவருமே அச்சந்தைக் கடக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால் இருவரில் எவரும் மற்றவருக்கு வழிவிடுவதாயில்லை. அவர்கள் வழக்கு முற்றியது. எவர் வண்டி முதலில் விலகி வழிவிடுவது என்று இருவருமே மன்னரிடம் தீர்ப்புக்கு முறையிட்டனர்.
மன்னரோ, “நமது கிறிஸ்தவப் பண்புப்படி இளையவரே மூத்தவருக்குப் பணிவாக பாதை விட வேண்டும்” என்று சொன்னார்.
ஆனால் நடந்தது என்ன தெரியுமா! இரண்டு பெண்களுமே தத்தம் வண்டி யைப் பின்னோக்கி விட்டனர். காரணம், ஒருவரும் தாம் வயதில் மூத்தவள் என்று சொல்லிக் கொள்ள விரும்பவில்லை!
பெண்கள் தங்கள் உண்மையான வயதைச் சொல்லிக்கொள்ள விரும்ப மாட் டார்கள் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டது இக்கதை.
பெண்கள் தான் தங்கள் நிஜவயதைச் சொல்ல மாட்டார்கள் என்பதில்லை. தற்காலத்தில் ஆண்களும் தங்கள் வயதைக் குறைத்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மற்றவர்கள் தங்களை இளைஞர்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டுமென்று எல்லாரும் ஆசைப்படுவதுதான் இதற்குக் காரணம்.
இதுகுறித்து, சமீபத்தில் சுவாமி தயானந்த சரஸ்வதி வேடிக்கையாக ஒரு விஷயம் சொன்னார்.
“முப்பது வயதுக்காரன் தனக்கு இருபத்தி ஐந்து வயது என்று சொல்வான், நாற்பது வயதுக்காரன் தனக்கு முப்பத்தைந்து என்று சொல்லிக் கொள்வான். ஐம்பது வயதுக்காரன் தனக்கு நாற்பத்தைந்து என்று சொல்லிக் கொள்வான். அறுபது வயது ஆசாமியோ தனக்கு ஐம்பத்தைந்து என்பான். ஆனால் அறுபத்தி ஐந்து வயதுக்காரன் தனக்கு எழுபத்தைந்து என்று சொல்லிக் கொள்வான்.
காரணம் என்ன தெரியுமா? எழுபத்தைந்து வயதிலும் அறுபத்தைந்து வயதுக் காரனைப் போல இளமையுடன் விளங்குகிறானே என்று அவனைப் பற்றிப் பிறர் நினைத்துக் கொள்ள வேண்டுமாம்!”