அழகியசிங்கர்/கயிறு

பத்மநாபன் வயது 71. வீட்டில் தெருவைப் பார்த்தபடி இருந்த இடத்தில் நாற்காலியில் உட்கார்ந்து கயிறு என்ற 1504 பக்கங்கள் கொண்ட தகழி சிவசங்கரன் நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறார்.

அவர் மனைவி பாகீரதி அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் அப்படியும் இப்படியும் நடந்து கொண்டிருக்கிறாள். அவள் என்ன நாவல் படித்துக்கொண்டிருக்கிறார் என்று பக்கத்தில் நின்று நோட்டமிடுகிறார்.

பாகீரதி : என்ன புத்தகம்?
பத்மநாபன் பதில் எதுவும் சொல்லவில்லை
பாகீரதி (பக்கத்தில் வந்து நின்று) கயிறா? இன்னும் படித்து முடிக்கவில்லையா நீங்கள்.
பத்மநாபன் அவள் பேசுவதைப் பொருட்படுத்தவில்லை.
பாகி : எவ்வளவு வருஷமா நீங்கப் படிக்கிறீங்க.. ஒரு வருஷம் இருக்குமா? இரண்டு வருஷம் இருக்குமா?
பத்மநாபன் அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அமைதியாய் இருக்கிறார்.
பாகி : இப்படியா ஒரு நாவலைப் படித்துக் கொண்டிருப்பா.. தொலைக்காட்சியில் வர்ற தொடர் மாதிரி படித்துக்கொண்டிருக்கிறீரே
பத்மநாபன் அசையவில்லை. பக்கங்கள் புரட்டிப் படித்துக் கொண்டிருக்கிறார்.
பாகீரதி அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் அவர் முன்னால் நடக்கிறாள்.
பின் அவர் முன் நின்று,
பாகீரதி : போய்க் குளித்துவிட்டு வாருங்கள். எனக்குப் பசிக்கிறது.
பத்மநாபன் நாற்காலியைவிட்டு அசையவில்லை.
பாகீரதி: காலையில் அந்த நடராஜன் கடன்காரனுடன் வாக்கிங் போகிற பேர்வழியா இவ்வளவு நேரம் கழித்து வருகிறீர்கள்…இன்னும் குளிக்கவில்லை.
பத்மநாபன் அசையவில்லை.
பாகி: எனக்குப் பசிக்கிறது…நீங்க குளிச்சுட்டு வந்தாதான் நாம் சேர்ந்து சாப்பிடலாம். மணி 12 ஆகிவிட்டது.
பத்மநாபன் அவளை உற்றுப் பார்த்தார். பின் புத்தகம் பக்கம் திரும்பி விட்டார்.
(பாகீரதி இங்கும் அங்கும் நடந்தபடி)
பாகி : நான் மாவு அரைக்கக் கொடுத்து 3 நாள் ஆகிறது. எத்தனை தடவை ஞாபகப்படுத்துகிறது..
பத்மநாபன் புத்தகத்தை விட்டு கண்ணை எடுக்கவில்லை.
பாகி : சரி மாவுதான் அரைக்கவில்லை. எதாவது பொருள் வாங்க உங்களுக்குத் துப்பு இருக்கா.. அமாவாசை தர்பணத்துக்குப் வாழைப்பழம் வாங்கிண்டு வரச்சொன்ன சற்று காயா வாங்கிண்டு வர்றாம பழமா வாங்கிண்டு வர்றீங்க. எல்லாம் உடனே பழுத்து கருத்துப் போயிடும்..
பத்மநாபன் கண்ணை மூடிக்கொண்டு யோசனைப் பண்ணுகிறார்.
பாகி : பைத்தியம்…பைத்தியம்…சரியான பைத்தியத்துக்கிட்டே மாட்டிண்டு இருக்கேன்.
பாகீரதி வசவைக் கேட்கப் பிடிக்காமல் பத்மநாபன் காதைப் பொத்திக்கொள்கிறார்
பாகி : நான் சாப்பிடணம்…நீங்க குளிச்சுட்டு வாங்க.. ஒண்ணா சேர்ந்து சாப்பிடலாம்.பத்மநாபன் வாசல் திசையில் யாரையோ எதிர்பார்த்தபடி உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
பாகீரதி கிட்டே வந்து நின்று, அன்னிக்கு என்ன பண்ணினீங்க..இலக்கியக் கூட்டத்துக்கு ஆட்டோவில செலவு செஞ்சிட்டு போனீங்க. யாராவது வான்னு கூப்பிட்டா நீங்க யோயிடுவீங்க..ஆனா யாராவது உங்களை மதிக்கிறார்களா? 35 வருஷமா பத்திரிகை நடத்தீறிங்க .. என்ன பிரயோஜனம்…யாராவது மதிச்சு அவா எழுதிய புத்தகம் கொடுக்கறாங்களா…யாரும் உங்களை மதிக்கிறதே இல்லை…யாரோ பாப்புலர் எழுத்தாளரைக் கூப்பிட்டுப் பேசச் சொல்றா. நீங்க அங்கெல்லாம் போகவே கூடாது..
பத்மநாபன் பாகிரீதியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
பாகிரீதி அவரைப் பார்த்து, ஒரு நிமிடம் பேரனை பார்த்துக்க முடிகிறதா உங்களுக்கு..அப்போதுதான் உங்களுக்குத் தூக்கம் வந்திடும். அர்ச்சனா சொல்றா அப்பா என்னம்மா அப்பா புத்தகத்தையே கட்டிண்டு அழற..என் பையனைப் பாத்துக்க மாட்டா..நான் அங்கெல்லாம் பையனை அழைச்சுண்டு வர்ற மாட்டேன்.
பத்மநாபன் ஆழ்ந்த கவலையுடன் அமர்ந்திருக்கிறார்.
பாகி : நான் சாப்பிடணும்…பசிக்கிறது….நீங்கக் குளித்துவிட்டு வாங்க..இரண்டு பேரும் சாப்பிடலாம்.
பத்மநாபன் திரும்பவும் கயிறு புத்தகத்தைப் படிக்கிறார்.
பாகிரீதி திரும்பவும் ஆரம்பிக்கிறாள்.
கொஞ்ச நாளா நீங்க சரியா இல்லை. யார் கிட்டயாவது எதாவது பேசி நீங்க மாட்டிக்கிறீங்க…ஆட்டோவில போன ஆட்ட காரனின் வாழ்க்கை வரலாற்றை கேட்கிறீங்க…பேசமா வந்தமோ போனமோ கிடையாது.. வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியலை..
இப்போது பத்மநாபன் கண்ணை மூடிக்கொண்டு கீழே குனிந்தபடி உட்கார்ந்திருக்கிறார்.
பாகிரீதி : இன்னிக்கு என்ன மௌன விரதமா? கயிறு என்கிற அந்தக் கண்ணராவி நாவலைப் படிச்சுண்டு உட்கார்ந்திருக்கீங்க..அந்த நாவலைப் பற்றி உங்களிடம் கேள்வி கேட்டா பதிலும் சொல்லத் தெரியலை..
.
பேசாமல் இருக்கிறார்.

அவரைப் பார்த்தபடி பாகிரீதியும் பேசாமல் நடந்து கொண்டிருக்கிறாள். பின் என்ன நினைத்தாளோ இல்லையோ ஒரு தட்டை எடுத்துக்கொண்டு சாப்பிட உட்காருகிறாள்.

பத்மநாபன் நாற்காலியிலிருந்து எழுந்து புத்தகத்தை நாற்காலி மீது வைத்துவிட்டு நகர்ந்து போகிறார்.

One Comment on “அழகியசிங்கர்/கயிறு”

Comments are closed.