வானவில் கே.ரவி/வலிகள்

(ஐந்து நாட்களுக்கு முன்பு ஓர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு இப்பொழுது வீட்டுக் காவலில் இருக்கிறேன். முதல் மூன்று நாட்கள் அவ்வளவு வலியில்லை. நேற்றில் இருந்து வலி, வலி! தொடர்ந்து இல்லாவிட்டாலும், விட்டு விட்டு வலி. எழுந்தால் வலி, அமர்ந்தால் வலி, படுத்தால் வலி, புரண்டால் வலி. சற்று நேரத்துக்கு முன், “வலியிருக்கிறதா?” என்று
ஷோபனா கேட்டாள் ……!)

பழகிப்போன பழைய வலிகள்
பரவாயில்லை பொறுத்துக் கொள்கிறேன்
முதுமையால் வரும் புதிய வலிகள்
முனகலோடு சகித்துக் கொள்கிறேன்
ஒருவர் ஒருவரை நிந்தனை செய்தும்
உயிரை உடலை வருத்தியும் கொன்றும்
சண்டை போடும் கொடுமையை மட்டும்
சற்றும் பொறுக்க முடியவில்லையே

மொழிகள் நூறு ஜாதிகள் நூறு
மதம் இனம் எனப்பலச் சுவர்கள் வேறு
மனிதர்களில்தான் எத்தனைக் கூறு
வழியெல்லாம் மேடு பள்ளம் சேறு
பிரிவுகளில் குளிர்காயும் ஓட்டுப்
பிச்சைக் காரரின் கூக்குரல் ஓலம்
அறியாமையோடு வறுமையில் உழலும்
மக்களுக் கென்று விடியும் காலம்

எதற்குப் போர்க்களம் இத்தனை ஆயுதம்
மனிதரை மனிதர் வெறுக்கும் பேய்க்குணம்
யாரோ சிலர்தம் பதவி வெறிக்கும்
கொள்ளையடிக்கும் குற்றத்துக்கும்
நாட்டு மக்களை வேட்டையாடும்
நயவஞ்சகமா இந்த நாடகம்
ஓட்டு வங்கி அரசியல் எல்லாம்
உடைந்து போவது எந்தக் காலம்

வலியுண்டாக்குவதும் ஒரு வலிமை
வலியைப் பொறுத்துக் கொள்வதும் வலிமை
வலியில்லாத உலகமாக
மாற வேண்டும் என்பதற்காக
வலிசுமப்போரை வணங்குகின்றேன்
அந்த வலிமையை யாசிக்கின்றேன்
எத்தனை வலிகள் இருந்தால் என்ன
இறைவன் அருளால் எழுந்து நடப்பேன்


2

One Comment on “வானவில் கே.ரவி/வலிகள்”

Comments are closed.