
குடு குடுவென ஓடி வந்து
மடியினில் ஏறி
என் தலையில் கிடந்த
காய்ந்த பூவினை எடுத்து
கையில் கொடுத்து விட்டு
குடு குடுவென ஓடினாள்
பேத்தி
காய்ந்த பூவை
தலையிலிருந்து
தட்டி விடுவதை
என் அம்மா
செய்திருக்க கூடும்
என் சகோதரிகளும்
என் மனைவியும்
செய்திருக்க கூடும்
என் மகள்கள் கூட
செய்திருக்க கூடும்
கவனத்தில் அப்படி
மனதை தொட்ட
நினைவு சுவடுகள்
எதுவும் இல்லை.
கையிலிருந்த காய்ந்த
பூவிடம் கேட்டேன்
இன்று மட்டும்
என்னுள ஏன் இத்தனை
சந்தோஷம் என்று
தெரியவில்லை
தாத்தா
என்றுரைப்பது போல்
அமைதி காத்தது
காய்ந்த பூ
