
ஆசிரியர் கலைமகள்.
இம்மையில் நன்மை தருவாா் கோயில்,(மேல மாசி வீதி, மதுரை) மீனாட்சியம்மன் கோயிலின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் ஜுரத்தைக் குணப்படுத்தும் ஜுரதேவர், மனைவி ஜுரசக்தியுடன் காட்சி தருகிறார். இது ஒரு சிறப்பான அம்சமாகும்! பொதுவாக சிவன் கோவில்களில் ஜுரதேவர் மட்டும்தான் காட்சி தருவார்.
உடல் வலி ஜுரம் உள்ளவர்கள் திங்கள் கிழமை அன்று மிளகு ரசம், மிளகு சாதம் ஜுர தேவருக்கு நைவேத்யம் செய்து வேண்டிக் கொண்டால் காய்ச்சல் தணிந்து உடல் சுகம் அடையும் என்கிற நம்பிக்கை பக்தர்களிடம் உண்டு!!
ஜுரதேவர் என்று சொல்வதை விட ஜுரஹரதேவர், ஜுரஹரேஸ்வரர் என்று அழைப்பது தான் சிறப்பானது! ஜூரத்தைப்போக்குபவர் ஜுரஹரதேவர். சிவாலயங்களில் பிரகாரத்தில் வடக்கு நோக்கிய தனி சந்நதியில் காட்சித்தருபவர் ஜுரதேவர்.
இவர் மூன்று தலை, மூன்று கரங்கள் மற்றும் மூன்று கால்களுடன் காட்சித்தருகிறார்! மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய ஜுரம் (காய்ச்சல்) நீங்க இவரை வழிபாடு செய்தால் நமக்கு இருக்கும் இரண்டு கால்களுடன் இணைந்து மூன்றாவது காலாக இவர் கை கொடுப்பார் என்பது நம்பிக்கை!!
காவேரிக் கரை கோயில்களிலும் இவரைக் காணலாம் என்றாலும் பாண்டி நாட்டு கோயில்களில் தான் இவர் அதிகமாகக் காணப்படுகிறார்!!
தட்சன் நடத்திய யாகத்திற்கு பார்வதி தேவி சிவபெருமான் இருவரையும் அழைக்கவில்லை. ஆனாலும் தனது தந்தை நடத்தும் யாகத்திற்கு தாட்சாயணி (பார்வதி தேவி) செல்ல ஆசைப்பட்டு சிவபெருமானைப் புறக்கணித்து விட்டுச் சென்றார்,
அவமானப்பட்டார்.
இதனை உணர்ந்த சிவபெருமான் கோபம் அடைந்தார், வேள்வியை அழிக்க முற்பட்டார்!யாகம் நடத்தும் இடத்திற்குச் சென்று அதை அழித்தார். அப்போது யாகபலன் தோன்றி ஒரு மானின் வடிவில் வானை நோக்கிச் சென்றது. சிவபெருமான் அதைக் கையில் ஏந்த, நெற்றியிலிருந்து வியர்வைத்துளி நிலத்தில் விழுந்து, அக்னி தோன்றியது.
அந்த அக்னி சிவந்த கண்களுடன் கருப்பான உடையில் ஜ்வரம் என்ற பூதமாக மாறியது!!யாகத்துக்குச் சென்ற தேவர்களையும், ரிஷிகளையும் அந்த பூதம் விரட்டியது.
உயிரினங்கள் பயந்து நடுங்கின! உடனே கவலையடைந்த நான்முகக் கடவுள் சிவபெருமானை வேண்டிக்கொண்டார்! பிரம்மனுடைய வேண்டுகோளை ஏற்றார் சிவபெருமான்.
அக்னியாகத் தோன்றிய அந்தப் பூதம் மனிதர்களைக் காக்கும் பொருட்டு ஜுரத்திலிருந்து மனிதர்களை காத்துக் குளிர்விக்கக் கட்டளையிட்டார் சிவபெருமான். சிவாலயங்களில் வடக்கு நோக்கியபடி காட்சி தரும்படி சிவபெருமான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஜுர தேவர் கோயில்களில் காட்சி தருகிறார்! இது புராணக் கதை!!
