
அனேகமா எங்க வீட்டுத் தபால் பெட்டி ‘ மகப் பேறு மருத்துவ மனை ‘ ஆகவே ஆகிவிட்டது.
நாங்கள் கண் காண, இது ஆறு அல்லது ஏழாவது குஞ்சு பொரிப்பாக இருக்கும். இரண்டு மாசம் மூணு மாசம் நாங்கள் சேர்ந்தாற்போல வெளியூரில் இருந்த சமயம் நடந்த பேறுகால கணக்கு எல்லாம் இதில் சேர்த்தி இல்லை.
அடித்த வெயிலுக்கும் வெக்கைக்கும் நேற்றுக் கொஞ்சம் மழை விழுந்து பூமி லேசாக் குளுந்து கிடக்கு. இது எல்லாம் நம்மளை விட மற்ற ஜீவராசிகளுக்கும் உசிர்ப் பிராணிகளுக்கும் முன்னைக் கூட்டியே தெரியும்.
தகப்பனோ தாய்ப் பறவையோ தெரியவில்லை. ரொம்ப நேரமாகக் கழுத்தைத் திருப்பித் திருப்பி,,எட்டுத் திசையையும் வேவு பார்த்துக்கொண்டு, தபால் பெட்டி பக்கமே உட்கார்ந்திருக்கு, காவல் காக்கிறது போல.
அனேகமா, நல்ல நாளும் அதுவுமாக பொரிச்ச குஞ்சுகள் மூன்றுக்கும் , விடிய முந்தியே, ,பறக்கச் சொல்லிக் கொடுத்து வழியனுப்பி விட்டு, ஏக்கமா உட்கார்ந்திருக்க வேண்டும். பேறுகால ரூம்பு வாசநை அம்மைக்காரிக்குப் பிடிக்காமல் இருக்கலாம், அப்பனுக்குப் பிடித்துத்தானே இருக்கும்.
