கல்யாண்ஜி கவிதை

அனாதை இல்லச் சிறுவர்கள்
வேதக்கோவில் வழிபாட்டுக்குச் செல்கிறார்கள்.
இரண்டு இரண்டு பேராகத்தான்
செல்ல வேண்டும்.
பராக்குப் பார்க்கக் கூடாது
சிரித்து விளையாடக் கூடாது.
கடைசி இருவருக்கு முன்பு
இடது ஓரம் இருந்த சிறுவன்
நேற்றுப் பெய்து கிடந்த
மழைத்தண்ணீரைக் காலால் எத்தினான்.
பேருந்து நிறுத்த ஆட்டுக் குட்டியை விரட்டிவிட்டு
வரிசையில் சேர்ந்து கொண்டான்.
அவன் வாயில் பாதி கடித்த அச்சு முறுக்கும்
ஒரு கெட்ட வார்த்தையும் இருந்தது.