
புத்தக அறிமுகம் 11.
“இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுத்துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில “மெளனப் பிள்ளையார்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளைச் சமீபத்தில் ஒரு முறை படித்துப் பார்த்தேன். சில இடங்களில் இவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறோமே? என்றும், சில இடங்களில் இந்தக் கதையை இப்போது எழுதியிருந்தால் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்றும் தோன்றியது” 12.4.64 ல் சாவி அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து, அதாவது 39 – 40 களில் அவர் எழுதிய ஆரம்ப காலக் கதைகள் இவை! இக்கதைகளை வாசித்தால், அவரது ‘சுய பரிசோதனை’ சரியென்றே தோன்றுகிறது.
14 சின்னஞ்சிறு கதைகளைக் கொண்ட தொகுப்பு இது. நகைச்சுவை ஒன்றையே பிரதானமாகக் கொண்ட கதைகள். மொழி, சில பழக்க வழக்கங்கள், அன்றைய சமூகப் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் ( வீட்டு வாடகை மாதம் ரூ 6/-, வீசை, அஜகீதம், ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் டிக்கட் வியாபாரம் தினமும் ஒரு ரூபாய் ஏழே காலணாவிற்கு, ஸ்திரீகள்) போன்றவைகள் இன்று வியப்பளிக்கின்றன.
மாதிரிக்கு ஒரு சிறு கதை: தங்கச் சங்கிலி.
மனைவி அம்புஜத்தின் பிறந்தகத்திலிருந்து, திரள் திரளாக உறவினர்கள் வந்து முகாம் போட்டு செளக்கியமாகச் சாப்பிட்டுக் காலம் கழிப்பவர்களால் வீடு கலியாணம் பட்ட பாடாய் இருக்கிறது. கங்காளம் கங்காளமாய் காப்பி, சாப்பாடு, இரண்டாம் வகுப்பு சினிமா டிக்கட், டிராமா, சங்கீதக் கச்சேரிகள் என கதை சொல்லியின் முழி பிதுங்குகிறது. அவரோ ஒரு சாதாரண பில் கலெக்டர். போதாக்குறைக்கு அம்புஜத்தின் அத்தை பெண் ஒருத்தி வர, அவளுக்கு ஒரு வடத்தில் செயின் போட வேண்டும் என்கிறாள் அம்புஜம். (அப்போது சவரன் விற்கும் விலையில் நூறு ரூபாய்க்குக் குறையாமல் ஆகுமே!). ஒரு நகைக் கடையில் ரூ3.20 க்கு ஒரு ரோல்ட் கோல்ட் செயினை வாங்கித் தருகிறார். விலையும் ரூ 258.20 என்று சொல்லி வைக்கிறார். அம்புஜத்திற்கும் சந்தோஷம் தாங்கவில்லை. பத்து தினங்களில் வந்த பெண்ணும் ஊருக்குப் போக, அம்புஜம் சொன்ன விஷயத்தில் இவர் மூர்ச்சையாகிறார். “அவளுக்காக ஐந்து சவரனில் வாங்கிய செயினைக் கொடுக்க மனசு வரவில்லை. ஆகையால் நான் போட்டுக்கொண்டிருந்த சங்கிலியை அவளிடம் கொடுத்தனுப்பி விட்டேன். நான் இப்போது அழகாயிருக்கிறேன் இல்லையா?”
பிரிந்தவர்கள் சேர்வது, வீட்டுக்காரர்களின் சாமர்த்தியம், குடித்தனக்காரார்களின் சாமர்த்தியம், காதல், பெண்ணைப் பெற்றவர் படும் பாடு, ரசிகர்களால் நடிகை வீட்டைக் காலி செய்வது என அன்றைய சமூகத்தின் குறுக்குவெட்டுப் பார்வையை அளிக்கின்றன இந்தக் கதைகள்!
இன்று, நாம் எல்லாவற்றிலும் மாறி, முன்னேறி (?) விட்டோம் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. ‘இப்படியெல்லாம் இருந்திருக்கின்றது’ என்பதே ஒரு பழங்கதையாகத் தோன்றுகின்றது!
வாசிக்கலாம்!

சங்கிலி மாறல் அருமை! 👏🙏🙇♀️