
பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர் நடத்திய பஞ்சாலைக்குச் சுப்பையாவும் சாம்பசிவமும் அடிக் கடி போய்வருவார்கள். தம் மகன் யந்திரக் கலை பயில இது ஊக்கமளிக்குமெனச் சின்னச்சாமி ஐயர் மகிழ்வார். ஒரு சமயம், சாயந்திரம் அந்தி வேளையில், இரு சிறுவர்களும் பஞ்சாலைக்குள் சுவரேறிக் குதித்து உள்ளே சென்றார்கள். அங்கே சின்னச்சாமி ஐயரின் மேஜை திறந்திருந்தது. காசு கிடைக்குமாவெனச் சிறுவர்கள் மேஜையைக் குடைந் தனர். காசு இல்லை. பளபளப்பான குழாய் ஒன்று இருந்தது. அது ஒரு சுழல் துப்பாக்கி. சிறுவர்களுக்கு அது என்னவென்று தெரியாது. சாம்பசிவம் அதை எடுத்து விஷமம் செய்துகொண்டிருந்தான். துப்பாக்கிக் குதிரையை டப் டப்பென்று அழுத்தினான். காலி அறைகள் போன சமயம் வெறும் சத்தம் கேட்டது. அடுத்தாற்போல் தோட்டா இருந்த ஒரு அறை வந்ததும், டபார் என்று வேட்டுப் பறந்தது. எதிரே யிருந்த பாரதியின் தலைக்கருகில் குண்டு பாய்ந்து சென்றது. பாரதி மயிரிழையில் பிழைத்தார்!
(ரா.அ.பத்மநாபன் எழுதிய சித்திர பாரதி என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது.)
