மோகன் ஜி/உலக முதியோர் தின வாழ்த்துகள்

மூப்பின் ராப்

கிழவி:
தடியெதுக்கு? ஏய் கிழவா !
துள்ளிக் குதித்தாடு!
தாடையிலே கையெதுக்கு?
தாவி விளையாடு!

நாட்படவே மரம் வளரும்.
காலமேறக் கல் இறுகும்.
வயதானால் மனிதன் மட்டும்,
மூப்பென்று முடங்குவதேன் கிழவா?
முனைந்திடா தடங்குவதேன் கிழவா?

கிழவன்:

ஆடியாச்சு ஆட்டமெல்லாம்.
ஆயிரமாய்ப் பார்த்தாச்சு!
ஆடுவதெலாம் அடங்குமடி கிழவி!
ஆடுசதை ஓய்ந்துபோச்சு கிழவி!

துள்ளவொரு காலமடி! பார்த்ததெலாம்
அள்ளவொரு காலமடி!
உள்ளமதில் அத்தனையும்
அசைபோடும் காலமிது கிழவி!
ஆடியிங்கு ஆவதென்ன கிழவி?

கிழவி:

சோம்பலின் பேச்சிதைய்யா! வீணான
சோர்வதன் புலம்பலைய்யா இதுவே!
காலுதறி எழுந்திரைய்யா! என்னோடு
காதலிலே பாடுமய்யா கிழவா!

கிழவன்:

அடடே! காதலின்னும் உண்டோடி?
படபடன்னு வருதேடி! கிழவி!
வாடி!ஆட கண்ணாட்டி! ஆடினபின்
பொக்கைவாய் முத்தமொரு சுகமடியோ கிழவி!

(சித்திரம்: அன்பு நண்பன் தேவா)
தேவா இதைப் பாடியிருப்பதை காமெண்டில் பாருங்கள்)
மீள்