
தமிழில் : க.மோகனரங்கன்
டிராம் வண்டியானது
செந்நிற வீடுகளை உறுமலுடன் கடந்து சென்றது.
கண்காட்சி மைதானங்களில் சுற்றும் இராட்டினம் போல
சுரங்க கோபுரங்களில் சக்கரங்கள்
சுழன்றன.
புகைக் கரியால் மங்கிய ரோஜாக்கள் தோட்டங்களில் வளர்ந்திருந்தன,
இனிப்புக் கடைகளில் சிந்திக்கிடக்கும் கேக் துணுக்குகளின் மீது
குளவிகள் ரீங்காரத்துடன் பறந்தன.
எனக்கு பதினைந்து வயது,
வீட்டுக் கட்டுமானப் பகுதிகளின் ஊடாக
டிராம் விரைவாக நகர்ந்தது.
புல்வெளிகளில் நான் சதுப்புநில சாமந்திகளைக் கண்டேன்.
எல்லாவற்றின் அர்த்தமும்
கடைசி நிறுத்தத்தில் வெளிப்படும்
என்று எண்ணினேன்,
ஆனால் எதுவும் நடக்கவில்லை,
ஆம் எதுவுமே.
டிரைவர் பாலாடைக் கட்டியோடு
ஒரு ரொட்டியை சாப்பிட்டார்,
வயதான இரு பெண்கள்
விலைவாசியையும் நோய்களையும் பற்றி மெதுவாகப் பேசிக்கொண்டார்கள்.
