பரிமள கேசவன்(துப்பறியும் நாவல், பாகம் 1)வை. மு. கோதைநாயகி அம்மாள்

4-வது அதிகாரம்
பிறைமதி – நிறைமதி

பரிமளவல்லியின் புகழ் வளர்பிறை மதியம் போலப் பிரகாசிக்கத் தொடங்கியது. பரிமளாவும் கேசவனும்- சிறுமியும் சிறுவனும் – நடிக்கும் திறனும், பாடலின் எழிலும் பொது மக்களின் மனத்தை முக்கியமாகக் கவர்ந்தன. அதோடு அந்த நாடகத்தின் பணம் முற்றும் முக்கியமான தர்ம ஸ்தாபனங்களுக்கே செல்வதால் அது விஷயத்தில் பொது ஜனங்களுக்கு ஒர் வெறுப்பேற்படாமல் விருப்பும் வாஞ்சையுமே ஏற்பட் டது. அதனால் கம்பெனிக்கு அபரிமிதமான செல்வமும், செல்வாக்கும், கீர்த்தியும் உண்டாகி விட்டது.
ஆதி காரணமாகக் கம்பெனி ஆரம்பித்ததை உத்தேசித்து ஜனங்கள் முதலிலிருந்தே நல்ல ஆதரவு கொடுத்துதவினார்கள். பொன்னுசாமி தன் பெற்றோருடன் யாத்திரை சென்று விட்ட பின்னர் அவனுடைய மனச் சாக்ஷியே அவனை பலமாகக் கண்டித்து நல்வழியில் திருப்பி விட்டது. சுமார் ஒரு வருட காலமாக அவர்கள் யாத்திரை செய்தார்கள். மன வேதனையின் பலனாக பொன்னுசாமியின் பெற்றோர்கள் ஒவ்வொரு ஊரில் ஒவ்வொருவர் உயிர் நீத்து விட்டார்கள். பொன்னுசாமி தனித்துப் பரதேசியாக நின்றான்.
பிறகு தன் ஊர் திரும்பினான். அவன் அனேக இடங்கள் யாத்திரை செய்ததின் பயனாக அனேக ஏழைப் பரதேசிகளின் துயரத்தையும் ஆங்காங்கு மக்கள் படும் கஷ்டத்தையும் கண்டு எவ்விதத்திலாவது அவர்களுக்கும் அவ்வகையோரான இன்னும் மற்றையோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று மனத்தில் நினைத்து வெகுவாய் யோசனை செய்ததில் ‘பணம் லகுவில் திரட்டக் கூடிய வகையில் நாடகக் கம்பெனியே சிறந்தது’ என்று அநேகர் யோசனை கூறி நன்றாகச் சங்கீதம் தெரிந்த பெரிய மனிதர்கள் எல்லாம் இனாமாக நடிப்பதாக ஒத்துக் கொண்டு ஆதரவளிக்க முன் வந்தார்கள்.
அதன்மேல் கம்பெனி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடந்து கொண்டு வந்தது. அந்த பணத்தில் தர்ம பாடசாலை, வைத்திய சாலை, ஏழைக் குழந்தைகளை – அனாதைக் குழந்தைகளை- வளர்க்கும் சங்கம் முதலியன வெல்லாம் ஸ்தாபனம் செய்தான். கேசவன் வந்து சேர்ந்த பிறகு பொன்னுசாமியின் மனோபாவத்திற்கு உதவியாக வேண்டிய பொருள் கிடைக்கத் தலைப்பட்டது, அவன் அனேக விதமான தானங்களை கை சலிக்கச் செய்யத் தொடங்கினான். பரிமள-வல்லியினால் முன்னிலும் அதிக பரிமளம் அந்த கம்பெனிக்கு உண்டாகி விட்டது.
எந்த காரியம் செய்யப் புகினும் அதில் விக்கினமேற்படுவதோ அன்றி சண்டை, பூசல் முதலியன உண்டாவதோ உலகத்தில் சகஜமல்லவா! அதேபோல நற்குண நாடகக் கம்பெனியிலும் சிற்சில மாறுதல்கள் உண்டாகத் தலைப்பட்டன. “கேசவன் மீதும், பரிமளாவின் மீதும் முதலாளி அதிகப் பிரியம் வைத்துப் பலவிதத்திலும் ஆதரிக்கின்றார். நம்மை அவ்வாறு கவனிப்பதில்லை“ என்கிற பொறாமை உதயமாகி விட்டது. அதை அடிக்கடி ஜாடை மாடையாகப் பேசவும் சிலர் ஆரம்பித்தார்கள், கேசவனிடத்தில் தங்களுடைய கசப்புத் தன்மையைக் காட்டத் துவக்கினார்கள்.
பரிமளவல்லி கம்பெனியில் சேரும்போது 10 வயதுச் சிறுமியாக விருந்தாள். அவள் சந்தோஷ மற்று, மிக்க துன்புற்று,வறுமையினால் பீடிக்கப்பட்டு ஒரு வீட்டில் அடிமை வேலை செய்து கொண்டிருந்ததால் மன வருத்தத்தினால் தேகம் வளர்ச்சி குன்றிப் போய் ஒளி மங்கிக் கிடந்தாள். கம்பெனியில் வந்து சேர்ந்த பிறகு அவளுடைய கஷ்ட காலம் விமோசனமாகி விட்டது. அந்த சந்தோஷத்தினால் மேனியும் முகமும் வசீகர முற்றுப் பிரகாச முண்டாயது. கம்பெனியின் சொந்தக்-காரரின் அன்பு இவர்கள் குடும்பத்தைப் பூர்ணமாகத் தாங்கியது. நாடகத்தில் நற்கியாதி பெற்ற பரிமளா தன் காலத்தை வீணே கடத்தாமல் தனது அறிவு வளர்ச்சிக்கான ஓர்செல்வத்தையும் சேமிக்க எண்ணி முதலாளியினுடைய ஆதாவில் உபாத்தியாயர் ஒருவரை நியமித்து அவரிடம் கல்வியைக் கற்கலானாள்.
சங்கீதமும் கல்வியும் சமமாக விருத்தியடையப் பெற்ற பரிமளாவினால் கம்பெனி செழித்து ஒங்கி விருத்தியடைவதைக் கண்டு சந்தோஷித்த முதலாளி பரிமளாவின் குடும்பத்தை ஒரு வருடமாக ஆதரித்து வந்த மட்டுடன் நிறுத்தாமல் பரிமளாவுக்கு மாதம் இத்தனை ரூபாய் என்று சம்பளம் போலவும் கொடுக்கலானார். கம்பெனியில் சேருங் காலத்தில் கட்டக் கந்தையற்றுக் கிடந்த பரிமளவல்லிக்கு மூன்று வருடங்களுக்குள்ளாகவே சொந்தமாக உயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள் எல்லாம் உண்டாகி விட்டன. ஆநந்தப் பெருக்கினால் பரிமளா வளர்பிறை மதியம் போலப் பிரகாசித்து எல்லோருடைய விழிகளுக்கும் பேராநந்த விருந்தளித்தாள்.
பரிமளாவுக்கு வயது பதின்மூன்று நடக்கின்றது. அவளுடைய இயற்கை, செய்கையாகிய எழிலுடன், இனிமையான சங்கீதத்தின் ருசியும் ஒன்று கூடி அவளைக் காண்போரின் மனத்தைக் கவர்ந்தது. உருண்டு திரண்டு இளம் வாழைத் தண்டுகளைப்போன்று பக்குவப் பட்டிருந்த மேனி பிரமிப்பை பளித்தது. எந்த வேடத்தில் எந்த விதமாகத் தோன்றிய போதிலும் அச் சிறுமியின் வனப்பும் பொருத்தமான நாடக நடிப்பும் வெகு அற்புதமாக விளங்கின. அத்தகைய நங்கையின் நடிப்பையும், வனப்பையும், கானத்தின் இனிப்பையும் காண ஒவ்வொரு நாடகத்திலும் ஏராளமான கூட்டம் கூடி விடுவார்கள்.
பரிமளவல்லி தான் சிறிய பிராயத்துப் பெண்ணாயிருப்பினும் ஒழுக்கத்தை மீறியோ, ஆபாசமான முறையிலோ ஒரு போதும் நடிக்க மாட்டாள். ஆபாசமான நாடகத்தை அக் கம்பெனியிலேயே நடிப்பதில்லை என்ற ஓர் திட்டம் கம்பெனியின் ஆரம்ப நோக்கமேயாகும். செல்வவந்தர்கள் பரிமளாவின் நடிகத் திறமையையும், சங்கீத சாரத்தையும் கேட்டுக் களித்து ஒவ்வொரு தினமும் நோட்டுக்களாகவே வீசி எறிவார்கள்.
ஆனால் நமது செல்வி அந்த வெகுமதிகளைக் கண்டு பேராசையும், அல்ப மதியும் கொள்ளாது இவ்வாறு தனக்குக் கொடுப்பது பற்றி வருத்தமே கொண்டாள். அந்தப் பணத்தையும் எடுத்து முதலாளியிடமே கொடுத்து அதையும் தரும வழியில் செலவிடும் படியாகக் கேட்டுக் கொள்வாள். தன்னுடைய சொந்த பிதாவைப் போலவே பொன்னுசாமியைப் பரிமளா நேசித்து வந்தாள்.
அக் கம்பெனியில் நடிக்கும் நடிகர்களிடத்தில் அனாவசியமாகவோ அடிக்கடியேர் பேசவும் சந்திக்கவும் மாட்டாள். கேசவன் ஒருவனை மட்டும் அவள் தன்னை யறியாத ஓர் அன்புடன் நேசித்து அவனிடம் தனக்கு ஓய்ந்த நேரத்தில் பேசுவது, நடிக்கப் பழகுவது, பாடங் கற்றுக் கொள்வது, சங்கீதம் கற்றுக் கொள்வது முதலியன செய்து வந்தாள். கேசவனுக்கும் இயற்கையிலேயே ஒழுக்கம் செழித்திருந்தது. பரிமளாவினுடைய முதல் சந்திப்பிலிருந்தே அத்யந்த அன்பு தெய்வத் தன்மையாக உதித்து மனத்திடை நீறு பூத்த நெருப்புப் போலப் பிரகாசியாமல் நின்றது.
ஏற்கெனவே கேசவன் மீது பொறாமை கொண்டிருந்த மற்றவர்கள் கேசவனும் பரிமளாவும் அன்பொழுக விருப்பது கண்டு ஆத்திரங் கொண்டார்கள். பரிமளவல்லியின் வீட்டிற்கு அனேக கடிதங்கள் வரத் தொடங்கின. நாடகத்தில் நடிப்போரும் இதரர்களும் அவளுடைய மோக வலையில் சிக்குண்டு தம் தம் மனம் போனபடி யெல்லாம் கடிதங்கள் மூலம் பிதற்ற வாரம்பித்தார்கள். பரிமளா கேவலம் சிறுமியாயினும் அவளுடைய அறிவு தனிச் சுடர் போலப் பிரகாசிக்கின்ற-தாகையினால் இக் கடிதங்கள் அவளுடைய மனத்தைப் புண் படுத்தின. “தினந்தோறும் தபால்காரன் தன் வீட்டிற்கு வராது போகக் கூடாதா?” என்று எண்ணுவாள். அவளுடைய இவ் வேதனையை யாரிடம் வெளியிடுவது” என்று ஏங்கி அஞ்சி சில நாள் வாளா விருந்தாள்.
பரிமளாவுடன் நடிப்பதில் நான்நீ என்று போட்டிகளும் உண்டாகும். பரிமளா ஒருத்தியே அங்கு பெண்பாலாதலால் மற்றைய பெண் வேடங்கள் தாங்குவ-தெல்லாம் ஆண் பிள்ளைகளே யாவர். பரிமளாவின் தாயாகவும், தோழியாகவும் பலவிதமான நடிகர்களாகத் தோன்றுவோரிடத்திலும் பரிமளா நெருங்கி நடிக்காமல் தன்னுடைய மனத்திலடங்கியுள்ள வெறுப்புடன் விலகியே நடிப்பாள்.
அவ்வாறான காலங்களில்தான் பரிமளாவின் மனத்தில் அபூர்வமான ஓர் அறிவு உதய மாயிற்று. அது யாதெனில் “நான் ஒர் நாடகமாதாக இருக்கிறேனே” என்கிற ஓர் ஏக்கமே. அவ்வாறு உதயமானதோடு தான் தினம் நடிக்கும் உயரிய நாடகங்களின் வேடத்துப் பாத்திரத்தைப் போல தான் உண்மையிலேயே கற்புடனும் நீதியுடனும் ஒழுக வேண்டும். தான் நடிப்பது பிறர் கண்டு புத்தி பெறுவதற்காகவன்றோ? அந்த உண்மை தன் நடத்தையிலும் சாவித்திரி, சீதை, வள்ளி, தமயந்தி, அனுசூயை முதலியவர்களைப் போல இருக்க வேண்டும் என்ற ஓர் தீவிரமான எண்ணம் உதித்து விட்டது.
அங்ஙனம் உதித்த எண்ணத்தினால் அவள் அந்த விஷயத்திலேயே இரவு பகலாக மனத்தைச் செலுத்தி அனேக உயர்ந்த க்ரந்தங்களையும் மேலான நாவல்களையும் படித்துக் கற்பரசிகளின் திண்ணிய திடத்தைத் தன் மனத்தில் உறுதி கொண்டாள்.
பரிமளா ஒரு தினம் தன் வீட்டில் இருக்கையில் சில கடிதங்கள் வந்தன. அவைகளைப் பிரித்துப் படிக்கலானாள். அவற்றில் ஒன்றில்,

“என்னுயிரைக் கொள்ளை கொண்ட பரிமள சுந்தரியே!
உனக்கு இக் கடிதத்திற்கு முன்பு பல கடிதங்கள் எழுதியும் நீ பதில் விடுக்கா திருத்தலின் காரணம் எனக்குத் தெரியவில்லை. நான் சாமானிய மனிதனென்று நினைக்காதே! நான் ஓர் ஜமீந்தாரரின் புதல்வன்; மைனர் ஜமீந்தார் என்பதை நினைத்துப் பார். நான் உன்னைப் பார்த்த நாள் முதல் உன்னையே மணக்க ஆசிக்கின்றேன். நீ பெரிய ஜமீந்தாரிணி யாவதைக் கவனித்து எனக்கு உடனே பதில் போடு. கேவலம் நாடகக்காரப் பெண்ணாகிய உன்னை ஓர் ஜமீன்தார் தேடிவருவதானது உனது பூர்வ ஜன்மப் பயன் என்று நினைத்துக் கொண்டு, மறுக்காது பதில் தெரிவிக்கவும்.

  இங்ஙனம்
  ……………………
  மைனர் ஜமீந்தார்.

என்று வரைந்திருந்தது. அதைப் படித்துக் கண்ணீர் உதிர்த்தாள். பிறகு மற்றொன்றைப் படிக்கலானாள். அது பின் வருமாறு:-

“நாடகக்காரியாகிய நாரீயே!

உனது தொழில் நாடகம் நடிக்கும் இழிவாகவிருந்த போதிலும் உன்னுடைய பேராநந்த எழிலும் சங்கீதமும் ஒன்று கூடி என்னை உன் வயப படுத்தி விட்டதால் நான் உனக்குப் பல பதக்கங்களும், தோடாவும் பரிசு கொடுத்திருக்கிறேன். நான் ஓர் ரத்தின் வியாபாரி. என்னுடைய ஆசை நாயகியாக உன்னை அடைய மனம் தாவுகின்றது. நான் என்னுடைய அவாவைக் கடிதத்தில் தெரிவிக்க எடு இடம் தராது. நீ ஓர் உயர்தரக் கம்பெனியில் நடித்தாலும் நாடகக்.காரி என்கிற ஓர் பெயர் வந்து தாக்காது நிற்காது. எது எவ் விதமிருப்பினும் என்னுடைய மனோ வேட்கையினால் நான் உன்னை என் மனத்திற்கிசைந்த மனைவியாகச் செய்து கொள்ளத் தீர்மானித்தேன். நான் உன்னை நேரில் வந்து காண ஆசைப் படுகிறேன். என்று வரலாம், எப்போது வரலாம். என்ற விஷயத்தை அடுத்த தபாலில் கீழ்க் காணும் விலாசத் திற்குத் தெரியப் படுத்தவும்.

  இங்ஙனம்
  ……………………….
  ரத்ன வியாபாரி.

அந்தக் கடிதங்களைப் போலவே இன்னும் அனேகக் கடிதங்களிருந்தன. அவற்றுள் அந்த நாடகத்திலேயே நடிக்கின்றவன் ஒருவன் எழுதியதின் சாரம் பின் வருமாறு:-
“பரிமளா ! உன் பெயருக் கேற்ற இன்பப் பரிமளம் உன்னிடத்தில்தான் ததும்புகின்றது. உன்னைப் போன்று எழிலும் சகல அம்சங்களும் பொருந்திய புவனசுந்தரி நீதான் என்பதை எவராலும் மறுக்க முடியாது. நீ உன்னழகையும் ஆநந்த சுகத்தையும் எந்த வகையில் தக்க யோக்யதா பக்ஷமானவர்களிடம் அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற பகுத்தறிவு தெரியாது,
நீ சிறு பிராயத்தின் அறியாமையினால், கேவலம் பிச்சைக்காரப் பயலாயும்-வேலைக்காரப் பயலாயும்— சமையல்காரனாயும் இருந்த கேசவனிடத்தில் உனது மேலான அன்பை வைத்திருப்பதானது மிகவும் விசனிக்கவும் பரிகஸிக்கவும் இடமுண்டாகின்றது. நான் உன்னுடன் பலமுறை நடித்திருப்பதை இங்கு குறிப்பிட வேண்டாம். உனக்குப் பல விதத்திலும் தக்க யோக்கியதை யுடைய என்னை நீ விரும்பாதவளாக இருப்பது உன் துர்ப்பாக்கியமே யாகும். அதை நான் குற்றமாக மதிக்கவில்லை. நீ இப்போது இன்னம் புத்தி யறியாத சிறுமியாக இருந்தாலும் இன்னும் சில வருடத்திற்குள்ளாக நீ பெரிய மங்கையாய் விடுவாய்! அப்படி ஆகும் காலத்தில் உன்னழகும் சங்கீதமும் எத்தனை உயர்வாக இருந்தாலும் நீயொரு நாடகக்காரி என்பதை உன்னால் மறைக்க முடியாது. உன்னைக் கண்டு காமுறும் ஜனங்கள் கோடிக் கணக்கிலிருக்கி றார்கள். அவர்களால் உனக்கு எத்தனையோ துன்பங்கள் நேரிடலாம். அவைகளுக்கு இலக்காகாமல் என்னுடன் வந்து விடு. ரங்கோன் முதலிய இடத்திற்குப் போய் நாம் சுகமே வாழலாம். இதற்குப் பதிலை நான் உன் வீட்டிலேயே எதிர் பார்க்கிறேன்; இன்று மாலை வருகிறேன்.

  இங்ஙனம்
  ……………….
  அன்பன்.

அக் கடிதத்தைப் படித்த பரிமளாவின் மனத் துயரம் அவள் என்றும் கண்டிராத வகையில் பொங்கி விட்டது. “ஹா! நான் ஓர் கூத்தாடியா! நாடகக்காரியா! அவ்விதமா நம்மை ஏளனம் செய்வார்கள். என்ன அனியாயம்! சீச்சீ! என்ன வாழ்க்கை நாம் வாழுகின்றோம். நாம் நமது வறுமையினாலும் சிறிய குழந்தைப் பருவத்தின் விளையாட்டினாலும் இது பரியந்தம் இவ்விதம் கவுரவ மாக நடித்ததெல்லாம் இப்படி பல ஜனங்களின் மனத்திற்கு விரோதமாகவா ஆய் விட்டது?
ஹா! கடவுளே! என் மதியை எனக்கு அறிவிக்க நீ ஏன் இதுகாறும் தாமதம் செய்தாய்!.. நான் இன்னும் என்னுடைய நிலையை அறியாமலிருப்பதைக் கண்டு தான் பல ஜனங்களின் மூலம் எனக்குப் புத்தி பிறக்கச் செய்தாயோ!…. ஐயோ! இப்பாழும் பெண் ஜென்மம் எடுத்ததனாலன்றோ, என் கதி இவ்விதமாகி விட்டது! உத்தமர்களின் சகவாசத்துடன் சிறுமியாக நடிப்பதுவும் என்னைத் தாக்கி விட்டதே. சீச்சீ! நாடகத்திற்கு வரும் மக்களின் மனத்திற்கு இத்தகைய ஆபாச எண்ணத்தை ஏன் அளிக்கின்றாய் என்னப்பனே! எனக்கு இன்னும் 14 வயது நிரம்பப் பெறாதிருப்பினும் என்னுடைய துயரம் என்னை வாட்டி வருத்துகின்றதே! சர்வேசா! என் மனம் இக்கடிதங்களினால் தத்தளிக்கின்றதே! இதனின்றும் விடுதலையடைய ஒர் மார்க்க மில்லையா!
ஆபத்ரக்ஷகா! எனக்கு வயதோ இன்னும் கேவலம் கொஞ்சமாக இருக்கிறது. இதற்குள் நான் எனது ஏழ்மை நிலைமையைக் கண்டு முதலில் ஒருவிதமாக வருந்தி கஷ்டப்பட்டுப் பின்னர் சற்று சுகமடைந்து தெம்பாகவிருந்து அந்த சந்தோஷம் வெகுநாள் நீடிப்பதற்குள்ளேயே என்னுடைய பிற்காலத்தின் நிலைமை, கண்ணாடியில் தெரிவதுபோலப் பிரகாசித்து என் துயரத்தை எடுத்துக் காட்டிப் பெருக்குகின்றதே! இதை நான் யாரிடத் தில் எடுத்துக்கூறுவேன்? எனக்கு வயது சிறியதாக இருந்தபோதிலும் என் நடிப்பில் நான் பணத்தையும் புகழையும் மட்டும் லக்ஷ்யம் செய்யாமல் நான் எடுத்துக்கொண்ட பாத்திரங்களாகிய சாவித்திரி, ஸீதை, நளாயணி, வள்ளி, சந்திரமதி, ருக்மிணி முதலியவர்களைப்போல எனது அனுபவத்திலும் தினசரி வாழ்க்கையிலும் நடந்துகொள்ளவேண்டும் என்கிற எண்ணமே மனத்தில் புகுந்து கொண்டிருக்கிறது. அதேபோல நான் என்னால் கூடியவரையில் சாவித்திரியைப் போல கற்பினும், சந்திரமதியைப்போல சத்தி யத்திலும், நளாயினியைப்போல பொறுமையிலும் பதி பக்தியிலும் இன்னும் மற்ற சற்குணங்களையும் கையாண்டு வருவதையன்றோ நான் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறேன்.
இந்தக் கடிதங்கள் அவற்றைக் குலைத்திடும் வழியிலல்லவோ என் பிற்காலத்திய நிலைமையை பயங்கரமாக எடுத்துக்காட்டுகின்றன. சீ! குழந்தைப் பருவமாக நாம் நாடகம் நடித்தது போதும். இனி நமக்கு நாடகம் வேண்டாம்” என்று மனந்தவித்துப் பலவிதமான யோசனையோடு உட்கார்ந்து விட்டாள்.
பரிமளவல்லியின் மீதுள்ள பிரியத்தினால் பொன்னுசாமி அவளை அடிக்கடி வீட்டில் வந்து சந்திக்கும் வழக்கப்படிக்கு அன்றும் வந்தார். அப்போது பரிமளா தன்னந்தனியாகத் தன்னறையில் உட்கார்ந்து சோகித்திருப்பதைக் கண்ட பொன்னுசாமி திடுக்கிட்டு அருகில் சென்று “செல்வீ! பரிமளா! என்ன இது! ஒரு நாளும் நான் கண்டறியாத நிலைமையில் விசனித்து வீற்றிருக்கிறாய்? கலக்கம் யாது? என்னிடம் தியங்காது சொல்வாய் அம்மா!” என்று வெகு வாஞ்சையோடும், உண்மையான பரிதாபத்துடனும் கேட்டார்.
இதுகேட்ட பரிமளா தனது சொந்த தந்தையைப்போல எண்ணி இருக்கும் பொன்னுசாமியின் இரு கரங்களையும் பிடித்துக்கொண்டு சிறிய குழந்தையைப்-போல் கோவெனக் கதறியவாறு “என்னரிய பெரியாரே! நான் உருவத்திலும், வயதிலும் சிறுமியேதான். ஆனால் மனோ துயரத்தில் மிகமிகப் பெரியவளாகி விட்டேன். என்னுடைய சுகத்தையும் துக்கத்தையும் சமமாகக் கவனிக்கக்-கூடியவர்கள் தாங்களும், என் தாயுமே ஆவீர்கள். ஆதலால் எனக்குற்ற விசனத்தை நீங்கள் அறிவதால் எனக்கு நன்மையேயன்றி தீமை இல்லை, அதோ என் தாயும் வருகிறாள். அம்மா! உட்காருங்கள். போஷகரே! இதோ இக்கடிதங்களை நீங்க ளிருவரும் பாருங்கள்.” என்று பணிவாகக் கூறி, அதையவர் கையில் கொடுத்தாள்.
கடிதத்தை வாங்கிய பொன்னுசாமி படித்து முடித்து மனந் தாங்காத துயரத்தை யடைந்து அதைப் பார்வதியம்மாளிடத்தில் கொடுத்தார். அந்த அம்மாளும் அதைப் படித்துத் திடுக்கிட்டாள். இருவரின் மனமும் கடிதங்களினால் கலங்கின. இதையறிந்த பரிமளா அதிகாரியை நோக்கி “என் பிதாவுக்குச் சமமானவரே! என் விசனத்திற்குக் காரணம் தெரிந்ததா! இதுபோன்ற கடிதங்கள் விஷபாணங்கள் போன்று வரத்தொடங்கி வெகுநாட்களாயின. அன்றுமுதல் இன்றுவரையில் அந்த பாணங்களாலேயே என் மனமும் தேகமும் மெலிவுற்று மிக்க வேதனைக் குள்ளாகிக்கொண்டே இருந்தது. நான் இந்நாள்வரையில் பொறுத்துப் பார்த்தேன். இனி என்னால் பொறுக்க முடியாது. நான் எனது இளமைப் பிராயத்தின் வருத்தத்தை முன்னிட்டு நாடகத்தில் நடிக்க வாரம்பித்தது எனக்குப் பெருத்த புதைபாணம் போன்ற துன்பங்கள் நேரிடும்போலிருக்கிறது. என் தாயே!… பெரியவரே! நான் இனி நாடகத்தில் நடிக்க விரும்பவில்லை. என்னுடைய பிற்காலத்தின் நன்மையைக் கோரி நான் விலகிக்கொள்கிறேன். என்னை மன்னிக்க வேண்டும்.” என்று மிக்க நயமாகச் சொன்னாள்.•
பொன்னு- ஹா! என் கண்மணி! பரிமளவல்லீ! உன்னறிவுக்கு என்னுள்ளம் பொங்கிக் களிக்கின்றது. நீ புத்தியிலும் தீர்க்காலோசனையிலும் மகா பெரியவள். உன்னுடைய அபாரமான அறிவை நான் பன்முறைகளில் கவனித்திருக்கிறேன். இன்று பூர்ணமாகப் பார்த்துவிட்டேன். அந்தோ! நாடகம் என்பது பூர்வம் எத்தகைய மேன்மையான நோக்கங்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தெரியுமா!
பகவத் விஷயங்களையும் பக்தர்களின் விஷயங்களையும் கல்வியறிந்தவர்கள் நன்றாகப் படித்து அறிந்துவிடுகிறார்கள். எனினும் உலகத்துள்ள பல்கோடி மக்களின் போக்கும் ஒன்றுபட்டு வராது. சிலருக்குப் படித்தால் மனத்தில் பதிந்துவிடும். சிலருக்குக் கேட்டால் பதியும்; சிலருக்குப் பார்த்தால் பதியும். சிலருக்கு எதிலும் பதியாது. பல வேறுபட்ட பேதங்களிருக்கின்றன. அதை உத்தேசித்துத்தான் எல்லோருக்கும் நன்றாகக் கண்கூடாகப் பார்த்தால் நல்ல விஷயங்களை படிக்கத் தெரியாதவர்களுக்குக்கூட மனத்தில் பதியும் பொருட்டு நடித்துக் காட்டுவது என்று பெரியார் நாடகங்களை ஏற்படுத்தியதாகப் பெரியாரே சொல்ல நான் கேட்டிருக்கிறேன். பகவானுடைய குணங்களும், செய்கைகளும், பாகவதர்களின் பக்திப் பிரபாவமும் உலகத்தில் சகல ஜனங்களுக்கும் நன்றாக விளங்கவேண்டி சத்விஷயமான சரிதைகளையே நாடகமாக நடித்துப் பெரும் பயனை விளைவித்தார்கள். அந்த அரிய நாடகம் காலக்கிரமத்தில் அதன் கவுரவமே குறைந்து கேவலமாக மதிக்கக் கூடிய நிலைமையில் வந்துவிட்டது. அந்த இழிவு நமது நாட்டில் தினே தினே விருத்தியாகும்படியாக அனேக ஆபாசங்களும் விபரீதங்களும் உண்டாகிவிட்டன.
ஆனால் மேல் நாட்டில் இன்னும் நாடகத்திற்கும் நடிகர்களுக்கும் பேராதரவும் பெரும் புகழும் கொடுத்துவருகிறார்கள். அதனாலேயே அந்நாட்டில் நாடக உலகம் நலம் பெற்று விளங்குகின்றது. பரிமளா! உனது யோசனை என்னவோ மிகவும் ச்லாக்யமானதே! உன் மனத்திற்கு விரோதமாக நான் ஏதும் சொல்லத் தயாராக இல்லை. இக்காரியங்கள் செய்திருப்பது கேவலமான காலாடிக் கூட் டங்கள் என்பது உனக்கு நன்கு தெரியும், அத்தகையோரிடத்தில்தான் அதிகமான ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும். என்னுடைய கம்பெனிக்கே ஓர் பரிமளத்தை அளித்த நீ நின்றுவிடுவதால் நாடகப் பிரியர்கள் மிக்க விசனிப்பார்கள். எல்லாம் காலச் சக்கரத்தின் சுழல்வு. இதை எண்ணி விசனிப்பதில் பயனில்லை. அம்மா! நீ நடிப்பதை நிறுத்திவிட்டதனாலேயே நான் உன்னை மறப்பேனென நினைக்காதே! உன்னாலும் கேசவனாலுமே என் கம்பெனிக்குப் புது மணமும் புத்துயிரும் உண்டாயது. ஏராளமான செல்வத்திற்கு கம்பெனி உரித்தாயது. தருமங்களைச் செய்ய சாதனமாயது. ஆதலால் உனது குடும்பத்தை நான் கைவிடமாட்டேன்.
பரிமள – அன்பார்ந்த பெரியவரே! நான் இதுகாறும் இத்தகைய நிலைமைக்கு வந்தது முற்றும் தங்களின் கிருபையினால் என்பதை மறவேன். நான் இனி அநாவசியமாய் உழைப்பின்றி உங்கள் பொருளுக்கு உரியவளாதல் பிழையேயாகும். என் மனம் அதற்குச் சம்மதப்படாது உங்கள் தயவினால் வாங்கப்பட்ட அனேக விலையுயர்ந்த ஆடையாபரணங்கள், பிறரால் வழங்கப்பட்ட பரிசுப் பொருள்கள் இவை எல்லாம் எனக்குத் தேவையில்லை. அவை பயனின்றி என் பெட்டியிலேயே தூங்குவதைவிட தாங்களே ஸ்வீகரித்து உபயோகப்படுத்திக் கொள்ள என் மனம் விரும்புகின்றது. தங்களின் அன்பு என்மீதிருக்குமாயின் ஒருவித குறைவுமில்லை, எனக்குத் தாங்கள் மாதம் 150 ரூபாய் சம்பளமாக இந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகக் கொடுத்து வந்ததில் நான் அதிகமாக எதுவும் செலவிடாமல் அதில் மிச்சம் செய்து இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் என் தாயாரின்பேரில் பாங்கியில் போட்டு வைத்திருக்கிறேன். அதுவும் உங்களுக்குத் தெரிந்ததே! அந்த ரூபாயில் எனக்கு மாதம் கிடைக்கக்கூடிய வட்டியைக்கொண்டு என் காலத்தை நான் தாராளமாகக் கழிக்கலாம். பெரியவரே! என் விருப்பப்படி இவைகளை ஸ்வீகரிக்கவேண்டும்” என்று வேண்டினாள்.
அதே யோசனைக்கு அவள் தாயாரும் இசைந்ததால் பொன்னுசாமியும் அதற்கு உடன்பட்டான். பிறகு வெகுநேரம் பேசிய பிறகு அவர் கண்ணீர் பெருக “பரிமளா! நான் ஒரு விஷயம் வேண்டுகிறேன். அதாவது “நீ கடைசீயாக இன்னும் ஒரு நாடகம் மட்டும் நடித்துவிட்டு அதோடு இந்த வேலையை விட்டு விலகிக்கொள்” என்று கெஞ்சிக்கேட்டார். அதற்குப் பரிமளா யோசித்து இசைந்தாள். பிறகு பொன்னுசாமி போய்விட்டார்.
பரிமளா வெகு கலக்கத்தோடு வீற்றிருந்தாள். அவளுடைய சகோதரியை ஆரம்பம் முதலே நல்ல கல்வி மார்க்கத்தில் பயிலுவிப் பதிலேயே பரிமளா இச்சித்திருந்தாளதலால் அவள் கல்வி கற்று வருகிறாள். சகுந்தலா என்கிற அப்பெண்மணியும் பரிமளாவைப் போலவே ஒழுக்கத்தில் பிறவிக்குணமாகவே அமைந்துவிட்டாள். அன்று நாடக நாள் அல்லவாகையினால் கேசவன் பரிமளாவின் வீட்டிற்கு வந்தான்.
சாதாரணமாக, கேசவன் பரிமளாவின் வீட்டிற்கு வருவது பழக்கமாதலாலும் அவனை அறியாத ஓர்விதமான அன்பு அவன் இதயத்தில் பதிந்துவிட்டதனாலும் அவ்வன்பாகிய கயிற்றால் கட்டுப் பட்டு பரிமளாவுக்குப் பாடம் சொல்லுவது, சங்கீதம் கற்பிப்பது முதலியன செய்துவந்தான். அவனுடைய அன்பிற்குக் காரணம் அவனுக்கே தெரியாது. அன்று பரிமளாவினுடைய மாறுதல் கேசவனுக்குச் சிறிதும் தெரியாது. தன் போக்காக வந்த கேசவன் பரிமளாவின் மாறுதலையும், முக-வாட்டத்தையும், புலம்பிய கண்களின் குன்றிய ஒளியையும் கண்டு திடுக்கிட்டு “பரிமளா! என்னவிது! அன்றலர்ந்த தாமரையைப்போன்றிருக்கும் உனது வதனம் கலக்க முற்றுக் கண்ணீர் வடித்திருக்கின்றதே! காரணம் என்ன? நான் அறியலாகுமா!” என்று கேட்டான்.
பரிமளா.- உட்காருங்கள். நான் தங்களை எல்லாம் விட்டுப் பிரியுங்காலம் வந்துவிட்டது. அதை எண்ணியே விசனிக்கின்றேன். நாம் ஓர் நாடகம் நடிப்பதுபோலக் கடவுள் நம்மையே ஓர் நாடகமாக நடிக்கிறார். நமது பிரிவுக்காக என் மனம் வருந்துவது சகஐ மல்லவா!
கேசவன் – என்ன! என்ன! பரிமளா! நீ பேசுவது எனக்குப் புரியவில்லையே! நாம் பிரியவேண்டுமா! ஏன்! என்ன காரணம்? நான் எனக்குத் தெரிந்து ஒருவிதமான குற்றமும்- தவறுதலும்- உன்பால் செய்ததாகத் தெரியவில்லையே! பரிமளா! அவ்வாறு நான் ஏதேனும் என்னை யறியாது செய்துவிட்டேனா! அதை விளக்கிக் கூறு. என்னை நான் திருத்திக்கொள்கிறேன். உன் முகவாட்டங் கண்டு என் மனம் பதறுகின்றதே!
பரிமளா – ஹா! தாங்கள் குற்றமிழைத்ததாகவா நினைக்கின்றீர்கள். அப்படிக் கொன்றுமில்லை. இதோ! இந்தக் கடிதங்களாகிய பாணங்களினால் நான் வெதும்பிப் போய்விட்டேன். நான் கேவலம் பெண்பிள்ளை. அதிலும் ஓர் நாடகக்காரி. நான் இனி கலங்காது சந்தோஷமாக விருப்பதற்கு எவ்விதம் இடமுண்டு.
கேசவன்.-(கடிதங்களைப் படித்துவிட்டு) ஹா! பரிமளா! இப்போது விளங்கியது. உனக்கு நமது கம்பெனியினின்று எழுதிய ஆசாமி யார் என்பது. நாராயணன்தான் நம்மிருவர் பேரிலும் பெரும் பகை வைத்திருக்கிறான். அவனுடைய பகையின் பாணம் தான் இது…. இதற்காக நீ ஏன் பிரிவு காலம் என்று கூறினாய்?
பரிமளா:- நண்பரே! நான் இனி நாடக மேடையில் நடிக்கப் பிரியப்படவில்லை. என் மனம் முற்றும் முறிந்து விட்டது. என்னுடைய தற்போதிய நிலைமையில் நான் எனது வாழ்க்கையைக் கூட வெறுக்கக் கூடியவளாக இருக்கிறேன். நாடகம் நம்மைச் சேர்த்தது. அதுவே நம்மைப் பிரித்தது. இப்போதே முதலாளி வந்திருந்தார். அவரிடம் சகலமான விஷயங்களையும் பேசி முடித்தாய் விட்டது. கடைசியாக ஒரு நாடகம் நடிக்க இச்சையுற்றார்; அதற்கு மட்டும் இசைந்தேன். நான் முதலில் நாடக அரங்கத்தில் தோன்றியது வள்ளியம்மையாக; அதே வேடத்துடன் மறைகிறேன்” என்றாள்.
இதைக் கேட்ட கேசவன் உண்மையிலேயே தன்னை யறியாத விதமாய்க் கண்ணீர் உதிர்த்தான். பரிமளா! உன்னைப் பிரிய வேண்டுமா! உன்னைப் பாராதிருக்க வேண்டுமா! இவ்விதமான ஏற்பாடுகள் உண்மையில் நடந்தேறி விட்டனவா! என்ன ஆச்சரியம்! இந்த நான்கு வருடங்களாக நாம் ஒன்றாக நடித்துப் பிரியமான நண்பர்களாகும்படிச் செய்த கடவுள் நம்மைப் பிரித்து விடவா எண்ணி விட்டார் ! … பரிமளா !… பரிமளா [“……. என்று மேலே பேச மாட்டாது அவள் முகத்தை நோக்கியவாறு தம்பித்து விட்டான்.
கேசவனின் ஆழ்ந்த அன்பையும், பரிதாபகரமான நிலைமை யையும் கண்ட பரிமளா மனமுருகினாள். அவள் தன்னை யறியாத துக்கமேலிட்டால் தன்னிரு கரங்களினாலும் தன் முகத்தை மூடிக் கொண்டு கவிழ்ந்தவாறு மேஜையின் மீது சாய்ந்தாள். பரிமளாவின் கண்ணீர் மேஜையின்மீது சொட்டி அதை நனைக்க வாரம்பித்தது. அன்றைய மனோ வேதனையினால் அவள் தலை கூட வாராதிருந்ததனால் சிகை தாறுமாறாகக் கலைந்து கிடந்தது. இத்தனை இளம் பிராயத்தில் இச் சிறுமி உலகானுபவம் முற்றும் விசன ரூபமாயறிந்து கலங்க நேரிட்டதை எண்ணிக் கேசவன் மனந்தாங்காது வருந்துகிறான். “பரிமளா! பரிமளா! நான் இங்கு இப்பொழுது எதற்கு வந்தேன், எவ்விதம் முடிந்தது. ஐயோ! என் மனத்தில் என்னரிய தாயாரையும், சகோதரிகளையும் எண்ணிப் புலம்பிக் கொண்டிருந்தேன். நேற்றிரவு கண்ட கனவினால் இன்று முற்றும் விசனக் கடலில் மூழ்கினேன். என் மனத்தின் துயரத்திற்கு ஓர் ஆறுதல் செய்து கொள்ளும் பொருட்டு இங்கு வந்தால் உனது இனிய சங்கீதத்தையும், இன்ப மொழிகளையும் கேட்டு மகிழலாம் என்ற எண்ணத்துடன் வந்தேன். வந்த விடத்திலோ எனது வேதனையை விடப் பதின் மடங்கு அதிகரித்த மனக் கிலேசத்தை யடைந்து விட்டேன். என் அன்பான பரிமளா! எழுந்திரு; விசனத்தை விலக்கு.” என்று மிக்க வாஞ்சையோடு கூறினான்,
இதைக் கேட்ட பரிமனா, தலை நிமிர்ந்து கண்ணில் தாரை பெருகியவாறு, “நண்பரே! நான் எவ்விதமான தென்பைக் கொண்டு மனந் தேறுவேன்? இனி எனக்கு மகிழ்ச்சி என்பது உண்டா! என்னுடைய இப்போதிய மன நிலைமையில் என் வாழ்க்கையே முறிந்து விட்டதாயும், நான் நடைச் சவமாகி விட்டதாயும் என்னை யறியாது யாதோ சொல்லுகின்றது, என் விதியே எனக்கு இவ்விதம் சொல்லுகின்றதோ, அன்றி எனது முடிவைக் கடவுள் தான் சொல்லுகி றாரோ தெரியவில்லை. நான் கேவலம் ஓர் நாடக மாது என்றும், கூத்தாடி என்றும் பெயர் வாங்கி இனி பூமியில் இருப்பதைவிட மாண்டு மடிவது எனக்கு மெத்த சந்தோஷமாகத் தோன்றுகின்றது.” என்று கூறி முடிப்பதற்குள் கேசவன் இடை மறுத்து “ஹா! பரிமளா! என்ன சொன்னாய்!…. இத்தனை இளம் பிராயத்தில் உனக்கு இத்தகைய பார யோசனையும், பார புத்தியும் எவ்விதம் உண்டாகியது? வேண்டாம். இத்தகைய விபரீத சித்தம் வேண்டாம், நீயோ புத்தியறியாத சிறுமி, உனது குழந்தைப் பருவத்தில் நீ அனேகம் வினையாட்டுக்கள் விளையாடியதாக எண்ணு. இதை நீ விபரீதமாக நினைத்தல் கூடாது. உன் விருப்பப்படி நீ இந்த நாடகத்திலிருந்து விலகி விடு, அதற்கு மேல் உன்னுடைய தாயாரும் நமது முதலாளியும் சொல்லுவது போலக் கேட்டு நடந்து கொள், பரிமளா! பொறாமையும், காமமும் நிறைந்த இக் கடிதங்களை மட்டும் நம்பி உன் மனத்தைப் பாழடித்துக் கொள்ளாதே. இவைகளைக் குப்பைக்குச் சமமாய் உதைத்துத் தள்ளு, இந்த சனியன் பிடித்த வார்த்தைகள் மறையட்டும். பரிமளா! உன் மனம் சற்று தேறும் பொருட்டு கடற்கரைக்கு எஜமானருடன் சென்று வரலாம்; வருகிறாயா?” என்றான்.
இது கேட்ட வனிதை “என் மனம் மகிழ்வதற்குக் கடலில் நான் கலக்க வேண்டும். அன்றி எனக்கு அக் கடலின் அலைகளைப் போன்ற சந்தோஷம் பொங்க வேண்டிய மார்க்கத்தைக் கடவுள் அளிக்க வேண்டும். இவ்விரண்டு மன்னியில் வேறு வகையில் எனக்குச் சந்தோஷமில்லை. நண்பரே! என் பிறவி இவ்வித மாகுமென்று நான் கனவிலும் கருதவில்லை.” என்றாள்.
கேசவன்:- பரிமளா! நீ சொல்வது உனக்குள்ள விசனத்தினால்; அதன் நன்மை தீமை நீ யறியவில்லை. உயிர் உன் ஸ்வாதீனமன்று, அவன் பிறப்பித்தான்; அவனே அழைத்துக் கொள்ளுகிறான். நீ முயற்சித்தாலும் உன்னால் எக் காரியமும் நடத்திவிட முடியாது, தற்கொலை எண்ணத்தை விட்டு விடு.” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கையில் பரிமளாவின் சகோதரி ஒடி வந்து ”அக்கா! இந்த அறையின் ஜன்னல் கதவருகில் வீதிப் பக்கத்தில் யாரோ ஒருவன் நின்று நீங்கள் பேசுவதை எல்லாம் ஒட்டுக் கேட்கிறான். அதை நான் இப்போதுதான் கவனித்தேன். அவன் என்னைப் பார்த்து “குழந்தை! இங்கே வா!” என்று கூப்பிட்டான்; நான் போனேன். என் கையில் ஒரு பொட்டணத்தைக் கொடுத்து இதைச் சாப்பிடு. உன் சகோதரியினிடத்தில் நான் பேச வேண்டும். அதற்கு எப்போது சமயம் கிடைக்கும். அதை எனக்குத் தெரிவித்தால் நான் உனக்கு இன்னும் ரூபாய் கூடத் தருவேன்” என்று கேட்டான். இது கேட்ட எனக்கு ஏதோ ஒரு மாதிரியாகி விட்டது. அதனால்தான் “நான் இதோ வருகிறேன்” என்று கூறி விட்டு ஒடி வந்தேன். அதோ பார்; ஜன்னலின் பக்கம் அவன் இருக்கிறான்” என்றாள்.
இவ்வதிசயமான சம்பவத்தைக் கேட்ட இருவரும் நெடுக்கலுற்று, ஆச்சரிய-மடைந்து விட்டார்கள். ஏற்கெனவே இருந்த கலக்கத்தோடு இச் செய்தியும் கூடப் புகுந்து கொண்டதால் இன்ன செய்வதென்பதை யறியாது நிமிட நேரம் தத்தளித்தார்கள். உடனே கேசவனுக்கு ஓர் யோசனை தோன்றியது. அதாவது பரிமளாவின் சகோதரியை அழைத்து ‘அம்மா! நீ வீதியில் சென்று அந்த ஆசாமியைக் கண்டு “இன்று இரவு 9 மணிக்கு வந்தால் என் சகோதரியைப் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு வா” என்றான்.
பரிமள:- ஏன்! தாங்கள் எதற்காக இவ்விதம் சொல்கிறீர்கள்? எனக்கு மிக்க பயமாக விருக்கிறதே! அவன் ஏன் இங்கு வந்து என்னைக் காண வேண்டும். எனக்கு விளங்க வில்லையே!
கேசவன்:- பரிமளா! பயப்படாதே! என்னுடைய வார்த்தையைப் பூர்ணமாக நம்பு! ஒரே உறுதியாயும் கடைசி வார்த்தையாயும் நான் சொல்கிறேன். என்னுடைய உயிர் நீங்கிய பின்னரும் என் சவங்கூட உன்னை மறக்க முடியாது. என்னாவியைக் கொடுத்தேனும் உன்னைக் காப்பாற்ற நான் முயற்சி செய்வேன். உன் கண்கள் நீரைக் கக்கவும், மனம் விசனத்திலாழவும், தேகம் மெலிந்து வாட வும், முகம் சோர்ந்து வதங்கவும் நான் ஒரு போதும் பார்த்துச் சகிக்க மாட்டேன். என் மனத்தின் உண்மையை நீ அறிந்திருப்பினும் சரி; அறியாதிருப்பினும் சரி கடவுளறிய நான் உனக்கு என்னாலான உதவியைச் செய்து காப்பாற்ற ஒரு போதும் பின்னடையேன், பரிமளா ! நீ பயப்படாதே. நான் ஏதோ காரணமாகத் தான் சொல்கிறேன்.” என்று நயமாகக் கூறினான்.
பரிமளா ஏதும் பதில் பேசவில்லை. உடனே சகுந்தலா வீதியில் சென்று அந்த மனிதனிடத்தில் கேசவன் சொல்லியது போலச் சொல்லி விட்டாள். அம் மனிதனும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு அவ்விடம் விட்டுச் சென்றான். பிறகு கேசவன் “பரிமளா! நீ என்னுடன் சற்று எஜமானர் வீட்டிற்கு வருகிறாயா! அன்றி நான் மட்டும் சென்று வாட்டுமா?” என்றான். பரிமளா தானும் வருவதாகத் தெரிவித்தாள். அதன் பிறகு இருவரும் வண்டியிலமர்ந்து முதலாளியின் வீட்டிற்குச் சென்றார்கள்.
இவ்விருவரையும் கண்ட முதலாளி மிக்க ஆச்சரியமடைந்து “என்ன பரிமளா! கேசவா! இருவரும் ஒன்றாக எங்கே வந்தீர்கள்? விஷயம் என்ன! உட்காருங்கள்.” என்று அன்போடு கூறினார். உடனே இருவரும் நமஸ்காரம் செய்து விட்டு உட்கார்ந்தார்கள்.
கேசவன்:- தந்தையே! எங்களிருவருடைய போஷகராகிய நீங்கள் இருக்கையில் எங்களுக்கு ஒரு விதமான குறைவு மில்லை. இன்று சற்று முன்னர் இப்படி நடந்தது. நான் இப்படிச் சொல்லியனுப்பினேன்- என்று நடந்த விஷயங்களை எல்லாம் கூறினான்.
இது கேட்ட பொன்னுசாமி ஆச்சரிய மடைந்து “அப்படியா! அந்த ஆசாமி யார் தெரியுமா! அவனை இன்னாரென்று காண முடிய வில்லையா! சரி; இருக்கட்டும்.. என்று சில விஷயங்களை அவ்விருவருக்கும் சொல்லி விட்டு அவர்களுடன் தானும் புறப்பட்டுப் பரிமளாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அனேக ஏற்பாடுகள் ஆயின.
இரவு மணி ஒன்பது அடித்தது, பரிமளா தன்னறையில் உட்கார்ந்திருந்தாள். அப்போது ஒரு மாது முக்காடிட்டுக்கொண்டு பரிமளவல்லியின் அறையில் நுழைந்தாள். அவளைப் பார்க்கும் போதே பரிமளாவின் மனம் ஆச்சரியமுற்று, திப்பிரமை யடைந்தது.

வை. மு. கோதைநாயகி அம்மாள்/பரிமள கேசவன்(துப்பறியும் நாவல்) – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)