எஸ் வி வேணுகோபாலன்/கழித்துக் கட்டுதல்

வெகு நேரம்
பேசியும்
பேரம் படியாமல்
இரண்டாவது நபரும்
அகன்று போனபின்
எங்கிருந்தோ வந்த
மூன்றாமவர்
பேச விடாது
வேகப் படுத்தி
அவர்
சொன்ன பேரத்திற்குப் படிய வைத்து
ஆட்களைக்
கொண்டு வந்து
இறக்கி விட்டார்
அதைவிட வேகமாக

அடுத்த வீடு
பின் வீடு
அக்கம் பக்கம்
போய்ச் சொல்லி வந்தாயிற்று

அதற்குள்
ஓசை கேட்கத் தொடங்கி விட்டது
ரம்பம் வைத்து அறுக்கும் ஓசை
கயிற்றைக் கட்டி
இழுக்கும் ஓசை
கனத்த கிளைகளில்
சிணுங்கிக் குலுங்கிக்
கதறும் இலைகளின் தழைகளின் ஓசை
விறகுக்காய்த் தரிக்கும்
கட்டைகள் ஓசை

இழுத்துப் போய்க்
கொட்டி நிரப்புகின்றனர்
வாசல் வெளியெங்கும்
பெரிய
மாமரத்தின் நாடி நரம்புகள்
எட்டுத் திக்கிலிருந்தும்
கழித்துப் போட்டவற்றை

இது காறும் ஊடுருவிக் கொண்டு
வந்த சூரியக் கதிர்
இப்போது
நேரெதிர் வந்து நின்று
சுட்டபடி கேட்கிறது

உண்மை தான்
பதில் இல்லை என்னிடம்

அண்டை அயலில்
எல்லாம்
சொல்லிப் பெற்ற அனுமதி
வாங்க விட்டுப் போயிற்று
மாமரத்துச் சொந்த பந்தங்களிடம்

காத்திருக்கிறேன்
காலையில் வந்து தேடிக் குழம்பிச்
சிதறி விலகிப் போக இருக்கும்
பறவைகளிடத்தும்
அணில்களிடத்தும்
மன்னிப்பு கேட்க!

7 Comments on “எஸ் வி வேணுகோபாலன்/கழித்துக் கட்டுதல்”

    1. நிகழ்வை கண்முன் நிறுத்தி விட்டார். இருபது நாட்கள் முன்பு எங்கள் குடியிருப்பில் நடந்தது இதே

  1. உண்மை, நகர வாழ்க்கையில் மரங்களில் இருந்து விழும் இலைகளும், பறவைகளின் எச்சமும் சி பல பிரச்னைகளை கொண்டு வருகிறது. நல்லதுக்கு வராத சக மனிதர்கள் மரத்தை வெட்ட வேண்டும் எனில் உடனே கூடி வெட்ட வேண்டும் என்கிறார்கள். என் வீட்டிலிருந்த மரத்தை வெட்ட வேண்டிய நிகழ்வு கண் முன்னே வருகிறது

  2. அணில்கள் பறவைகள்
    மட்டுமா…நித்தம்
    இளைப்பாற ஒதுங்கும்
    ஐஸ் கிரீம் வண்டிக்காரனும்
    தேடுவான் மாமரத்து நிழலை..

Comments are closed.