வருட இறுதி
இரண்டிற்குப் பதிலாக மூன்று
என்பதன் குறியீட்டு விபரமோ
ஒரு பருவம் இறக்கும்போது
இன்னொன்று உதயமாகிறது
என்ற கரடுமுரடான உருவகமோ
வானியல் செயல்பாடு ஒன்றின்
நிறைவு என்பதோ அல்லாமல்
இந்த இரவின் மேட்டுநிலம் என்பது நம்மைக்
குழப்பி, குறைத்து மதிப்பிட்டு
மணியின் சீர்படுத்த இயலாத
பன்னிரெண்டு அடிகளுக்கு நம்மைக்
காத்திருக்க வைத்திருக்கிறது.
உண்மையான காரணம்
காலமென்ற புதிரைப் பற்றிய
நமது இருளார்ந்த எங்கும் வியாபித்துள்ள சந்தேகம்.
நாம் ஹெராக்கிளிட்டஸின் ஆற்றில்
துளிகள்தான் என்றாலும்
நம் சாத்தியங்கள் முடிவிலாதவை
நம்மில் உள்ள ஏதோ ஒன்று நம்மை
தொடர்ந்து நீடித்திருக்க அனுமதிக்கிறது
அது என்றுமே அசைவதில்லை
என்ற அற்புதத்தைப் பற்றிய
நம் பிரமிப்பு.
