
ஆசிரியர் கலைமகள்…………………
நவராத்திரியை ஒட்டி நேற்று கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருந்தேன். மன அமைதி கிடைத்தது!
பொதுவாக கல்வெட்டுக்கள் பற்றி எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. வீட்டுக்கு வந்ததும் சென்னை கல்வெட்டுகள் பற்றி ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். சென்னை கல்வெட்டுக்கள் பல சுவாரஸ்யமான செய்திகளைச் சொல்கின்றன! உதாரணத்திற்கு சில செய்திகளைக் கீழே தந்திருக்கிறேன்!!
ஒரு கிராமத்தில் வசிக்கும் வணிகர்கள் மற்ற இடங்களில் உள்ள கோயில்களுக்கு பணம் கொடுத்ததுள்ளார்கள். இது ஒரு சுவாரஸ்யமான செய்தியாகும். பல்லாவரம் அருகே உள்ள திரிசூலத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு பூந்தமல்லி வணிகர்கள் காணிக்கை வழங்கியதாகவும், பூந்தமல்லியைச் சேர்ந்த எண்ணெய் வியாபாரிகள் திருநீர் மலை கோயிலுக்கு ( குரோம்பேட்டைக்கு அருகில் உள்ள) நன்கொடை அளித்ததாகவும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.
முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன் போன்ற மிகவும் சக்திவாய்ந்த சோழ மன்னர்கள் கூட பரந்த அளவிலான அதிகாரங்களைக் கொண்டிருந்த கிராம சபைகளின் சுதந்திரத்தை குறைக்கவில்லை. வேளச்சேரி, கோயம்பேடு, மணலி, பூந்தமல்லி போன்ற இடங்களில் சபா, ஊர் ஆகியவை செயல்பட்டன. சபா, ஊர் என்றால் கிராம சபை என்றும் பொருள் கொள்ள வேண்டும். இது ஒரு கல்வெட்டு நுணுக்கம்!!
பல்லவர் காலத்தைச் சேர்ந்த மிகப் பழமையான கல்வெட்டு ஒன்று பல்லாவரம் குகைக் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டது.இது கி.பி 7 ஆம் நூற்றாண்டின் முதலாம் மகேந்திரவர்மன் பல்லவரின் ஆட்சிக்கு சொந்தமானது என அறிய முடிகிறது. முதலாம் மகேந்திரவர்மனின் பல பட்டங்களை கல்வெட்டு தெரிவிக்கிறது.
திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்ட பல்லவ கல்வெட்டு உள்ளது.கிபி 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான முதலாம் நரசிம்மவர்மனால் கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கோவிலில் திருமாலின் அவதாரங்களில் ஐந்து அவதாரங்கள் உள்ளன. அவையாவன நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர். இக்கோவில் சென்னை பழமையான கோயில்களில் ஒன்றாகும்.இதன் மூலம் இன்றைய சென்னை கி.பி 8 ஆம் நூற்றாண்டில் கூட பரந்த பல்லவப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்!!
