
அம்மா பூ விற்கும்
மரப்பலகை மேடையை
அடியில் போட்டனர்
நல்ல துணி வைக்கும்
ட்ரங்க் பெட்டி அடுத்த
படியானது
சிறிய கல்லா மரப்பெட்டி
மேல் தட்டாய் அமர்ந்துக்
கொண்டது
அப்பாவின் வேட்டியால்
மூடி கொலுப்படியை
தயார் செய்தனர்.
அம்மா வேலை செய்யும்
வீடுகளிலிருந்து வாங்கி
வந்த சிதிலமான
மண்பொம்மைகளுக்கு
அக்கா மருத்துவச்சி
ஆனாள்.
இலவசமாய் கிடைக்கும்
களிமண் புல் செடிகள்
இத்யாதியுடன் கவனமாய்
கொலுவை பூர்த்தி
செய்தனர்
அம்மா சுண்டல் செய்து தர
ஒப்புக்கொண்ட ஒரு நாளில்
பிள்ளைகள் தங்கள்
நண்பர்களை கொலு பார்க்க
அழைத்து வந்தனர்
சந்தோஷமான சூழல்
அழைத்தவர்கள்
அழைக்கப்பட்டவர்கள்
அம்மா உட்பட அனைவர்
முகத்திலும் புன்னகை.
அக்கா வந்த பிள்ளை
ஒன்றிடம் கேட்டாள்
உங்கள் வீட்டில் கொலு
வைக்கலையா என்று.
எங்கள் வீட்டில் இவ்வளவு
வசதி இல்லை
என்றது அந்த பிள்ளை.

அருமை யான கொலு. இஷ்டட்டப்பட்டு வைத்தது!
கவித்துவமா ன கொலு!
வசதி இல்லை மனதை
கஷ்ட்ட படுத்திவிட்டது!
அருமை!