
அம்மா வாங்கி வைத்த
நளினமான
கமகம சந்தன வாடை சுமந்த
மரப்பாச்சி பொம்மையொன்றை
நெஞ்சோடிருத்தி
அம்மையை நினைக்கும்
மகனொருத்தான
நான் புரட்டாசி மாசத்தில்
மனதில் அடுக்குகிறேன்
கொலு ஒன்றை..
ஐந்தே படிகளாக!
ஒவ்வொரு படியிலும்
ஒவ்வொரு படிப்பினைகள்…
முதற்படியில்
தெய்வீக இருப்பாய்
தெளிந்தோடும் காட்சிகள்..
இரண்டாம் படியில்
தேரோட்டம் சப்பரமென
இறை வீதி உலாக்கள்..
மூன்றாம் படியில்
மரங்கள் பூங்காக்களென
அசையாத மனங்கள்..
நான்காம் படியில்
விலங்குகள் பறவைகளென
ஆர்ப்பரிக்கா கூட்டங்கள்..
ஐந்தாம் படியில்
மரப்பாச்சி பொம்மைகளாய்
நானும் அவளும்..
இடையில் கொஞ்சம்
இடைவெளி விட்டு
ஒரு குட்டி மரப்பாச்சிக்காக
காத்திருக்கும் கதைப்பொழுதில்
இந்த கொலுவும்
சில நாட்கள் மட்டுமே!

Arumai! 🙇♀️👏🙏