
காந்தியடிகள் மௌன விரதம் இருப்பார் என்று படித்திருக்கிறேன். அதனால் எனக்கும் ஆசை வந்தது. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் காலை வேளையில் மௌன விரதம் இருப்பார் தொலைபேசி அழைப்புகளை ஏற்க மாட்டார். எனக்கும் மௌன விரதம் இருந்து சக்தியை சேமிக்க வேண்டும் என்ற பேராசை வந்தது. அதனால் மனைவியிடம் சொல்லிவிட்டு நான் தினமும் காலை 7 மணிக்கு ஓம் நமோ நாராயணா என்று சொல்லிவிட்டு மௌனத்தில் இருப்பேன் .அதன் பிறகு 8 மணிக்கு சில நிமிடங்கள் கழித்து அந்த மௌன விரதத்தை ஓம் நமோ நாராயணா என்று சொல்லி முடித்துக் கொள்வேன். ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில், அந்த ஒரு மணி நேரத்தில் நானும் மற்றவர்களும் படும் அவஸ்தை சொல்ல முடியாதது. பல சமயம் நான் சொல்ல வந்ததை நான் சரியாக சொல்லாமலோ அல்லது அவர்கள் சரியாக புரிந்து கொள்ள முடியாத போது எனக்கு அப்போதே ஓம் நமோ நாராயணா சொல்லிவிட வேண்டும் என்று தோன்றும் .
பேச்சுத் திறன் குறைந்தவர்கள் எப்படி தங்கள் கருத்துக்களை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பார்கள் என்ற சிக்கலையும் இந்த நாட்களில் நான் தெரிந்து கொண்டேன். நாம் சொல்ல நினைப்பது ஒன்று ஆனால் சொல்வது வேறாக இருப்பதை உணர்ந்தேன். நாம் ஒரு விஷயத்தை சொல்ல சில பொருள்களையோ படங்களையோ அல்லது அபிநயமோ செய்து காட்ட அது மிகச் சரியாக தவறாக புரிந்து கொள்ளப்படும் அதன் பிறகு இந்த மௌன பாஷையில் ஏற்படும் சம்பாஷனைகள் மிக சுவாரசியமானது அதிலும் பிருந்தா படும் பாடு பெரும்பாடு.
உதாரணத்துக்கு இன்று அவளிடம் ஒன்றை சொன்னேன். அது என்னவென்றால் நாங்கள் மே மாதம் திருப்பதி செல்லும் போது கோவிந்தராஜர் பெருமாள் கோவிலில் செருப்பை வெளியில் வைத்துவிட்டு தரிசனம் செய்யப் போனோம் நூற்றுக்கணக்கான செருப்புகள் ஓரிடத்திலிருந்தது. அவற்றோடு சேர்த்து போட வேண்டாமே என்று ஒரு ஓரத்தில் தனியாக போட்டிருந்தோம் .மிக நன்றாக தரிசனம் முடிந்து வெளியே வந்தவுடன் அதிர்ச்சி காத்திருந்தது.
.எங்கள் இருவர் செருப்பு மட்டும் காணவில்லை எங்கெங்கோ தேடிப் பார்த்தோம் கிடைக்கவில்லை வெறும் காலோடு நடந்து வந்து பீமாஸ் ஹோட்டலுக்கு எதிரில் இருந்த செருப்பு கடையில் சுமாரான செருப்பு ஒன்றை வாங்கிக் கொண்டோம். நான் வாங்கிய செருப்பு முன்பக்கத்தில் கட்டை விரலுக்கும் அடுத்தவிரலுக்கும் இடையில் இருக்கும் அந்த பிடிமானம் இல்லாதது. மொத்தமாக ஒரு வண்டியின் கூரை போல இருக்கும். நாம் அதில் காலை நுழைத்துக் கொண்டு செல்ல வேண்டும். இங்கு வந்தவுடன் சென்னையில் வேறொரு செருப்பு வாங்கிக் கொண்டேன். அதுதான் இப்பொழுது போட்டுக் கொண்டிருக்கிறேன் இந்த மௌன விரதத்தின் போது இன்று எனக்கு ஒரு விபரீத ஆசை வந்தது என்னவென்றால் நாம் இங்கேதானே நடக்கிறோம் அதனால் நாம் திருப்பதியில் வாங்கிய செருப்பை கொஞ்ச நாள் உபயோகப்படுத்தலாம் என்று நினைத்தேன். இதை நான் மௌன விரதம் முடிந்து சொல்லி இருக்கலாம் இருந்தாலும் ஒரு ஆர்வம். பிருந்தாவின் பழக்கம் பயன்படாத விஷயங்களை உடனே எடுத்து வேறொரு இடத்தில் வைத்துவிடுவாள். அதே போல என் செருப்பும் அவள் பார்வையில் பட்டு வேறொரு இடத்திற்கு சென்று விட்டது. அதனால் அவள் இடத்தில் செய்கையில் எதிரில் மாட்டி இருந்த வெங்கடாஜலபதி படத்தை காண்பித்து கீழே இருந்த நான் இப்பொழுது போட்டுக் கொண்டிருக்கும் செருப்பை காண்பித்து அது எங்கே? என்று கேட்டேன். அவள் செருப்பா இங்க இருக்கே என்றாள். நான் உடனே வேகமாக தலையாட்டி அது இல்லை அந்தப் படத்தில் இருக்கிற ஏழுமலையானை காட்டி கையை மேலே உயர்த்தி அந்த ஊரில் வாங்கிய செருப்பு என்று ஒரு காலை தூக்கி அந்த கூடு போல காண்பித்தேன் .அவளுக்கு அப்போதும் ஒன்றும் புரியவில்லை. அதற்குள் அவள் என் மாப்பிள்ளை சீனிவாசனின் செருப்பு இங்கே விட்டு விட்டாரா இல்லையே எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாள். உடனே நான் மறுபடியும் கையை ஆட்டி என் நெஞ்சில் விரலை வைத்து என்னுடையது என்று காட்டினேன். அவர் செருப்பு உங்களுக்கு எதுக்கு ? என்றாள் . நான் தலையில் அடித்துக் கொண்டு மறுபடியும் மெதுவாக இந்த படத்தை காண்பித்து மேலே என் கையை தூக்கி என் காலை காட்டி கேட்டவுடன் அவளுக்கு இப்பொழுது கொஞ்சம் புரிந்தது திருப்பதி யா என்றாள்
நான் வேகமாக தலையாட்டி அங்கே வாங்கின செருப்பு என்று காண்பித்தேன் சொன்னவுடன் புரிந்து கொண்டு அது எதற்கு இப்பொழுது அது சரியாகவே இருக்காது என்றாள் இல்லை கொஞ்ச நாள் போட்டுக் கொள்கிறேன் என்று மறுபடியும் சொல்லி ஒரு தடவை நடந்து காண்பித்து அவளிடம் புரிய வைத்தேன்.
அதன் பிறகு அவள் சமையலறையில் இருந்தாள். கீழே என் மைத்துனர் மகள் கல்லூரி போவதற்கு சாப்பிட வருவதாக சொல்லி இருந்தாள். அவள் அம்மா ஊரில் இல்லை. காலை ஏழே கால் மணிக்கு அவள் வரவில்லை இவள் என்னிடம் வந்து நேராக கேட்டிருந்தால் நான் தலையாட்டி இருப்பேன் அதற்கு பதில் உள்ளிருந்தே அவளுக்கு போன் பண்ணி விட்டீர்களா என்று கேட்டாள். நான் என்னையும் அறியாமல் மௌன விரதத்தை மறந்து உம் என்று சொல்லிவிட்டேன் அதன் பிறகு அதற்காக என் விரதத்தை ஒரு நிமிடம் நீட்டித்து இப்பொழுதுதான் முடித்தேன் இது எல்லாம் வீடியோவில் உங்களுக்கு மௌன விரதத்தின் போதே சொல்லலாம் என்று நினைத்தேன். நீங்களும் பிருந்தாவைப் போல குழம்பு வீர்கள் என்பதால் இதை ஒரு பதிவாகவே போடுகிறேன். நீங்களும் தினமும் ஒரு மணி நேரம் மௌன விரதம் இருந்து பாருங்கள் வாய் பேசாமல் இருந்தாலும் உதடுகள் அசையாமல் இருந்தாலும் மன உதடுகள் நம்மை அறியாமல் அசைந்து கொண்டே இருக்கும் அதிசயத்தை நீங்கள் உணர்வீர்கள் வாழ்க காந்தி

Arumai!👏🙏