பேய்களின் கதை..!

ஆர்க்கே

நடுநிசி தாண்டி அரைமணி ஆகியது.

இன்று இருக்கிற கூட்டத்தைப் பார்த்தாள்
பேயாதயாட்சி.(பேயாவதற்கு முன் அவள் நீலாயதாட்சியாக இருந்தாள்)சும்மா சொல்லக்கூடாது.
சாதாரண முருங்கைமர அடிவாரத்திற்கே அப்படியயொரு பேய்க்கூட்டம் கூடியிருந்தது. அப்படியானால் அடுத்த தெருவிலிருக்கும்
புளியமரத்தடியில் எத்தனை பேய்க்கூட்டமோ யார் கண்டது?
இன்று விடிவதற்குள் எப்படியாவது அந்த மனுஷக் காப்பு தாயத்தை ஜீவசமாதியாகி ஆவியாகிப்போன ஆவியோக பீதிசாமி ( அவருக்கு பூர்வாசிரம மானுடப்பிறவியில் வாத்ஸல்ய வாசனாமுனி என்று நாமதேயம்) கைகளால் கட்டிக்கொண்டு அவர்கைகளில் விழுந்து–கால்கள்தான் இல்லையே — ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளவேண்டும்.

வர வர இந்த மானிடர்கள் பேய்க்கு பயப்படா உலகை கட்டமைத்துக்கொண்டிருக்கிறார்கள். பாழடைந்த பங்களாக்கள் வாசலில் வேப்பிலைத் தோரணம் கட்டுவது, விளக்குமாறு டோர்மேட் போடுவது
வாஸ்து கண்ணாடி பதிப்பது என்று பேய் எதிர்ப்பு கட்சி வலுக்க ஆரம்பித்து விட்டது.
பில்லி சூனிய ஏவல் ஏற்பாட்டாளர்கள் சீன தேசம் போய்விட்டதாக கேள்வி.
பேயோட்டிகள் வாட்ஸப் குருப்களில் ஆன்லைன் கிளாஸோ கூகுள் ஜூம் மீட்டிலோ பேய் விரட்டு வகுப்புகள் துவக்கி விட்டனர்.  இதில் மீட்டிங் ஐடி என்று கொள்ளிவாய் பிசாசு பாஸ்வேர்ட் சொட்டுரத்தம் 123 என்று வேறு  தலையை விரித்து மனித ஆட்டம் ஆடுகிறார்கள்.

தன்முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் கூட இப்போதெல்லாம் மயானப்பக்கம் வருவதில்லை.  வந்தாலும் மௌனவிரத நாட்களில் வருகிறான்.  தோளில் அமர்ந்து கதை சொன்னாலும் பதில் வராது.  மெதுவாக அவன் மென்னியை இறுக்கினால் இருமுவான்.  அதையே பேச்சாகக் கொண்டு மீண்டும் முருங்கைமரத்தில் ஏறித் தொலைக்க வேண்டிய நாய்பிழைப்பு வாழ்க்கை.

பேய்க்கு பயப்படுவதைவிட நோய்க்கு பயப்படலாம் என மனிதர்கள் ரொம்பத்தான் துளிர்த்துப்போய்விட்டார்கள் . கேட்டால் கொரோனாவை கோடிகாட்டி பேசுகிறார்கள்.  இதில் சின்சினாட்டி யூனிவர்சிட்டி பேயாலஜி டிபார்ட்மெண்ட்டில் வாய் மாஸ்க் போல பேய் மாஸ்க் கண்டுபிடித்து விட்டார்கள்.
பேய் பார்த்தால் பயந்து ஓடிவிடுமாம்.
இதெல்லாம் எங்கே போய் நிற்கப்போகிறதோ தெரியவில்லை.
நிற்பதற்கு கால்கள் வேறு இல்லாத துர்பாக்கிய நிலைவேறு.

கோஸ்ட் பஸ்டர்ஸ் என்று ஒரு கூட்டம் பேய் மோப்பம் பிடித்து பேய்களை உறிஞ்சி குடுவைகளுக்குள் அடைத்துவிட்டு லாபத்தில் கொழுக்கின்றன.

பேய் வாழ்க்கை கொடுமையானது.  அதுவும் ஒற்றுமையே வெற்றிக்கு வழி எனும் தாரக மந்திரம் பேய்களுக்கு வெறும் மந்திரம்தான்.
உச்சாடான வகைக்கு ஒத்து வராது.
தனித்தனியாக வருவதே இந்த பேய்வாழ்க்கை என இந்த பாழாய்ப்போன சாத்தான்தான் தலைவிதியாய் எழுதி வைத்துவிட்டானே என்றைக்கோ.

“மோகினிப்பேயா? ரோட்டோரம் போய் நில்!.”
“கொள்ளிவாய் பிசாசா? தோட்டத்து பக்கம் போ! ” “ரத்தக்காட்டேரியா? காட்டுக்குள் போ. !”
“ஒற்றைக்கண் பேயா? சுடுகாட்டு வாசலில் நில்!” என்று ஏரியா பிரித்துவிட்டார்கள்.

இந்த போல்ட்டர்ஜிஸ்ட் பேய்கள் செய்யும் ஜன்னலை படார் என்று சாத்துவது  ஏசியை ஆஃப் செய்வது விளக்கை அணைப்பது போன்ற இன்ன பிற பயமூட்டி வேலைகளை அலெக்ஸா ஆப் பயமில்லாமல் அமேஸிங்காக செய்து
பேய்களுக்கு ஒரு அகௌரவத்தை தர ஆரம்பித்து விட்டது.

இப்படியே விட்டுக்கொண்டிருந்தால் இவ்வுலகில் பேய்களின் வாழ்வாதாரம்
பேயறைந்தாய்ப்போல் ஆகிவிடும்.
இந்த நேரத்தில்தான் பேய்களுக்குள் விழிப்புணர்வு அவசியம்.

ஏதோ பேய் செய்த புண்ணியம் இந்த பேய்க்காப்பாளர் வந்திருக்கிறார்.
காணிக்கை என்னகேட்டாலும் அந்த புளிய மரத்தின் கீழ் ஒளித்து வைத்திருக்கும் டிஜிட்டல் பிட்காயின் மூலம் ஒரே பாஸ்வேர்டில் “பேய்மெண்ட் ” பண்ணிவிடலாம். 

இனிமேல் பேய் விட்ட வழியே கதி.

ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலமாம்.

எங்கள் பேய்களுக்கு மட்டும் மறுபடி ஒரு விடிவுகாலம் வராதா என்ன?!.

வரிசையில் மிதந்து நின்றது அந்த கன்னிப்பேய்.

தாயத்து டப்பியிலிருந்து கற்றை கற்றையாய் மனித ரக்க்ஷை தாயத்துகளை பேய்க்கவச மந்திரத்தை சத்தமாய் உச்சரித்தபடி கட்டத்துவங்கினார் ஆவியோக பீதிசாமி.
அவரின் உதவியாளனான ஆலமர நீலிசாமி தன் பிட் காயின் உண்டியலை குலுக்கத் துவங்கினான்.

பேய்கள் வரிசை மூட நம்பிக்கை நோக்கி நகரத்துவங்கின.

23 11 2021 9 .00 a m

2 Comments on “பேய்களின் கதை..!”

  1. நாடி நரம்பு இரத்தம் சதை புத்தி எல்லாத்துலயும் பேய் வெறி ஏறிய ஒருத்தனாலதான் இப்படி ஒரு கதையை எழுத முடியும்

Comments are closed.