
குறுங் கதை-124
அலைபேசி சிணுங்க, கீதா அதை ஒத்தி எடுத்து பேசினாள். ராதிகா தான். “என்னடி! தீபாவளிக்கு ஜவுளி எடுத்தாச்சா?” என்று அக்கறையாக கேட்டதுமே, கீதா சுதாரித்துக் கொண்டாள்.” இன்னும் நவராத்திரியே முடியலை; அதற்குள் என்ன அவசரம்? நிதானமாக வாங்கலாம்” என்றாள். ” இல்லேடி! அப்புறம் பார்த்துக்கலாம் என்று தாமதமாகப் போனால்; கடையில் தேங்கி விட்ட சரக்கை நம் தலையில் கட்டி விடுவார்கள். நான் நேற்றே “நல்லி”க்கு விஜயம் செய்து இரண்டு பட்டுப் புடவைகள் வாங்கி வந்தேன். ஒன்றுதான் வாங்கலாம் என்று போனேன். ஆசை எவரை விட்டது? இரண்டு வாங்கி விட்டேன்.வித விதமாய் கலர்களில் நமக்கு ஏற்ற விலையில் வாங்க சென்னையில்தான் தீபாவளி ஷாப்பிங் பண்ணணும். ரவிக்கை வேறு தைத்து வாங்க வேண்டும். கடைசி நேரத்தில் கொடுத்தால்,டைலர் தாறுமாறாக தைத்து விடுவான்; என்னத்தை செய்ய? உனக்கு வாட்ஸ்அப்பில் எனது புடவைகளின் படம் அனுப்பியிருக்கிறேன்; பார்; எப்படி இருக்குன்னு சொல்.” என்று பெருமையும் பெருமகிழ்வுமாக பேசிக் கொண்டே போனாள். தோழிக்கு “தீபாவளி” ஜுரம் ஏறிவிட்டது; என்று புரிந்து கொண்டதில் புன்னகை மலர்ந்தது; அவள் அதரத்தில்.
” என்னடி! நீ ஒண்ணும் பேசாமல் இருக்கிறாய்? என்ன ஃப்ளான் வைச்சுருக்கே?” என்று கேட்டதற்கு, நான் புடவை வாங்கிட்டுச் சொல்கிறேன். உனக்கு சர்ப்ரைஸாக இருக்கட்டும்” என்று ஃபோனை வைத்தாள் கீதா.
தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன் திரும்பவும் ராதிகா ஃபோன் பண்ணி விட்டாள். “என்ன புடவை வாங்கினாய்? ரவிக்கை தைத்து வந்தாச்சா”
” ஆமாம்! நானும் பட்டுதான்; இந்த வருடம். ஃபோட்டோ அனுப்பறேன் ; பார்” என்று, மலர்விழி தான் எடுத்த பட்டுப்புடவையின் ஃபோட்டோவை கீதாவிற்கு அனுப்பியிருந்தாள். அதை கீதா ராதிகாவிற்கு அனுப்பி வைத்தாள்; சிறு கண் சிமிட்டலுடன்.
அன்று மாலை கீதாவின் கணவன், சுரேஷ் “தீபாவளி பர்ச்சேஸ் போய்விட்டு வரலாமா” என்று கேட்க; ” வேண்டாங்க! அண்ணன் வீட்டு விசேஷத்தில் கொடுத்த புடவையும் உங்கள் உடுப்பும் குழந்தை வாகிசா விற்கும் இருக்கிறது. வேறு உடுப்பு எதுவும் வாங்க வேண்டாம். கோஆப்டெக்ஸ் கடையில் இரண்டு பெட்ஷீட்டுகளும் போர்வைகளும் தலையணை உறைகளும் வாங்கலாம். இந்த தரம் தீபாவளி இப்படி போகட்டும். வீட்டில் நிறைவாக பலகாரம் செய்யலாம்; என்றாள் கீதா.
எப்படி இருக்கு? கீதா தீபாவளியை மட்டும் சமாளிக்கவில்லை; வெட்டிப் பெருமை பேசும் தன் தோழியையும் தான்.
வாங்கும் புடவையிலா இருக்கிறது; தீபாவளியின் மலர்வு?
