(11.10.2024 அன்று வெள்ளிக்கிழமை 100வது கூட்டம் விருட்சம் கதைஞர்கள் கூட்டம் நடத்த உள்ளோம். அதை ஒட்டி 100வது இதழ் விருட்சத்தில் (அச்சிதழில்) வெளிவந்த கதைகளை எடுத்துப் பேசுகிறோம்.)

ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளிக்கூடத்தில் ஏகக் கூட்டம் – இலவச மருத்துவ முகாம்!
‘பெரியவரே, அங்க போய் கியூவுல நில்லுங்க.’
இடது கையை நெற்றியில் சல்யூட் மாதிரி வைத்துக்கொண்டு, கண்கள் சுருக்கி, தடித்த கண்ணாடியின் வழியே பார்த்தது அந்தப் பெரிசு.
இடுப்பில் ஒரு குழந்தையுடன், வேகமாக வந்த ஒரு குண்டு பெண்மணி, பெரியவரைத் தள்ளியவாறு, கியூவில் முன்னால் நின்றுகெண்டாள் – முகத்தில் பெருமிதம்!
‘அப்பால போய், ஒண்ணாம் நெம்பர் மேசையில் உன் பேரு, வயிசு, அட்ரஸ§ பதிவு பண்ணிக்க. இரண்டாம் நெம்பர்ல எடை, உயரம், பீபி எல்லாம் செக் பண்ணி எழுதி வாங்கிக்கோ’ – பள்ளிக்கூட பியூன் அதிகாரம் தூள் பறந்தது.
கைத்தடியைத் தாங்கியவாறு தாத்தா கியூவின் கடைசீயில் போய் நின்று கொண்டார்.
இந்த ஏரியாவில் இது இரண்டாவது முகாம். போனவாரம் எதிர்க் கட்சி கவுன்சிலர் ஏற்பாடு. இந்த வாரம் ஆளும் கட்சி எம் எல் ஏ ஏற்பாடு – பொது ஜனத் தொண்டு.
ஒரு வாரமாகவே ஏரியாவே திமிலோகப்பட்டது. போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சுதந்திர தின இலவச மருத்துவ முகாம்! அருகிலிருந்த சின்ன மருத்துவமனை டாக்டர்களும், செவிலியர்களும், சிப்பந்திகளும் இந்த முகாமை நடத்துகின்றனர்.
எம் எல் ஏ வருவதனால், தெருக்கள் துப்புரவு செய்யப்பட்டு, ஓரங்களில் வெள்ளை பொடி தூவப்பட்டிருந்தன. கலர்க் காகிதத் தோரணங்கள், வருக வருக பேனர்கள் – தலைவர் மற்றும் கட்சிக்காரர்கள் போஸ்டர்களில், வாரிசுகளுடன் சிரித்துக்கொண்டிருந்தனர். ஒரு சில கரை வேட்டியினர் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.
‘நல்லா பாக்குறாங்களாம்பா ஃப்ரீயா மருந்தும் குடுக்குறாங்களாம்.’
‘ஆமாம், போன வார முகாம்லெயும் இப்படித்தான் – காபிகூடக் குடுத்தாங்க. ஒரே தண்ணிக் காபி.’
‘இவ்ளோ செய்யறதே அதிகம் – உனக்கு காபில குத்தம்.’
பொது மருத்துவத்தில் இரண்டு பேர், கண் மருத்துவம், பெண்மருத்துவம், இதய மருத்துவம் – கொஞ்சம் டெஸ்டுகள் என முகாமில் ஐந்தாறு மருத்துவர்கள.¢ நோயாளிகளைப் பார்த்து, இருக்கின்ற மருந்துகளைக் கொடுத்த வண்ணமிருந்தனர்.
‘ஆரம்பிக்கச் சொல்லுப்பா. வழியிலே ஒரு கொடியேற்றிட்டு நான் அங்கே வர்ரேன்,’ என்ற எம் எல் ஏவுக்காகக் காத்திருந்தனர் கரைவேட்டி லோகல் புள்ளிகள். பத்திரிகை, டிவி காரர்கள் ‘பிரஸ்’ பேட்ஜுடன் எம் எல் ஏ வுக்காகக் காத்திருந்தனர்.
ஏராளமான பொது மக்கள், தலை பிளக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், மருத்துவர்களையே முதன் முறையாகக் காண்பவர்கள் போல், முண்டியடித்துக் கொண்டிருந்தனர். ஈசிஜி, இரத்தத்தில் சர்க்கரை, மருந்து எல்லாம் இலவசம் என்றவுடன் கூட்டம் அதிகமானது.
பத்து, பதினைந்து வருட வியாதிகளுடன் – எல்லா இடங்களிலும் பார்த்து, இப்போது இந்த முகாமில் பரிபூரண குணமாகிவிடும் என்று நம்பி வருவோர் இருந்தனர் – இலவச நம்பிக்கை !
கையிலிருந்த சீட்டில் எல்லாம் எழுதிக்கொண்டு, வரிசையில் வந்து டாக்டர் முன் அமர்ந்தார் அந்தப் பெரியவர்.
‘என்ன கஷ்டம் பெரியவரே?’ – டாக்டர்.
‘எத்தன்னு சொல்ல? நீதான பட்சிக்கீற, நீயே பார்த்து சொல்லு.’ என்று பொக்கை வாய் திறந்து சிரித்தது!
சீட்டில் பெரியவருக்கு பீபி, சர்க்கரை, எடை எல்லாம் சரியாகத்தான் இருந்தது. டார்ச் வெளிச்சத்தில், கண், தொண்டை, நாக்கு எல்லாம் பார்த்து, பிறகு இதயம், நுரையீரல்.
‘சிகரெட்டா, பீடியா?’
‘அதெல்லாம் கெடையாது. ஒரு காலத்துல சுருட்டு பிடிப்பேன். இப்போ கைல துட்டு கெடையாது. எப்போவாவது ஒரு பீடி குடிக்கறதுதான், அதுவும் யாராச்சும் வாங்கிக்குடுத்தா!’
‘எல்லாம் நல்லா இருக்கு. இப்போ என்ன செய்யிது உடம்புக்கு?’
‘ஒண்ணியும் செய்யலெ கண்ணூ ஃப்ரீயா பாக்கறாங்களேன்னு வந்தேன். நெல்ல டானிக்கு இருந்தா ஒண்ணு குடு அது போதும்.’
டாக்டர் எழுதிக்கொடுக்க, பெரிசு அடுத்த கியூவுக்கு எழுந்து சென்றது.
இப்போது கூட்ட நெரிசல் கொஞ்சம் அதிகமானது. வாசலில் ஒரே தள்ளு முள்ளு – லோகல் எம் எல் ஏ பெரிய ‘கும்பிடு’ போட்டபடி, உள்ளே வந்தார். கூடவே நான்கைந்து எடுபிடிகள், சஃபாரி போட்ட இரண்டு ஆபீசர்கள், போட்டோகிராபர், இத்யாதி..
பெரிய புன்னகையுடன், எல்லோரையும் நலம் விசாரித்தபடி, எல்லா அறைகளுக்கும் சென்றார் எம் எல் ஏ. சென்ற இடமெல்லாம் போட்டோ க்ளிக்கியது. குத்து விளக்கேற்றி வைத்து, மைக் பிடித்து, ‘இந்திய சுதந்திரத் திருநாளை முன்னிட்டு, என் தொகுதி மக்களுக்கு இந்த மருத்துவ முகாமினை அர்ப்பணிக்கிறேன். நல்ல அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் வந்திருக்கிறார்கள். மருந்துகள் இலவசம். பெற்றுக்கொண்டு நலமாய் வாழ வாழ்த்துகிறேன்.’ என்றுகூறித் தன் கட்சி, ஆட்சி, கொள்கைகள் பற்றிப் பேசி, அடுத்த விழாவிற்குக் கிளம்பினார்.
தோள்மீது துண்டைச் சரி செய்தவாறே காரில் ஏறுமுன் வழியில் நின்றிருந்த பெரியவரைப் பார்த்து புன்னகைத்து, போட்டோ எடுத்துக்கொண்டார். ‘நல்லா பார்த்தாங்களா? என்னை யாருன்னு தெரியுதா?’ என்றார்.
பெரிசு முழித்தது. பொக்கை வாய் திறந்து சிரித்தது.
‘யாருன்னு தெரியலை-பார்த்ததில்லை,’ என்றது.
எடுபிடி ஒன்று ஓடி வந்து, பெரிசைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றது. சற்று தள்ளிச் சென்று, ‘யோவ், அவருதான்யா இந்த ஏரியா எம் எல் ஏ. தெரிலைன்றயே?’ என்றபடி அருகிலிருந்த பெஞ்சில் அழுந்த உட்கார வைத்துவிட்டுப் போனார்.
பெரியவர் அடுத்த ரூம் டாக்டரிடம் போய், ‘தோள்வலிக்கு எதுனா மருந்து இருந்தா குடு சார்,’ என்றார்.
கையில் கிடைத்த மாத்திரைகளைப் பார்த்தவாறு சென்ற ஒருத்தி, தெருமுனையில் சென்று, ‘டீ கஸ்தூரி, டாக்டருங்க பார்க்கறாங்களே, நீ போவலையா?’ என்றாள். கனகா தலையை ஆட்டிவிட்டு, ‘எனக்கு வேற வேலை இருக்குக்கா,’ என்றபடி வீட்டிற்குள் மறைந்தாள்.
‘நைனா எங்கடீ?’ வெளியிலிருந்து வந்த சம்முகம் கேட்டான்.
‘ம், சொம்மா குந்திக்கினு இருக்குதேன்னு, நான்தான் பக்கத்து ஸ்கூல் கேம்புக்கு அனுப்பி வெச்சேன.¢’
‘அவருக்கு ஜுரம், தலைவலின்னு ஒண்ணுமில்லையேடி.’
‘சும்மாத்தானே இருக்குது, ஒரு தபா போய் டாக்டர கண்டுக்கினு வரட்டுமேன்னுதான் – இலவசந்தானே.’
‘ஃப்ரீன்னா அனுப்பிடறதா? வயசான காலத்திலே கீளே வுளுந்து கிளுந்து வெச்சார்ன்னா?’
‘உளட்டுமே. இருந்து என்னாத்த கிளிக்குது இங்கெ?’ அனலாய் வந்து விழுந்தது வார்த்தைகள். ஆத்திரத்தில் அடிக்கக் கை ஓங்கியவன், பெரியவர் வருவதைப் பார்த்து, அமைதியானான்.
‘இந்தா கஸ்தூரி, காலு கொடையுதுன்னியே, ஒரு டானிக்கு மருந்து வாங்கியாந்தேன் – சோறு துண்ண பொறவு குடி.’ மருந்தை வைத்துவிட்டு, வாசலில் தன் இடத்துக்கு உட்காரப் போகும்போது, ‘அடுத்த வாரம் நாலு தெரு தள்ளி, துலுக்காணம்பேட்டையிலே ஒரு காம்ப் இருக்குதாம்,’ என்றபடியே துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டது அந்தப் பெரிசு.
தலைவலி, உடம்பு வலி, சொறிசிரங்கு, சர்க்கரை வியாதி, கான்சர் என்று இந்தக் கேம்பில் விடிவு இலவசமாக வந்துவிடும் என்று நம்பும் கூட்டம்; இந்தக் கூட்டத்தையே நம்பியிருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் நற்பணி மன்றங்கள்.
வண்டி தெரு திரும்புமுன், எம் எல் ஏ வுக்கு நெஞ்சும், முதுகும் ஒருசேர வலித்தது; வியர்வையில் சட்டை முழுதும் நனைந்து, பையிலிருந்த அட்டைத் தலைவர்களும் ஈரத்தில் ஊறிப்போயினர். ‘மார் வலிக்குதுடா’ என்று கண்கள் சொறுக அருகிருந்த எடுபிடியை அழுத்திப் பிடித்தார் எம் எல் ஏ. ‘என்னண்ணே செய்யிது,’ பதறிய எடுபிடி டிரைவரிடம், ‘வண்டியத் திருப்புண்ணே கேம்புக்குப் போகலாம். டாக்டருங்க இருக்காங்களே’ என்றது. எம் எல் ஏ கை இறுகியது. கண்கள் சிவக்க, எடுபிடியை முறைத்து, ‘பாவிங்களா, வண்டிய வேகமா மெயின் ரோட்டுல இருக்கிற பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு வுடுங்கடா. அங்கெதான் எல்லா வசதிகளோட, டாக்டர் வர்மா பாக்கறாரு.’
வண்டி தலை தெறிக்க, வடக்கு திசையில் சென்றது!
பேயோன்/அகலிகைப் படலம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “ஜெ.பாஸ்கரன்/ இலவசம்தானே!”
Comments are closed.